நியமன எம்.எல்.ஏ-க்களுக்கு ”நோ என்ட்ரி” - புதுச்சேரி சட்டமன்றம் அதிரடி | Nominated MLAs not allowed - Puducherry legislative action

வெளியிடப்பட்ட நேரம்: 00:34 (28/07/2017)

கடைசி தொடர்பு:08:10 (28/07/2017)

நியமன எம்.எல்.ஏ-க்களுக்கு ”நோ என்ட்ரி” - புதுச்சேரி சட்டமன்றம் அதிரடி

மத்திய அரசால் நியமிக்கப்பட்ட மூன்று நியமன எம்.எல்.ஏ-க்களுக்கு இருக்கைகள் மற்றும் அலுவலகங்களை ஒதுக்கமுடியாது என்று அதிரடியாக, புதுச்சேரி சட்டமன்றச் செயலகம் அறிவித்திருக்கிறது.

புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் அரசின் பரிந்துரை இல்லாமல் மாநில பா.ஜ.க தலைவர் சாமிநாதன், பொருளாளர் சங்கர் மற்றும் தனியார் பள்ளி தாளாளர் செல்வகணபதி ஆகியோரை புதுச்சேரி சட்டமன்றத்துக்கு எம்.எல்.ஏ-க்களாக நியமித்து உத்தரவு பிறப்பித்தது உள்துறை அமைச்சகம். அதற்கான உத்தரவு நகலை ஆளுநர் மாளிகையில் பெற்றுக்கொண்ட இந்த மூவரும், மறுநாள் சபாநாயகர் வைத்திலிங்கத்தைச் சந்தித்து தங்களுக்குப் பதவிப் பிரமாணம் செய்துவைக்கும்படி கூறினர். ஆனால், “மத்திய அரசு வெளியிட்டிருக்கும் இந்த உத்தரவில் மூன்று பேர்களின் பெயர்கள் மட்டுமே இருக்கின்றதே தவிர அவர்களின் பெற்றோர்கள் பெயர், விலாசம் உள்ளிட்ட எந்த விவரமும் அதில் தெரிவிக்கப்படவில்லை. அதனால், பதவிப் பிரமாணம் செய்துவைக்க முடியாது என்று மறுத்துவிட்டார். அதன்பிறகு அவர்கள் மூவருக்கும் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ராஜ்நிவாசில் ரகசியமாகப் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.

புதுச்சேரி

அதையடுத்து அந்த மூன்று எம்.எல்.ஏ-க்களும் சட்டமன்றச் செயலரை சந்தித்து சட்டமன்றத்தில் தங்களுக்கு இருக்கைகள் ஒதுக்கச் சொல்லி மனு அளித்தனர். ஆனால், மாநில அரசின் பரிந்துரை இல்லாததாலும், சபாநாயகரால் பதவிப்பிரமாணம் செய்யப்படாததாலும் அந்த மூன்று பேரின் நியமனமும் செல்லாது என்று அறிவித்தார் சபாநாயகர் வைத்திலிங்கம். இதற்கிடையில், எம்.எல்.ஏ-க்கள் நியமனம் தொடர்பாக காங்கிரஸ் கட்சி சார்பில் முதல்வரின் பாராளுமன்ற செயலர் லட்சுமி நாராயணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதேபோல நியமன எம்.எல்.ஏ-க்கள் சார்பாகவும் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் இரு தினங்களுக்கு முன்பு சட்டமன்றத்தில் தங்களுக்கு இருக்கைகள் மற்றும் அலுவலகங்கள் ஒதுக்கும்படி மீண்டும் சட்டமன்றச் செயலரிடம் மனு அளித்தனர்.

இந்நிலையில், “உங்களுக்கு சபாநாயகர் அனுமதி அளிக்கவில்லை. அதனால், சட்டமன்றத்தில் உங்களுக்கு இருக்கைகள், அலுவலகம் உள்ளிட்ட எதுவும் ஒதுக்க முடியாது” என்று மூன்று நியமன எம்.எல்.ஏ-க்களுக்கும் சட்டமன்ற செயலகம் கடிதம் அனுப்பியுள்ளது. மத்திய அரசு நியமன எம்.எல்.ஏ-க்களை நியமித்திருந்தும், துணை நிலை ஆளுநர் கிரண்பேடி அவர்களுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்திருந்தாலும், சபாநாயகர் அனுமதி இல்லாததால் சட்டமன்றத்தைப் பொறுத்தவரை அவர்கள் எம்.எல்.ஏ கிடையாது என்பது இதன்மூலம் தெரிய வந்திருக்கிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க