சட்டத்துக்குப் புறம்பாக மணல் ஏற்றிய லாரிகள் சிறைப்பிடிப்பு – திருச்சியில் பரபரப்பு | Unlawful sand lorries caught at Trichy

வெளியிடப்பட்ட நேரம்: 04:42 (27/07/2017)

கடைசி தொடர்பு:08:52 (27/07/2017)

சட்டத்துக்குப் புறம்பாக மணல் ஏற்றிய லாரிகள் சிறைப்பிடிப்பு – திருச்சியில் பரபரப்பு

திருச்சியில், அரசு அறிவித்த ஆன்லைன் முன்பதிவுகள் இல்லாமல், சட்டத்துக்குப் புறம்பாக மணல் கொள்ளையில் ஈடுபட்ட லாரிகள் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மணல்  லாரிகள்

திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சஞ்சீவி நகர் பகுதியில் சென்றுகொண்டிருந்த 10-க்கும் மேற்பட்ட மணல் டிப்பர் லாரிகளை, தமிழ்நாடு மணல் லாரி சம்மேளனத்தின் நிர்வாகிகள் விரட்டிப் பிடித்தனர். அடுத்து, சிறைபிடிக்கப்பட்ட அந்த லாரிகளை சர்வீஸ் சாலைகளுக்குக்கொண்டு சென்று நிறுத்திய அவர்கள், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சம்பவம் அறிந்து அங்கு வந்த போலீஸார், தமிழ்நாடு மணல் லாரி சம்மேளனத்தின் நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போதுதான், அந்த லாரிகளுக்கு உரிய பர்மிட் இல்லாமலும் அரசின் விதிமுறைகளை மீறி 3 யூனிட்டுக்குப் பதிலாக 8 யூனிட் மணல் அந்த லாரிகளில் ஏற்றப்பட்டிருப்பதும் தெரியவந்தது. அந்த லாரிகளில் மணல் அள்ளுவதற்கு உரிய ஆன்லைன் பதிவும் கிடையாது என்பதால், இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டது.

 

மணல்  லாரிகள்இதுகுறித்து திருச்சி ஒருங்கிணைந்த மாவட்ட மண் பாடி லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் சம்பந்த மூர்த்தி, “ஆளும் அரசியல்வாதிகளிடம் கையூட்டு பெற்றுக்கொண்டு, அதிகாரிகள் கைகோத்து இத்தகைய செயல்களில் ஈடுபடுவதுதான் இந்தத் தவறுக்கு முழு முதல் காரணம். முறைப்படி ஆன்லைனில் முன்பதிவு செய்த லாரிகள், சுமார் 12 நாள்கள் வரை காத்திருந்துதான் மணல் எடுக்க முடியும். அதிலும் 2 அல்லது 3 யூனிட் மணல்தான் எடுக்க முடியும். ஆனால் இந்த லாரிகள், மூன்று மடங்கு அதிகமான யூனிட் மணல் ஏற்றியுள்ளன. அதற்குரிய முன்பதிவு டோக்கன்கள் இல்லை. ஆனால், போலீஸார் கவர்மென்ட் வேலைகளுக்காக இந்தமணல் மொத்தமும் போவதாகச் சொல்கிறார்கள். அரசியல்வாதிகளுடன் அரசு அதிகாரிகள் கைகோத்துக்கொண்டு, அளவுக்கு அதிகமாக மணல் ஏற்றி அனுப்புவதாகத் தெரிகிறது. அதனால், லாரிகளை சிறைப்பிடித்து போராட்டம் நடத்தினோம். அரசு அதிகாரிகள்மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், தொடர் போராட்டம் நடத்துவோம்." என்றார்.

 

கடந்த சில நாள்களுக்கு முன்பு, திருச்சி மாவட்டம் தொட்டியம் பகுதியில் போலி நம்பர் பிளேட் ஒட்டி மணல் ஏற்றிவந்த மூன்று மணல் லாரிகள், போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது,திருச்சி பகுதியில் அதிர்ச்சியை உண்டாக்கியது. இந்நிலையில், சட்டவிரோதமாக மணல் கடத்திய லாரிகள் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம், பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.