Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பத்தாம் வகுப்பு ஃபெயிலான ஓட்டுநரை கல்லூரிப் பேராசிரியராக்கிய அப்துல் கலாம்!

அப்துல் கலாம்

த்தாம் வகுப்பில் ஃபெயிலாகி வீட்டிலிருந்து ஓடிப்போன கதிரேசன், ராணுவத்தில் அடைக்கலமானார். அங்கு டிரைவர் வேலை. ஹைதராபாத்தில் உள்ள ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்துக்கு கதிரேசனை டிரான்ஸ்பர் செய்தனர். அங்கேதான், அப்துல்கலாம் பணிபுரிந்து கொண்டிருந்தார். கலாமுக்கு டிரைவராக கதிரேசனை அனுப்பியிருந்தனர். இவரும் ராமநாதபுரத்துக்காரர்தான். ஒரே ஊர்க்காரர்கள் என்பதால் 'ஊர்ப்பாசம்' ஒட்டிக்கொண்டது. ஒருநாள் காரில் போய்க் கொண்டிருந்தபோது, கலாம் கேட்டார். "கதிரேசன் என்ன படிச்சிருக்கீங்க?". "நான் எங்கே படிச்சேன் சாமி, பத்தாம் வகுப்பு ஃபெயிலானவன்' எனப் பதிலளித்தார். "மேலே ஏன் படிக்கல?" அடுத்த கேள்வியை கலாம் கேட்க, "ஐயா, எனக்கு இங்கிலீஷ் சுட்டுப்போட்டாலும் வராது. அந்தப்பாடத்திலதான் ஃபெயில்" என்றார் கதிரேசன்.

 டிரைவராக இருந்து பேராசிரியராகிய கலாம் ஓட்டுநர்

அடுத்த வார்த்தை கண்டிப்புத்தொனியில் கலாமிடம் இருந்து வந்தது. "அப்படியா, இனி நீ படிக்கிற. அந்தப் பாடத்தில பாஸாகுற" என்று கூறினார். சொன்னதோடு அவர் நிற்கவில்லை. ஓய்வுநேரங்களில் கதிரேசனுக்கு இங்கிலீஷ் சொல்லிக்கொடுக்கத் தொடங்கினார். இதைத்தொடர்ந்து பத்தாம் வகுப்பு இங்கிலீஷ் தேர்வு எழுதிய கதிரேசன், 44 மதிப்பெண் எடுத்துப் பாஸானார். "சரி, இத்தோட விட்டுடுவார்" என நினைத்துக்கொண்டு பாஸான விஷயத்தை கலாமிடம் சொன்னார் கதிரேசன். 'அப்படியான்னு' கேட்டுக்கொண்ட கலாம், "ப்ளஸ்-டூ படிப்பில் என்ன பிரிவு படிக்கப் போறே" என்று கேட்க கதிரேசன் 'திருதிருவென' முழித்திருக்கிறார். "என்ன அமைதியா நிக்கிற, என்ன பாடம் எடுக்கப்போறேன்னு கேட்டேன்" மீண்டும் கலாம் கேட்க, திக்கித்திணறி "வரலாறு படிக்கிறேன்" என கதிரேசன் பதில் சொல்லியிருக்கிறார்.

ப்ளஸ்-டூ முடித்த பின்னரும் கதிரேசனை கலாம் விட்டுவிடவில்லை. இளங்கலை, முதுகலை என அவரை மென்மேலும் படிக்கவைத்தார். அவரின் படிப்புக்கு ஆகும் செலவையும் கலாமே கொடுத்து விடுவாராம். 'படித்தது போதும்' என்று ஒருபோதும் கதிரேசன் ஓய்ந்துவிட கலாம் அனுமதித்தது இல்லை. கலாமுடன் பத்து வருடங்கள் கதிரேசன் இருந்தார். அதற்குள் கதிரேசனை ஒரு குட்டி அறிஞராகவே மாற்றியிருந்தார் கலாம். 1992-ம் ஆண்டு கலாம், பிரதமரின் அறிவியல் ஆலோசகராக நியமிக்கப்படவே, அவர் டெல்லிக்கு இடம் மாறினார். பின்னர், எப்போதாவது போனில் பேசிக் கொள்வார்கள்.

1998-ம் ஆண்டு கதிரேசன் ராணுவப் பணியில் இருந்து விடைபெற்றார். வாழ்க்கையில் எந்த முடிவெடுத்தாலும், கலாமிடம் ஆலோசனை கேட்பது கதிரேசனின் வழக்கம். ஓய்வுபெறுவது குறித்து கலாமிடம் கூற, 'டாக்டர் பட்டத்துக்கு விண்ணப்பியேன்' எனக் கூறியுள்ளார். கதிரேசன் வாழ்க்கையில் நினைத்துக்கூட பார்த்திராத டாக்டர் பட்டத்தை கலாமின் அந்த ஒரு வார்த்தைதான் பெற்றுத்தந்தது. அதே ஆண்டில், நெல்லை மனோன்மனியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் 'ஜமீன்தாரர் முறை' குறித்து ஆய்வுசெய்ய விண்ணப்பித்து, 2002-ம் ஆண்டு டாக்டர் பட்டமும் பெற்றார் கதிரேசன். அந்த ஆண்டில் அப்துல் கலாம் குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்று விட்டார். 

விருதுநகரில் நடந்த கல்லூரி விழா ஒன்றில் பங்கேற்க அப்துல்கலாம் வந்திருந்தார். அழைப்பிதழ் இருப்பவர்கள் மட்டுமே அரங்கினுள் அனுமதிக்கப்படுவார்கள். விழா நடக்கும் இடத்துக்குள் நுழைய ஒருவர் போராடிக் கொண்டிருந்தார். அவர் வேறு யாருமல்ல; கதிரேசன்தான். அவர், இப்போது பேராசிரியர் ஆகியிருந்தார். கடைசிவரை விழா அரங்கினுள் அவரால் செல்லமுடியவில்லை. ஆனால், "பொதுப்பணித்துறை விருந்தினர் மாளிகையில் கலாம் மதிய உணவு சாப்பிடுவார். அங்கு சென்றால் அவரைச் சந்திக்க முடியும்" என்னும் தகவல் கதிரேசனுக்குக் கிடைத்தது.

பொதுப்பணித்துறை மாளிகைக்கு ஓடிப்போனார். அங்கேயிருந்த மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு ஒருவரிடம் கலாமின் ஓட்டுநராகப் பணிபுரிந்த விஷயத்தைச்சொல்லி, அவரைப் பார்க்க வந்திருப்பதாகக் கூறி கதிரேசன் கெஞ்சினார். இரக்க மனது படைத்த அந்த அதிகாரி, கலாமுக்கு எப்படியோ தகவல் அளித்திருக்கிறார். "அவரை உடனே உள்ளே கூட்டிட்டு வாங்க" கலாமிடம் இருந்து உத்தரவு பறந்திருக்கிறது. லஞ்ச் டேபிளில் இருந்தவர், 'வாயேன், சாப்பிடலாம்' என்று அதே பழைய பாசத்துடன் அழைத்து, கதிரேசனை கலாம் வரவேற்றுள்ளார்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் முதல் அத்தனை உயர்அதிகாரிகளும் நின்று கொண்டிருக்க, நாட்டின் முதல் குடிமகன் இவரைச் சாப்பிட அழைத்தால் எப்படியிருக்கும்?. நெகிழ்ந்து போனார் கதிரேசன். ''உறவுகளை, நண்பர்களை எந்தக் காலத்திலும் கலாம் மறந்ததில்லை'' எனக்கூறும் கதிரேசன், தற்போது நெல்லையில் அரசுக் கல்லூரி ஒன்றில் கௌரவப் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

குடியரசுத் தலைவர் பதவியிலிருந்து கலாம் ஓய்வு பெற்றபின், 2011-ம் ஆண்டு இவரின் வீட்டுக்கு வந்து மதிய உணவு அருந்தி விட்டுச் சென்றிருக்கிறார். கதிரேசனின் மகன் ராகவன் மருத்துவம் படிக்கிறார். கலாம் வழியில் ஏராளமானோர்க்கு வழிகாட்டியாக இப்போது பம்பரமாக சுற்றிவருகிறார் கதிரேசன்!

அக்னிச் சிறகுகளின் குஞ்சுகள் அடங்கியா கிடக்கும்!?

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close