வெளியிடப்பட்ட நேரம்: 17:52 (27/07/2017)

கடைசி தொடர்பு:17:52 (27/07/2017)

பிரதமர் மோடியைக் கண்டித்து பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகத்தில் நூதனப் போராட்டம்..!

பெரம்பலூர் மாவட்டத்தில் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து மாவட்ட ஆட்சியரிடம் மனுகொடுக்க வந்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் சமூக ஆர்வலர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.          

   

நடிகையைச் சந்திக்க நேரம் இருக்கும் மோடிக்கு விவசாயிகளைச் சந்திக்க நேரமில்லையா, தமிழக விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி பெரம்பலூர் ஆட்சியர் கார் முன்பு தொழுநோயாளி வேடம் அணிந்து போராடிய மக்கள் சேவை இயக்கத் தலைவரை கைது செய்துள்ளது காவல்துறை. 

 

இந்தப் போராட்டம் குறித்து தெரிவித்த சண்முகசுந்தரம், 'நடிகையைச் சந்திக்க நேரமிருக்கிறது; விவசாயிகளைச் சந்திக்க நேரமில்லையா. தமிழக விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரியும் டெல்லியில் போராட்டம் நடத்தும் தமிழக விவசாயிகளை மோடி சந்தித்து அவர்களது குறைகளைக் கேட்டறிய வேண்டும். 

   
டெல்டா பகுதிகளைப் பாலைவனமாக்கும் ஹைட்ரோகார்பன், ஷேல் கேஸ், மீத்தேன் திட்டங்களை நிறுத்த வேண்டும். அதுமட்டுமல்லாமல், ஓ.என்.ஜி.சி கதிராமங்கலத்தைவிட்டு வெளியேற வேண்டும். தமிழகத்தில் பெட்ரோ கெமிக்கல் மண்டலம் அமைக்கப்படக் கூடாது. 92,000 கோடி ரூபாய் செலவில் ஆய்வு என்ற பெயரில் இயற்கை வளங்களை அழிக்கும் இத்திட்டத்தை கொல்லைப்புற வழியாக நிறைவேற்றிட துடிக்கும் மத்திய, மாநில அரசின் இந்த முடிவை உடனடியாக கைவிட வேண்டும்.

தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரம் காத்திட மத்திய, மாநில அரசுகள் இயற்கை வளங்களை அழிக்காமல் மாற்று வழிகளில் சாண எரிவாயு, காய்கறி கழிவுகள், இயற்கையாகக் கிடைக்கும் சூரிய ஒளி, காற்று மூலம் சுற்றுப்புறச் சூழலைப் பாதிக்கா வண்ணம் திட்டத்தை தொலைநோக்குப் பார்வையில் நிறைவேற்ற அரசுகள் முன் வர வேண்டும்" என்று பேசினார்.