'ஸ்டார் ஓட்டலைவிட இது சூப்பரப்பா!' - தெருவோர ஆம்லெட்டுக்கு சிலாகித்த தினகரன்

 டி.டி.வி.தினகரன்

பெங்களூரில் சசிகலாவைப் பார்க்க அனுமதி கிடைக்காததால் காரில் சென்னைக்கு டி.டி.வி.தினகரன் திரும்பிவந்தார். அப்போது, ராணிப்பேட்டையில் சாலையோரக் கடையில் காரை நிறுத்தி அவர் ஆம்லெட், முட்டை தோசை சாப்பிட்ட சம்பவத்தை ஆச்சர்யத்துடன் பேசிகொள்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவுக்கு, விதிமுறைகளை மீறி சலுகைகள் வழங்கப்பட்டதாக ரூபா ஐ.பி.எஸ். குற்றம்சாட்டினார். இதையடுத்து, ரூபா மற்றும் சிறைத்துறை அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். சிறை விவகாரம் தொடர்பாக விசாரணை நடந்துவருகிறது.

இந்தச் சம்பவத்துக்குப் பிறகு சசிகலாவைச் சந்திக்க டி.டி.வி.தினகரன் பெங்களூரு சென்றார். அப்போது, அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், டி.டி.வி.தினகரனின் ஆதரவாளர்கள் சிறைத்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, நாம் வாக்குவாதத்தில் ஈடுபட்டால் சசிகலாவுக்குத்தான் தேவையில்லாத பிரச்னை ஏற்படும் என்று கூறிய டி.டி.வி.தினகரன், ஆதரவாளர்களை அமைதிப்படுத்தினார்.

இதையடுத்து, சசிகலாவைச் சந்திக்க முடியாத வருத்தத்தில் ஆதரவாளர்களுடன் டி.டி.வி.தினகரன் காரில் சென்னைக்குத் திரும்பினார். வரும் வழியில் வேலூர் மாவட்டம், ராணிப்பேட்டை பைபாஸ் சாலையில் உள்ள சாதாரணமான ஓட்டலில் காரை நிறுத்தி சாப்பிட்டதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

  சம்பவத்தை அப்படியே விவரித்தார் அவரது ஆதரவாளர்களில் ஒருவர். "சசிகலாவைச் சந்திக்க முடியாமல் மனவருத்தத்தில் டி.டி.வி.தினகரன் சென்னைக்குத் திரும்பி வந்தார். சிறைத்துறையினர் அனுமதி மறுத்தது, சசிகலாவுக்கு ஏற்பட்ட நிலைமை ஆகியவற்றை குறித்து தனக்கு நெருக்கமானவர்களிடம் போனில் பேசிக்கொண்டே வந்தார். அப்போது, வெற்றிவேல் எம்.எல்.ஏ., 'சின்னம்மா (சசிகலா) மீது தேவையில்லாத குற்றச்சாட்டுகள் சொல்லப்பட்டுள்ளன.

இரட்டை இலைச் சின்ன வழக்கில் நீங்கள் லஞ்சம் கொடுத்ததாகச் சொல்லி டெல்லி போலீஸார் உங்களை கைது செய்தனர். போலீஸரால் உங்கள் மீது குற்றப்பத்திரிகையைக் கூட தாக்கல் செய்யமுடியவில்லை. அதுபோலதான் சசிகலா மீதுள்ள குற்றச்சாட்டுக்களையும் நிரூபிக்க முடியாமல் போகும். நீங்கள் கவலைப்படாதீர்கள்' என்று ஆறுதல் கூறினார்.

இதையடுத்து டி.டி.வி.தினகரனிடம், 'நீங்கள் ஒன்றுமே சாப்பிடவில்லை. டீ மட்டுமாவது குடியுங்கள்' என்று வெற்றிவேல் எம்.எல்.ஏ. வற்புறுத்தினார். அப்போது மணி இரவு 8.53. அந்த சமயத்தில் கார், ராணிப்பேட்டை பைபாஸில் வந்துகொண்டிருந்தது. உடனே அருகில் உள்ள சாலையோரக் கடையில் காரை நிறுத்தச் சொன்னார் டி.டி.வி.தினகரன். காரைவிட்டு இறங்கிய டி.டிவி.தினகரன் அந்தச் சாதாரண ஓட்டலுக்குச் சென்றார். அப்போது, கடைக்காரர், 'சார்.. நீங்கள் காரில் உட்காருங்கள்.. உங்களுக்கு வேண்டியதை அங்கு வந்து கொடுக்கிறேன்' என்று தெரிவித்தார்.

உடனே, காருக்குள் ஏறி அமர்ந்த அவர், முட்டை தோசைக்கு ஆர்டர் கொடுத்துவிட்டு காத்திருந்தார். சில நிமிடங்களில் சுட, சுட முட்டை தோசை வந்தது. அதை ருசித்து சாப்பிட்ட அவர், 'நட்சத்திர ஒட்டல்களில்கூட இதுபோல சுவையான தோசை கிடைப்பதில்லை' என்று கூறினார். அடுத்து, ஆம்லெட் சாப்பிட்டுவிட்டு டீ குடித்தார். அவருடன் வெற்றிவேல் எம்.எல்.ஏ. உள்பட சிலர் மட்டுமே சாப்பிட்டனர். எங்களைப் பார்த்த டி.டி.வி.தினகரன், 'நீங்களும் சாப்பிடுங்கள். அதுவரை காத்திருக்கிறேன்' என்று சொன்னார். அதன்பிறகு சாப்பிட்டதற்குரிய பணத்தைக் கொடுத்துவிட்டு, ஓட்டல்காரரிடம் 'உணவு ருசியாக இருந்தது' என்று அவரைப் பாராட்டி விட்டு காரில் புறப்பட்டார். அப்போது, அந்தக் கடைக்காரர், 'உங்களைப் போன்ற வி.வி.ஐ.பி-க்கள் என்னுடைய ஓட்டலில் சாப்பிட்டதே எனக்குப் பெருமையாக இருக்கிறது' என்று பதில் கூறினார்"என்றார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!