'விளைவுகளைச் சந்திக்க வேண்டியது வரும்!' - மு.க.ஸ்டாலின் கைதுக்குக் கொதிக்கும் திருநாவுக்கரசர்

தமிழக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் இன்று சேலத்தில் கைது செய்யப்பட்டார். இதையடுத்து பல்வேறு கட்சித் தலைவர்களும் இந்தக் கைது நடவடிக்கைக்குக் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கைது நடவடிக்கைக்குக் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

திருநாவுக்கரசர்

இது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் எஸ்.திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கை:

திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல்தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான சகோதரர் ஸ்டாலின் அவர்களை சேலம் மாவட்டத்தில் காவல்துறையினர் கைது செய்திருப்பதை தமிழக காங்கிரஸ் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

மனிதச் சங்கிலிப் போராட்டம் ஜனநாயக வரம்புகளுக்கு உட்பட்டதுதான். மனிதச் சங்கிலிப் போராட்டத்துக்குத் தடை விதித்திருப்பது முற்றிலும் ஜனநாயகத்துக்கு விரோதமான செயலாகும். அதுபோல் தி.மு.க சார்பில் தூர்வாரப்பட்ட குளத்தை மக்களுக்கு ஒப்படைக்க சென்ற ஸ்டாலின் அவர்களைக் காவல்துறையினர் தடுத்திருப்பதும் முற்றிலும் சட்டவிரோதமான செயலாகும். 

எடப்பாடி பழனிசாமி அவர்கள் தலைமையில் உள்ள தமிழக அரசு இப்படி சட்டவிரோதமாகவும் ஜனநாயக விரோதமாகவும் காவல்துறையினரைப் பயன்படுத்தி, மக்களுக்கு ஆதரவாக, குறிப்பாக மாணவர்களுக்கு ஆதரவான அரசியல் கட்சித் தலைவர்களின் போராட்டத்தை ஒடுக்க நினைப்பது முற்றிலும் தவறான செயலாகும். ஸ்டாலின் அவர்களையும் அவரோடு கைது செய்யப்பட்டிருக்கும் அனைவரையும் எந்தவித நிபந்தனையும் இன்றி உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் சார்பில் கேட்டுக் கொள்வதோடு, இதுபோன்ற ஜனநாயக விரோத, சட்டவிரோத செயல்களில் தமிழக அரசு தொடர்ந்து செயல்பட்டால் இதற்கான விளைவுகளை இந்த அரசு சந்திக்க வேண்டியிருக்கும் என எச்சரிக்கிறேன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!