வெளியிடப்பட்ட நேரம்: 20:18 (27/07/2017)

கடைசி தொடர்பு:20:34 (27/07/2017)

''சொற்பொழிவில் கிடைத்த வருமானத்தால் நிமிர்ந்தது நிழற்குடை!'' - 8 வயது சிறுவனின் அசத்தல் சேவை

கார்ட்டூன் பார்க்க அடம்பிடிக்கும் வயதில், பொதுமக்களுக்கு நிழற்குடையை அமைத்துக்கொடுத்து அசத்தியிருக்கிறார் புதுச்சேரியைச் சேர்ந்த எட்டு வயது திருக்காமீஸ்வரன். 

சிறுவன்

‘சிவனருட்செல்வன்’ என்று சக்தி விகடனால் அடையாளம் காட்டப்பட்ட திருக்காமீஸ்வரன், புதுச்சேரி வில்லியனூரைச் சேர்ந்தவர். அதே பகுதியில் இருக்கும் புகழ்பெற்ற திருக்காமீஸ்வரர் கோவிலுக்கு தன் பெற்றோர்களுடன் செல்வது வழக்கம். சிவன்மீது ஏற்பட்ட இனம்புரியாத ஈர்ப்பினால், மழலைக் குரலால் சிவபுராணங்களை முணுமுணுக்கத் தொடங்கினார். நாளடைவில், தேவாரம், திருவாசகம், 12 திருமுறைகள் என அனைத்தையும் சொற்பொழிவாக நிகழ்த்தத் தொடங்கினார். புதுச்சேரி, தமிழகம், கேரளா, ஆந்திரா எனப் பல இடங்களில் இவரது மழலைத் தமிழ் ஒலிக்க ஆரம்பித்தது. இந்தச் சொற்பொழிவுகளுக்காக இவராக பணம் எதுவும் கேட்பதில்லை. சிலர் அளிக்கும் தொகையையும் கோயில்களில் மேற்கொள்ளப்படும் உழவாரப் பணிகளுக்கும் பொது விஷயங்களுக்கும் கொடுத்துவிடுவார். இப்படி இறைப்பணியில் கிடைத்த சுமார் இரண்டு லட்சம் ரூபாயை மக்கள் நலப்பணிக்குக் கொடுத்திருக்கிறார். தற்போது, வில்லியனூர் சுல்தான்பேட்டை ரயில் நிலையத்தில், ஒரு லட்சம் ரூபாய் செலவில் பயணிகளுக்கான நிழற்குடையை அமைத்து, வியக்கவைத்துள்ளார் திருக்காமீஸ்வரன். 

சிறுவன்

இதுகுறித்து பேசிய சிறுவனின் தந்தை ஆனந்தன், ”திருக்காமீஸ்வரன் பற்றி சக்தி விகடனில் பேட்டி வந்ததிலிருந்தே பல இடங்களிலிருந்து சொற்பொழிவுக்கு அழைப்பு வர ஆரம்பிச்சது. ஆனால், படிச்சுட்டிருக்கிறதால் ஸ்கூல் லீவு நாளில் மட்டும் அழைச்சுட்டுப்போவோம். அதன்மூலம் கிடைக்கும் தொகையைச் சேர்த்துவெச்சு அடிக்கடி நலப் பணிகளுக்குக் கொடுத்துடுவார். ஒருதடவை அவருக்கு ரொம்பப் புடிச்ச வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோயிலுக்குப் போயிருந்தோம். குளக்கரையில் உட்கார்ந்து பேசிட்டிருந்தப்போ அங்கே வந்த ஒரு குடும்பம், பாத்ரூம் எங்கே இருக்குனு கேட்டாங்க. இங்கே எதுவும் இல்லைனு சொன்னதும் அவங்க முகம் வாடிப்போச்சு. இதைப் பார்த்த திருக்காமீஸ்வரன், ‘கோயில்ல பாத்ரூம் இல்லையாப்பா? நாம் கட்டிக்கொடுக்கலாமா?'னு கேட்டார். உடனடியா கோயில் நிர்வாகத்தை அணுகி, பாத்ரூம் கட்ட அனுமதி கேட்டோம். ஆனால், அனுமதி கிடைக்காமல் தள்ளிப் போயிட்டே இருந்துச்சு.

சிறுவன்

எப்பவாச்சும் மாலை நேரத்தில் வில்லியனூர் ரயில்வே நிலையத்தில் வாக்கிங் போறது வழக்கம். அப்படி ஒருநாள் போகும்போது, ‘கோயில்ல பாத்ரூம் கட்ட அனுமதி தள்ளிப்போறது ஒருவகையில் நல்லதுதான். எல்லா மதத்துக்காரங்களுக்கும் பயன்படற மாதிரி ஏதாவது செய்யலாமே’ என்றார் என் மனைவி. அங்கே இருந்த ஸ்டேஷன் மாஸ்டரும் என் நண்பருமான இளங்கோ, ‘இந்த ஸ்டேஷன்ல ஒருநாளைக்கு பல ஆயிரம் பேர் வந்துபோறாங்க. ரயிலுக்காகக் காத்திருக்கும் மக்கள், மழை மற்றும் வெயிலுக்கு ஒதுங்ககூட நிழல் இல்லாம தவிக்கறாங்க. இங்கே ஒரு ஷெட் போட்டா உபயோகமா இருக்கும்’னு சொன்னார். உடனே திருக்காமீஸ்வரன், ‘அப்பா, அதையே செஞ்சுடலாம்’னு சொன்னார். இதுக்காக மத்திய அரசு அதிகாரிகளிடம் பேசின ஸ்டேஷன் மாஸ்டர், ரொம்ப கஷ்டப்பட்டு அனுமதி வாங்கினார். ஒரு லட்சம் ரூபாய் செலவில் பயணிகள் நிழற்குடையை அமைச்சுட்டோம்” என்றார். 

நிழற்குடை

இதுபற்றி திருக்காமீஸ்வரனிடம் கேட்டால் மெல்லிய புன்னகையுடன், “எனக்குத் தெரிந்ததைப் பாடறேன். அதன்மூலம் ஈசன் எனக்கு இடும் கட்டளையை செய்யறேன். தாத்தா, பாட்டி, அக்கா, அண்ணன்கள் எல்லாம் இந்த நிழற்குடையில் உட்கார்ந்துட்டுப் போறதைப் பார்க்கிறேன். இதைவிட பெரிய சந்தோஷம் வேறென்ன இருக்கு” என்றவர், கண்களை மூடி தேவாரப் பாடல் ஒன்றைப் பாடுகிறார்.. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்