வெளியிடப்பட்ட நேரம்: 19:49 (27/07/2017)

கடைசி தொடர்பு:17:05 (12/07/2018)

அப்துல் கலாம் குடும்பத்தினருடன் செல்ஃபி எடுத்துக்கொண்ட பிரதமர் மோடி

 ராமேஸ்வரம் அருகே கட்டப்பட்டுள்ள அப்துல் கலாம் தேசிய நினைவகத்தைத் திறந்து வைத்த பிரதமர் நரேந்திரமோடி கலாமின் சகோதரர்  காலில் விழுந்து ஆசி வாங்கியதுடன் அவர் குடும்பத்தினருடன் செல்ஃபி  எடுத்துக்கொண்டார்.

அப்துல்கலாம் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி


மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்தில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் சார்பில் சுமார் 16 கோடி செலவில் நினைவிடம் கட்டப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி இன்று அதைத் திறந்து வைத்தார். பின்னர், நினைவிடத்துக்குள் சென்ற மோடி, அப்துல் கலாமின் சமாதியில் அஞ்சலி செலுத்தினார்.

விஷன் 2020 பேரூந்து

 

அதைத் தொடர்ந்து கலாம் நினைவிடத்தில் கலாமின் மூத்த சகோதரர் முகம்மது முத்து மீரா மரைக்காயரைச் சந்தித்த மோடி அவர் காலை தொட்டுக் கும்பிட்டார். அப்போது கலாம் குடும்பத்தினரிடம் பேசிய மோடி, ''சிறந்த எண்ணங்களைக் கொண்ட மாமனிதர் கலாம். அவரது நினைவிடம் இவ்வளவு சிறப்பாகவும் விரைவாகவும் அமைக்கப்பட்டிருப்பது சந்தோஷமாக உள்ளது. 100 வயதை எட்டியுள்ள தங்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்றார்.


அதைத் தொடர்ந்து கலாமின் கொள்ளுப் பேத்தியை வாங்கிக் கொஞ்சிய மோடி, கலாம் குடும்பத்தினருடன் செல்ஃபி எடுத்துக்கொண்டார். பின்னர், கலாம் இன்டர்நேஷனல் பவுண்டேஷன் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 'சந்தோஷ் வாஹினி கலாம் விஷன் 2020' என்ற கலாமின் வாழ்க்கை வரலாற்றைச் சித்திரிக்கக்கூடிய கண்காட்சி பேருந்தைக் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்தக் கண்காட்சிப் பேருந்து 15 மாநிலங்கள் வழியாக 77 நாள்கள் பயணித்து கலாமின் பிறந்த தினமான அக்டோபர் 15-ல் டெல்லியைச் சென்றடைகிறது. இந்த நிறைவு விழாவிலும் பங்கேற்க வருவதாக மோடி உறுதியளித்துள்ளார்.