தண்ணீரின்றி தவிக்கும் மான்கள்! கண்டுகொள்ளாத வனத்துறை! | Deers comes out from its shelter and bitten by dogs

வெளியிடப்பட்ட நேரம்: 20:19 (27/07/2017)

கடைசி தொடர்பு:20:19 (27/07/2017)

தண்ணீரின்றி தவிக்கும் மான்கள்! கண்டுகொள்ளாத வனத்துறை!

நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் மான் பூங்காவிலிருந்து வெளியேறும் மான்கள் அவ்வப்போது நாய்களால் கடிபட்டும் வாகனங்களில் சிக்கியும் உயிரிழக்கும் நிலைமை உள்ளது. 

நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தின் எதிரில் மான் பூங்கா உள்ளது. வனத்துறை அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த மான் பூங்காவில் ஏராளமான மான்கள் உள்ளன. அங்குள்ள குளங்களில் தேங்கிக் கிடக்கும் தண்ணீரைக் குடித்தும், புதர்கள், மரங்களில் உள்ள இலைகளை உணவாகக் கொண்டும் அவை வளர்கின்றன.

கடந்த இரண்டு வருடமாகப் பருவமழை சரிவரப் பெய்யாத நிலையில் பூங்காவில் உள்ள மரங்கள் செடிகள் கருகிப் போய் விட்டன. இதனால், மான்களுக்கு உணவு கிடைக்காத நிலைமை உருவாகி இருக்கிறது. அத்துடன், மான் பூங்காவிலிருந்த குளங்கள் அனைத்தும் வறண்டு விட்டன. அதனால் மான்களுக்குக் குடிக்கத் தண்ணீர் கிடைப்பதில்லை. ஆகவே, உணவு மற்றும் தண்ணீர் தேடி மான்கள், கூட்டம் கூட்டமாக வெளியேறி அருகில் உள்ள கிராமங்களுக்குள் நுழைகின்றன.

கிராம மக்கள் விளைநிலத்தில் கஷ்டப்பட்டு பயிரிட்டு இருக்கும் பயிர்களை மான்கள் சேதப்படுத்தி விடுகின்றன. அத்துடன், தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி இந்தப் பூங்கா இருப்பதால் அங்கிருந்து வெளியேறும் மான்கள் வாகனங்களில் அடிபட்டு உயிரிழக்கும் சம்பவங்களும் அடிக்கடி நடக்கின்றன. இது தவிர, பூங்காவிலிருந்து வெளியேறும் மான்களை வேட்டையாட நாய்கள் கூட்டம் கூட்டமாகக் காத்துக் கிடக்கின்றன. அவற்றால் கடித்தும் மான்கள் கொல்லப்படும் சம்பவங்களும் அவ்வப்போது நடக்கின்றன.

இந்த நிலையில், நெல்லை மாவட்டம் பாலாமடை அருகே உள்ள காட்டான்புளி கிராமத்துக்குள் கடந்த 3 நாள்களுக்கு முன்பு வந்த மான் ஒன்றை நாய்கள் கடித்துக் குதறின. அப்பகுதி மக்கள் அதனை மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். இந்த நிலையில், இன்று ஒரு மானை நாய்கள் விரட்டிக் கடித்துள்ளது. நாய்களிடம் இருந்து காட்டான்புளி கிராமத்தைச் சேர்ந்த நிர்மல் என்பவர் மானை மீட்டார். காயம் அடைந்த மானுக்கு முதலுதவி சிகிச்சை செய்த அவர், வனத்துறையினருக்குத் தகவல் கொடுத்தார். பின்னர், அந்த மானை வனத்துறையினரிடம் நிர்மல் ஒப்படைத்தார்.

மான்கள் உயிரிழப்பு குறித்து நம்மிடம் பேசிய ஒருங்கிணைந்த சமூக ஆர்வலர்களின் கூட்டமைப்பைச் சேர்ந்த வழக்கறிஞரான மகேஷ்,  "இந்த மான்கள் பூங்காவை வனத்துறையினர் முறையாகப் பராமரிக்க வேண்டும். மான்களுக்குத் தண்ணீர் கிடைக்கும் வகையில் ஆங்காங்கே தண்ணீர்த் தொட்டிகள் அமைத்து நீரை நிரப்பி வைக்க வேண்டும். வறட்சியான இந்தச் சூழலில், அவற்றுக்குத் தேவையான உணவு கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். மான்கள், பூங்கா பகுதியில் இருந்து வெளியேற முடியாதபடி சுற்றுச்சுவரில் உள்ள உடைப்புகளைச் சரிப்படுத்த வேண்டும். வறட்சியான இந்தக் காலகட்டத்தில் மான்களைப் பாதுகாக்கக் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும்" என்றார், அக்கறையுடன்.