”முடக்கப்பட்ட நெடுவாசல் ஃபேஸ்புக் பக்கத்தை மீட்க உதவிய விகடன் வாசகர்களுக்கு நன்றி!" - நெகிழும் நிமலன்

நெடுவாசல்


நெடுவாசல், கதிராமங்கலம் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவிப்பவர்களை அடக்க நினைக்கும் அரசு, அடுத்தடுத்து வழக்குகளைப் போட்டு வருகிறது. அந்தவகையில் நெடுவாசல், கதிராமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் நடக்கும் போராட்டங்கள் குறித்தும், மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் ஃபேஸ்புக் பக்கம் மூலம் அப்டேட் செய்துவந்த, புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலை அடுத்த நாடியம் கிராமத்தைச் சேர்ந்த நிமலன் என்பவரது ஃபேஸ்புக் கணக்கு கடந்த 20-ம் தேதி முடக்கப்பட்டது. இந்தக் கணக்கு விகடன் வாசகர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கொடுத்த அழுத்தத்தால் மீட்கப்பட்டுள்ளது. 

கடந்த பிப்ரவரி 14-ம் தேதி மத்திய அரசு, நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்கப்படும் என அறிவித்ததிலிருந்து. #Saveneduvasal எனும் ஹேஷ்டேகை உருவாக்கி, சமூக வலைத்தளங்களில் அதைப் பிரபலப்படுத்தியதுடன், தமிழகம் முழுவதும் நெடுவாசல் போராட்டத்தைக் கொண்டு செல்லவும், வெளிநாடுகளில் உள்ள தமிழர்களை நெடுவாசலுக்காகவும், தற்போது கதிராமங்கலம் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து பதிவுகளைப் போட்டு அதையே வைரலாக்கியவர் நிமலன். துபாயில் சாப்ட்வேர் துறையில் பணியாற்றும் இவர், சொந்த மண்ணைக் காப்பாற்ற தன்னோடு பணியாற்றும் நண்பர்களுடன் இணைந்து நெடுவாசல் பிரச்னைகளை முன்னெடுத்தார்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய அவர், நிமலன் “நெடுவாசலில் இருந்து 10 கிலோமீட்டர் தூரத்தில்தான் எங்கள் ஊர் நாடியம் உள்ளது. சொந்த நாட்டில் படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்கவில்லை. இங்குவந்து கஷ்டப்படுகிறோம். ஆனால், எந்த நாட்டில் வாழ்ந்தாலும் சொந்த ஊருதான் நமக்கு நிரந்தரம். அதையும் அழிக்க நினைக்கிறார்கள்.

கடந்த பிப்ரவரி 16-ம்தேதி ஹைட்ரோகார்பன் திட்டம் குறித்து மத்திய அரசு அறிவித்தது, இந்தத் திட்டம் அறிவித்த முதல் 10 நாள்கள், என்ன செய்வது எனத் தெரியாமல், பைத்தியம் பிடித்ததுபோல் சுற்றினேன். வேலை செய்ய முடியல. லீவு போட்டுட்டு வீட்டிலேயே முடங்கிக் கிடந்தேன். நண்பர்கள் எல்லோரிடமும் பேசினேன். அடுத்து, இதற்குத் தீர்வு கிடைக்காதா என ஏங்கியபடி #SAVENEDUVASAL எனும் ஹேஷ்டேகை உருவாக்கினேன்.

நண்பர்கள் எல்லோரும் இணைந்து, ஹைட்ரோ கார்பன் திட்டம், மீத்தேன் திட்டம் உள்ளிட்டவற்றின் பாதிப்பு குறித்து மக்களிடையே விழிப்பு உணர்வு உண்டாக்க ஏற்பாடு செய்தோம். அதன் தொடர்ச்சியாக முகநூல் பக்கம் மற்றும் சமூக வலைத்தளங்கள் மூலம் உலகம் முழுவதும் உள்ள எங்கள் பகுதி இளைஞர்களை ஒருங்கிணைத்து, நெடுவாசல் போராட்டத்துக்கான நிதி உதவி செய்து வருகின்றோம்.

அதோடு, நெடுவாசலில் நடந்த முதல் 22 நாள்கள் போராட்டம் மற்றும் அடுத்துக் கடந்த 100 நாள்களுக்கு மேலாக நடந்துவரும் போராட்டங்கள் என அனைத்து அப்டேட் செய்திகளையும் SAVE NEDUVASAL பக்கத்தில் தொடர்ச்சியாக வெளியிட்டோம். அதேபோல, கதிராமங்கலத்தில் பிரச்னை உண்டானதும் #SAVEKATHIRAMANGALAM எனும் ஹேஷ்டேகை உருவாக்கி, அதுகுறித்தும் அப்டேட்களை வெளியிட்டு வந்தோம்..

ஃபேஸ்புக்இந்தப் பக்கங்களில், கதிராமங்கலத்தில் காசு வாங்கிக்கொண்டு செயல்பட்ட தாசில்தார் ஒருவர் குறித்து 'கதிராமங்கலத்தின் கறுப்பு ஆடு' என்ற வீடியோ ஒன்றை வெளியிட்டோம். அப்போது சிலர் ரிப்போர்ட் கொடுத்தனர். 3 லட்சம் பேர் பார்த்து ஷேர் செய்யும் வீடியோவை 200 பேர் ரிப்போர்ட் செய்வதால் ஒன்றும் ஆகாது என்று நான் அதை விட்டுவிட்டேன். அதேபோல், மத்திய அமைச்சர். பொன்.ராதாகிருஷ்ணன், “நெடுவாசல் மக்கள் சம்மதம் இல்லாமல், இந்தத்திட்டத்தைச் செயல்படுத்த மாட்டோம்” என நெடுவாசலிலும், வெளியே, “இந்தியாவின் வளர்ச்சிக்காக ஒரு கிராமத்தைத் தியாகம் செய்யலாம்” என்று பேசியது, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “நெடுவாசல் பிரச்னைக்காக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவோம்” என முதலிலும்,பிறகு “நெடுவாசல் பிரச்னைக்காக சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்ற வேண்டிய அவசியமில்லை” எனப் பேசியது பல நிகழ்வுகளை தொகுத்து, “அன்று –இன்று” என வீடியோவாக வெளியிட்டோம். பல லட்சம் பார்வையாளர்கள் அதைச் சேர் செய்து, இந்தப் பிரச்னை குறித்து விழிப்பு உணர்வு ஏற்படுத்தி வந்தனர்.

இதற்காகப் பல மிரட்டல்கள் வந்தன. அதன் தொடர்ச்சியாக, நெடுவாசல் போராட்டத்தின் 100-வது நாளான கடந்த 20-ம் தேதி என்னுடைய ஃபேஸ்புக் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. அந்தக் கணக்கில்தான் சேவ் நெடுவாசல், சேவ் கதிராமங்கலம் பக்கங்கள் இருந்தன. இவற்றில்தான் தினசரி பல்வேறு தகவல்களைப் பதிந்து வந்தேன். அங்குள்ள கள நிலவரத்தை அப்டேட் செய்து வந்தேன். இவை முடக்கப்பட்டுள்ளதால் பெரும் சிரமத்துக்குள்ளானேன். என்ன செய்வது எனத் தெரியாமல் நண்பர்கள் தவித்தோம். தொடர்ச்சியாக எனது பக்கத்தை மீட்கப் பல வழிகளில் முயற்சி செய்தேன். முடியல. இந்நிலையில்தான் விகடன்.காம் இணையதளத்தில் இதுகுறித்து செய்தி வெளியானது. அடுத்து இதுகுறித்து விகடன் வாசகர்கள், சமூக வலைத்தள நண்பர்கள் பலரும் எனக்காக ஃபேஸ்புக் நிர்வாகத்துக்கு மெயில் அனுப்பினார்கள். தொடர்ந்து வந்த இப்படியான வேண்டுகோள் மெயிலை ஏற்றுக்கொண்ட ஃபேஸ்புக் நிர்வாகம். என்னிடம் அடையாளச் சான்றிதழ்கள் கேட்டது. அவற்றை அனுப்பி வைத்தோம். இப்போது எனது ஃபேஸ்புக் பக்கம் மீட்கப்பட்டுள்ளது.

இத்தனையும் விகடனால்தான் சாத்தியமானது. தொடர்ந்து நெடுவாசலுக்காக குரல் கொடுத்து வரும் விகடன் வாசகர்கள், சமூக வலைத்தள நண்பர்களுக்கு நன்றிகள் ” என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!