வெளியிடப்பட்ட நேரம்: 04:29 (28/07/2017)

கடைசி தொடர்பு:08:22 (28/07/2017)

ரஜினி, கமல் யார் வந்தாலும் சந்திக்கத் தயார் - திருமாவளவன் அதிரடி!

டாக்டர் அம்பேத்கரின் 125-வது பிறந்தநாள் நிறைவிழா பொதுக்கூட்டம் கடலூரில் நடத்தப்பட்டது. அதில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
 அப்போது பேசிய அவர், "சொந்த சமூகத்தை அழிப்பதற்காக  ராமதாஸுக்கு நோபல் பரிசு கொடுக்கலாம். இந்தியாவில், ஆயிரக்கணக்கான ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் இன்னும் திருமணம் ஆகாமல் இருக்கிறார்கள். நானும் அப்படித்தான் இருக்கிறேன். அதற்காக  என்னையும் ஆர்.எஸ்.எஸ் - தொண்டனாக நினைக்காதீர்கள். தெலுங்கானா, ஆந்திர மாநிலங்களில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தகுந்த பாதுகாப்பு இருக்கிறது. ஆனால், தமிழகத்தில்தான் இல்லை. அங்கு, அம்பேத்கருக்கும் பெரியாருக்கும் மணிமண்டபங்கள் கட்டுகிறார்கள். ஆனால், பெரியார் வாழ்ந்த இந்த தமிழக மண்ணில் ஒரு மணிமண்டபம் இல்லை. 
உலகத்திலேயே எந்த ஒரு தலைவருக்கும் ஐ.நா-வில் பிறந்தநாள் கொண்டாடியதில்லை. தேசப்பிதா என்கின்ற மகாத்மா காந்திக்குக்கூட இல்லை. ஆனால், அம்பேத்கருக்கு மட்டும்தான் அங்கு முதன்முதலில் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இப்போது அரசியலுக்கு ரஜினி மட்டுமல்ல அவருடைய மாமன், அப்பா, கமல் என்று யார்வந்தாலும் களத்தில் சந்திக்க இந்த விடுதலைச் சிறுத்தைகளுக்கு துணிச்சல் உண்டு" என்றார்.