வெளியிடப்பட்ட நேரம்: 13:51 (27/07/2017)

கடைசி தொடர்பு:13:51 (27/07/2017)

இதனால்தான் புலிகள் மீதான தடை நீக்கப்பட்டது! விவரிக்கும் வைகோ

விடுதலைப் புலிகளின் ஆதரவாளர் என்றால், குண்டாஸில் தள்ளுகிறது தமிழக அரசு! ஐரோப்பிய ஒன்றிய தலைமை நீதிமன்றமோ தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடையையே நீக்கி தீர்ப்பு வழங்கியிருக்கிறது.

நெல்லையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின்போது, வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தத் தீர்ப்பை வரவேற்பதாகத் தெரிவித்த ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, ''விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடையை இந்திய அரசும் நீக்க வேண்டும்'' என்று கோரிக்கை வைத்தார். மேலும் அவர் கூறியதாவது,

பிரபாகரன் - புலிகள்

''இந்த நாள் உலகெங்கும் வாழுகிற தமிழீழ உணர்வாளர்களுக்கும், மானத் தமிழர்களுக்கும் உன்னதமான திருநாள். தமிழீழ விடுதலைப் புலிகளின் மீதான தடை தகர்ந்து நொறுங்கிய நாள். ஐரோப்பிய ஒன்றியத்தின் உச்ச நீதிமன்றம் இன்றைக்குத் தந்திருக்கிற தீர்ப்பு, 2014 அக்டோபர் 16-ம் தேதி ஜெனரல் கோர்ட் வழங்கிய தீர்ப்பு, விடுதலைப் புலிகளின் மீதான தடையை நீக்கியிருப்பதோடு, விடுதலைப் புலிகள் அமைப்பு ஆங்காங்கே வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் சேமித்து வைத்திருக்கும் நிதியைப் பயன்படுத்தக்கூடாது என்ற தடையை நீக்கியிருக்கிறது. 

உலகெங்கும் உள்ள தமிழர்களுக்கு, இன்றைக்கு நீதி கிடைத்திருக்கிறது. ஆனால், அதற்கு எவ்வளவு ஆண்டுகள் தாமதமாகியிருக்கின்றன என்பதையும் நாம் இந்த நேரத்திலே உணரவேண்டியுள்ளது.  2001-ம் ஆண்டு டிசம்பர் 27-ம் தேதி ஐரோப்பிய ஒன்றியம் பயங்கரவாதத்தைத் தடுப்பதற்காக, ஒரு திட்டத்தை வகுத்து, பாலஸ்தீனத்தின் காஜா பகுதியில் இன்றைக்கு ஆட்சி செய்துகொண்டிருக்கக்கூடிய ஹமாஸ் இயக்கத்தை தடை செய்தது. அதாவது சட்டத்தைக் கொண்டுவந்த அதே நாளிலேயே இந்தத் தடையை விதித்தது. 2006-ம் ஆண்டில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, கிரேட் பிரிட்டனுக்கு மிகப்பெரிய ராஜீய அழுத்தத்தைக் கொடுத்ததன் காரணமாக இங்கிலாந்து, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைத் தடை செய்தது. இதன் விளைவாக, தெற்கு ஆசிய கமிஷனிலும் இதுகுறித்து விசாரணை வந்தது. அப்போது இந்தக் கமிஷனின் தலைவராக ஒரு சிங்களவர் இருந்தார். அவரும் விடுதலைப் புலிகள் அமைப்பைத் தடை செய்ய பரிந்துரை செய்ய,  2006-ம் ஆண்டில் விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஐரோப்பிய ஒன்றியம் தடை செய்தது. 28 நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருக்கின்றன. இந்த 28 நாடுகள் தடை செய்துவிட்ட சூழ்நிலையிலேயே, அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளும் விடுதலைப் புலிகள் அமைப்பைத் தடை செய்துவிட்டன. இதற்கெல்லாம் மூலகாரணம் இந்தியா!

1991-க்குப் பிறகு இந்தத் தடையை வலியுறுத்தி அன்றைக்கு ஆட்சியில் இருந்த அ.தி.மு.க - காங்கிரஸ் கட்சிகள் கொண்டுவந்ததும், 2006-ல் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக்கூட்டணி அரசு, பிரிட்டனிலே இந்தத் தடையைக் கொண்டுவரக் காரணமாக இருந்ததுமான உண்மைகள் எல்லாம் இப்போது இந்தத் தீர்ப்பில் வெளிவந்திருக்கின்றன. 2014 அக்டோபர் 16-ல், விடுதலைப் புலிகளின் மீதான தடை நீங்கியபோது, அதற்காக வாதாடியவர் நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த விக்டர் கோபே. வேடிக்கை என்னவென்றால், விடுதலைப் புலிகள் அமைப்பைத் தடை செய்ய வேண்டும் என்று எந்த நெதர்லாந்து நினைக்கிறதோ அதே நாட்டைச் சேர்ந்த விக்டர் கோபே-தான் தடையை நீக்கவும் நமக்காக வாதாடுகிறார். அப்போது அவர் என்ன சொல்கிறார் என்றால், ''இந்தியா, கனடா போன்ற நாடுகளில் உள்ள செய்தி மற்றும் நடவடிக்கைகளை வைத்து ஒரு தடையை நாம் அங்கீகரிக்க முடியாது. மேலும், தடை செய்துள்ள இந்த நாடுகளின் நீதிமன்றங்களிலே அதற்காக வைக்கப்பட்டுள்ள காரணங்கள் என்பது, நமது ஐரோப்பிய யூனியன் நீதிமன்றங்கள் ஏற்றுக்கொள்ளும் வகையிலானதாக இல்லை'' என்கிறார். 

விடுதலைப் புலிகளைத் தடை செய்வதற்கான தீர்ப்பாயம் இந்தியாவில் அமைக்கப்பட்டது. அப்போது 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நான் போய் வாதாடிக்கொண்டிருந்தேன். 'இந்தியாவினுடைய இந்தத் தீர்ப்பாய தீர்ப்புகளை எல்லாம் வைத்து, இந்தத் தடையை நாம் நீட்டிப்பதற்கு சரியான ஆதாரங்களை ஐரோப்பிய யூனியன் கவுன்சில் இந்த நீதிமன்றத்தில் வைக்கவில்லை' என்றும் வாதாடியிருக்கிறார்கள்.

விடுதலைப் புலி கொடி

மேலும், '2009-ல் விடுதலைப் புலிகள் அமைப்பு இலங்கையில் தோற்கடிக்கப்பட்டுவிட்டது. அதன்பிறகு இந்த அமைப்பு அங்கே எந்தப் பயங்கரவாதச் செயலையும் செய்ததாக சரியான ஆதாரங்களை அந்நாட்டு அரசு இதுவரை முன்வைக்கவில்லை' என்றும் குறிப்பிட்டு வாதாடியிருக்கிறார்கள்.  

ஐரோப்பிய யூனியன் கவுன்சிலின் தலைமை வழக்கறிஞரே, ''விடுதலைப் புலிகள் மீதான தடையை நீட்டிப்பதற்கு நியாயமில்லை. மேலும், இந்த வழக்கில், புலிகள் தரப்பில் வாதாடிய வகையில் செலவான தொகையில் 3-ல் 2 பங்கை இங்கிலாந்தும், நெதர்லாந்தும் ஏற்றுக்கொள்ள வேண்டும்'' என்றும் சொல்லிவிட்டார். 2014-ம் ஆண்டிலேயே கூறப்பட்ட இந்தத் தீர்ப்பு இப்போது மறுபடியும் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. 
விடுதலைப் புலிகளுக்கு நாதியே இல்லை எனக் கவலைப்பட்டோம். ஆனால், நீதி இருக்கிறது. பாலஸ்தீனத்தின் காஜா பகுதியை ஆட்சி செய்துகொண்டிருக்கும் ஹமாஸ் அமைப்புக்கு எதிரான வழக்கில் இன்னும் அவர்களுக்கு நிவாரணம் கிடைக்கவில்லை. ஆனால், நமக்குக் கிடைத்திருக்கிறது. 

2006-ல் விதிக்கப்பட்ட தடை இப்போது விலக்கப்பட்டுவிட்டது. ஆனால், இடைப்பட்ட இந்தக் காலத்தில், உலக அரங்கில், ஐ.நா மன்றத்தில் நமக்குக் கிடைக்க வேண்டிய நீதி மறுக்கப்பட்டுவிட்டது; புதைக்கப்பட்டுவிட்டது. எனவே, 'எங்களுக்கு நீதி வேண்டும்' என்று மனித உரிமை கமிஷனிலும் ஐ.நா-விலும் பொதுச்சபையிலே வாதத்தைக் கொண்டுவருவதற்கு நமக்கு வாசல் திறக்கப்பட்டுவிட்டது. 

இதுவரையிலும் தீர்ப்பாயத்தில் போய், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக நான் வாதாடியபோதும் என்னுடைய வாதங்களை நிராகரித்து, தடையை நீட்டித்தார்கள். இனி இங்கேயும் தடை நிற்காது. ஏனெனில், 'இந்திய இறையாண்மைக்கு விரோதமாக, இந்தியாவின் ஒருபகுதியை தமிழீழத்தோடு சேர்த்து அமைக்கப்போகிறார்கள் விடுதலைப் புலிகள்' என்ற காரணத்தின் அடிப்படையில்தான் இந்திய அரசு தடை செய்தது. இது நொறுங்கிப்போகும். விடுதலைப் புலிகள் மீதான இந்தியத் தடையும் நாளை நொறுங்கிப் போகும். 

வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தத் தீர்ப்பின் தொடர்ச்சியாக ஈழத் தமிழர்களுக்கு விடிவு ஏற்பட்டுள்ளது. லட்சக்கணக்கான தமிழர்களைக் கொன்றொழித்ததை எல்லாம் மூடி மறைத்துவிடலாம் என்ற நினைப்பில் கொக்கரித்துக்கொண்டிருக்கிற ராஜபக்‌ஷே மற்றும் இன்றைய இலங்கையின் மைத்ரிபால சிறீசேன அரசு, இனப்படுகொலைக்குத் தனது முப்படைகளையும் கொடுத்து கூட்டுக் குற்றவாளியாக செயல்பட்ட இந்திய அரசு என அனைவரின் பித்தலாட்டமும் அம்பலமாகும். 

வைகோ

இன்னொரு முக்கியமான விஷயம்.... 1991-ல் நடைபெற்ற ஶ்ரீபெரும்புதூர் சம்பவமும் இந்த விவாதங்களில் வருகிறது. 'இது ஒரு தேசத்துக்கு எதிராக நடத்தப்பட்ட சம்பவம் அல்ல. தனிப்பட்ட ஒரு நபர் மீது நடத்தப்பட்ட படுகொலைச் சம்பவம். இதை ஓர் அடிப்படை ஆதாரமாகக் கொள்ளமுடியாது' என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் உச்சநீதிமன்றமான லக்ஸம்பர்க் (Luxembourg) கோர்ட்டே தீர்ப்பு வழங்கிவிட்டது.

இதில், எனது காயப்பட்ட மனதுக்கு ஓர் ஆறுதல் என்னவென்றால், 2011-ல் நடைபெற்ற ஐரோப்பிய யூனியன் கூட்டத்தில், இனப்படுகொலை குறித்து நான் ஆற்றிய உரையை அஃபிடவிட்டாகப் போட்டிருக்கிறார்கள். இது என் வாழ்நாளில், இந்தத் தமிழினத்துக்கு ஒரு துரும்பையாவது கிள்ளிப் போட்டிருக்கிறேனே என்று நினைக்க வைத்திருக்கிறது.  

'விடுதலைப் புலிகளின் மீதான இந்தியத் தடையை சரியான முடிவாக எடுத்துக்கொள்ளமுடியாது' என ஐரோப்பிய யூனியனே குறிப்பிட்டுவிட்டது. எனவே, மோடி தலைமையிலான மத்திய அரசு, விடுதலைப் புலிகள் மீதான தடையை இங்கேயும் நீக்கவேண்டும் என நான் வலியுறுத்துகிறேன். 

ஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட இனப்படுகொலை அநீதிக்கு எதிராக நீதி கிடைக்கவும் இந்தத் தீர்ப்பு புதிய வழிவகை செய்திருக்கிறது. 
பெண்களைப் பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கி கொன்று குவித்ததோடு, பாலச்சந்திரன் போன்ற குழந்தைகளைக்கூட ஈவிரக்கமின்றி சுட்டுக்கொன்ற கொடூர சிங்கள அரசு இனி தப்பமுடியாது என்ற நம்பிக்கையை இந்தத் தீர்ப்பு தந்திருக்கிறது''.


டிரெண்டிங் @ விகடன்