வீணடிக்கப்படும் எம்.பி நிதி - அவதிப்படும் பொதுமக்கள்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரத்தில், இந்து சமய அறநிலையத்துறைக்குட்பட்ட அடைக்கலம் காத்த அய்யனார் மற்றும் பத்திரகாளியம்மன் கோயில் உள்ளது. இங்கு, தரிசனத்துக்காக வெளிமாவட்டங்களிலிருந்தும் வெளிமாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். இவர்களின் வசதிக்காக கோயில் முன் உள்ள பேருந்து நிலையம், ஊராட்சி அலுவலகம் முன்பு உயர் மின்கோபுர விளக்கும், ஊராட்சி அலுவலகத்தில் குடிநீர் சுத்திகரிப்பு மையமும் அமைக்கத் திட்டமிடப்பட்டது. இதற்காக, சிவகங்கைத் தொகுதி நாடாளுமன்ற அ.தி.மு.க உறுப்பினர் செந்தில்நாதன்,  2014-15-ம் ஆண்டு தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நிதி ஒதுக்கினார். குடிநீர் சுத்திகரிப்பு மையம் ரூ. 6.75 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 13.2.2016ல் குடிநீர் சுத்திகரிப்பு மையம், உயர் மின்கோபுர விளக்குகள் (ரூ.11.60 லட்சம்) திறந்து வைக்கப்பட்டது. சுமார் ஒரு மாதம் செயல்பட்ட சுத்திகரிப்பு மையம், கடந்த ஓர் ஆண்டுக்கும்மேலாக செயல்படவில்லை. இதனால், சுகாதாரமான குடிநீருக்காக மக்கள் குடங்களுடனும், பக்தர்கள் குடிநீருக்காக அலையும் பரிதாப நிலையும் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து  மடப்புரத்தைச் சேர்ந்த பொதுமக்களிடம் பேசியபோது, "கடந்த 13.2.2016ல் குடிநீர் சுத்திகரிப்பு மையம், பேருந்து நிலையம், ஊராட்சி அலுவலகம் எதிரே உள்ள உயர் மின்கோபுர விளக்குகளை அ.தி.மு.க எம்.பி. திறந்துவைத்தார். தற்போது, பேருந்து  நிலையத்தில் உள்ள உயர் மின்கோபுர விளக்கு எரிகிறது. ஊராட்சி அலுவலகம் எதிரே உள்ள விளக்கு எரியவில்லை. ஆனால், சுத்திகரிப்பு மையம் ஒரு மாதம் மட்டும் செயல்பட்டது. கடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாக இயங்கவில்லை.

சுத்திகரிப்பு இயந்திரம்

ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புகார் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எம்.பி. ஒதுக்கிய நிதி, ரூ. 6.75 லட்சம் வீணடிக்கப்பட்டுள்ளது. இதைச் செயல்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும்," என்றார்.

இதுகுறித்து திருப்புவனம் யூனியன் அதிகாரிகள் சொல்லும்போது " ஏற்கெனவே உள்ள ஆழ்துளைக் கிணற்றிலிருந்து சுத்திகரிப்பு மையம் அமைக்கப்பட்டது. வறட்சி காரணமாக ஆழ்துளைக் கிணற்றில் நீர்மட்டம் குறைந்ததால் செயல்படாமல் உள்ளது. இதை, ஆட்சியரின் கவனத்துக்குக் கொண்டுசென்றுள்ளோம்," என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!