வெளியிடப்பட்ட நேரம்: 02:02 (27/07/2017)

கடைசி தொடர்பு:18:00 (30/06/2018)

அப்துல்கலாம் தேசிய நினைவகம் இன்று திறப்பு!

மறைந்த முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாமின் 2-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்தில், மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் சார்பில் அப்துல்கலாம் தேசிய நினைவகம்' கட்டப்பட்டுள்ளது. கலாமின் 2-ம் நினைவு தினமான இன்று  (ஜூலை 27), இதை பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைக்க உள்ளார். 
கலாமின் 2-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது வாழ்க்கையை சித்திரிக்கும் கண்காட்சி, கலாம் நினைவிடம் அருகே அமைக்கப்பட்டுள்ளது. நிலக்கரி ஓவியம், பென்சில் ஓவியம், காகித ஓவியம் எனப் பல தரப்பட்ட பொருள்களால் கலாமின் உருவம் சித்திரிக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. 

அப்துல்கலாம் மணல் சிற்பம்

 இதேபோல புதுச்சேரி 'அசிஸ்ட்' உலக சாதனை அமைப்பின் சார்பில், கலாமின் மணல் சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது. கலாம் தனது சகோதரர் முத்து முகம்மது மீரா மரைக்காயருடன் இருப்பது போலவும், பிரதமர் மோடிக்கு மரக்கன்றினை வழங்குவது போலவும் மணல் சிற்பங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும், தர்பூசணியில் செதுக்கப்பட்ட கலாமின் உருவமும் இங்கே காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது. 
 கலாமின் நினைவு நாளை ஒட்டி, அவருக்கு அஞ்சலிசெலுத்தும் விதமாக ராமேஸ்வரம் ஶ்ரீ பர்வதவர்த்தினி அம்மன் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் உச்சிப்புளி நேஷனல் அகாடமி பள்ளி மாணவ மாணவிகள் நூற்றுக்கணக்கானோர், கலாம் முக மாதிரிகளை மாட்டிக்கொண்டு, கலாம் நினைவிடம் வரை ஊர்வலமாகச் சென்றனர். 

கலாம் முகமூடி அணிந்து சென்ற மாணவிகள்

நேற்று  மாலை நடந்த விழாவில், கலாமின் மூத்த சகோதரர் முத்து முகம்மது மீரா மரைக்காயரின் 100-வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இதில், இஸ்ரோ இயக்குநர் கிரண்குமார், பி.ஜே.பி.மாநிலத் தலைவர் தமிழிசை, நடிகர் சங்கத் தலைவர் நாசர், இயக்குநர் வசந்த் உள்ளிட்ட ஏராளமான பிரமுகர்கள் பங்கேற்றனர்.