வெளியிடப்பட்ட நேரம்: 17:11 (27/07/2017)

கடைசி தொடர்பு:17:11 (27/07/2017)

சசிகலா - ரூபா மோதல் திரைப்படமாகிறது - 'குப்பி' ரமேஷ் இயக்குகிறார்

சசிகலாவுக்கு, சிறைத்துறை அதிகாரியாக இருந்த ரூபாவுக்கும் இடையே ஏற்பட்ட மோதலை மையமாகக் கொண்டு திரைப்படம் இயக்கும் வேலையில் இறங்கியுள்ளார் இயக்குநர் 'குப்பி' ரமேஷ்.

 

காவல்துறை அதிகாரி சத்தியநாராயணாவுக்கும் ரூபாவுக்கும் ஏற்பட்ட அதிகாரச் சண்டை மற்றும் பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவுக்கும் போலீஸ் அதிகாரி ரூபாவுக்கும் ஏற்பட்ட மோதல் சம்பவங்களை எல்லாம் கூர்ந்துக் கவனித்துவரும் திரைப்பட இயக்குநர் ஏ.எம்.ஆர்.ரமேஷ், சசிகலா, ரூபா இருவர் குறித்து மட்டுமல்ல பரப்பண சிறையில் நடந்த அத்துமீறல்கள் குறித்து திரைப்படமாக எடுக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார். ஏற்கெனவே ராஜீவ் காந்தியைக் குண்டு வைத்து படுகொலை செய்த சிவராசன், சுபா கும்பல் பெங்களூரில் தங்குவதற்கு வீடு வாடகைக்குப் பிடித்துக் கொடுத்த பிரமுகர், ராஜீவ் காந்தியைக் கொன்ற கொலையாளிகளைக் கண்டுபிடித்து, திட்டமிட்டு அவர்களைச் சுட்டுக்கொன்ற போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்ட சம்பவங்களை எல்லாம் 'குப்பி' என்கிற பெயரில் கன்னடத்திலும் தமிழிலும் திரைப்படமாக எடுத்து வெளியிட்டவர்.

அந்தப் படத்துக்குப் பிறகு தமிழ், கன்னட சினிமா உலகில் 'குப்பி' ரமேஷ் என்றே அழைக்கப்பட்டு வருகிறார். 'குப்பி' படத்தை அடுத்து சந்தன கடத்தல் வீரப்பன் கதையை 'வனயுத்தம்' என்கிற பெயரில் உருவாக்கினார். வீரப்பன் பற்றிய உண்மைத் தகவல்களைச் சேகரிப்பதற்காக சத்தியமங்கலம் காட்டுக்குச் சென்று அங்கே வீரப்பனோடு பழகியவர்களைப் பார்த்து, பேசி திரைக்கதையை உருவாக்கினார். அப்போது, 'என் கணவர் வீரப்பன் கதையை சினிமாவாக எடுக்கக் கூடாது?' என்று முத்துலட்சுமி போர்க்கொடி தூக்கினார்.  இறுதியாக அவரையும் சமாளித்து 'வனயுத்தம்' பெயரில் வீரப்பன் கதையை தமிழ், கன்னடம் இருமொழிகளிலும் வெளியிட்டார். அந்தப் படத்தில் வீரப்பனைக் காட்டில் கொன்ற போலீஸ் அதிகாரி விஜயகுமார் வேடத்தில் அர்ஜூன் நடித்திருந்தார். இப்போது ரூபா ஏற்கெனவே காவல்துறையில் சந்தித்த சவால்களையும் சம்பவங்களையும் சேகரிக்கும் பணியில் தீவிரமாகக் களமிறங்கி இருக்கிறார். அடுத்து சசிகலாவின் வாழ்வில் நிகழ்ந்த முக்கியமான விஷயங்களை அப்பல்லோ மருத்துவமனை நிகழ்வுகள் உட்பட அனைத்து தகவல்களையும் முக்கியமான அரசியல் புள்ளியின் வாயிலாகப் பேசிவருகிறார் 'குப்பி' ரமேஷ். விரையில் சசிகலா - ரூபா மோதலில் நாம் அறிந்திராத அதிர்ச்சிதரும் சம்பவங்களை எல்லாம் வெள்ளித்திரையில் வெளிக்கொண்டுவரும் வேலையில் பரபரப்பாக இறங்கி இருக்கிறார் 'குப்பி' ரமேஷ்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க