'சென்னை எம்.ஐ.டி-க்கு கலாம் பெயர் சூட்டப்பட வேண்டும்!' - மு.க.ஸ்டாலின் கோரிக்கை

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி மு.க.ஸ்டாலின் கலாமுக்கு புகழஞ்சலியை அறிக்கையாக வெளியிட்டுள்ளார். 

மு.க.ஸ்டாலின்

அந்த அறிக்கையில், 'பள்ளிக் குழந்தைகள், மாணவர்கள், இளைஞர்கள், விஞ்ஞானிகள் என்று அனைவர் மனதிலும் நீங்கா இடம்பெற்றிருக்கும் அணு விஞ்ஞானி அப்துல் கலாம் இந்தியாவின் ஒட்டுமொத்த இதய சிம்மாசனத்தில் வீற்றிருக்கிறார். "வளர்ச்சி, வேலைவாய்ப்பு, தொழில்நுட்பம்" ஆகியவற்றில் இந்தியா வியக்கத்தகு முன்னேற்றத்தை எட்ட வேண்டும் என்ற குறிக்கோளுடன் மாணவர்கள் மத்தியில் தனது இறுதி நாள்கள் வரை பயணித்து வந்தவர். அவர் வகுத்துக் கொடுத்த நேர்மை, எளிமை, யாரும் சென்று எளிதில் சந்திக்கும் வாய்ப்பு, அனைத்துக்கும் மேலாக எல்லாத் தரப்பு மக்களுடனும் அவ்வப்போது கலந்துரையாடி மக்களின் உணர்வுகளை புரிந்துகொள்ளும் திறன் உள்ளிட்டவை இன்றைக்கு ஆட்சி அதிகாரத்தில் உள்ள அதிகாரிகளுக்கு மட்டுமல்ல, அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் பால பாடமாக இருக்கிறது.

இந்த இரண்டாவது நினைவுநாளில் அவருக்கு ராமேஸ்வரத்தில் மணி மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது என்றாலும், சென்னையில் உள்ள எம்.ஐ.டி-க்கு டாக்டர் அப்துல்கலாம் அவர்களின் பெயரைச் சூட்ட வேண்டும் என்று ஏற்கெனவே திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கையை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன். இளைய சமுதாயத்தின் விடி வெள்ளியாகத் திகழும் அப்துல் கலாம் அவர்களுக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் புகழஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கிறேன்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!