Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ரயில் உணவுகள் தரமற்றவையாக இருக்க இந்திய தணிக்கை பிரிவு அடுக்கும் காரணங்கள் இவை!

ரயில்

ந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலாக் கழகம் (ஐ.ஆர்.சி.டி.சி) சார்பில், ரயில் நிலையங்களிலேயே உணவுத் தயாரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான காரணம் குறித்து விளக்குகிறது  இந்திய தணிக்கை பிரிவு அறிக்கை. 

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வெளியான 'அந்நியன்' என்ற திரைப்படத்தில் இடம்பெறும் ஒரு காட்சியில், சாம்பாரில் விழுந்த பல்லியைப் பார்த்து அந்த ரயிலில் உணவு வழங்கும் டெண்டர் எடுத்தவர், “பல்லாயிரம் பேர் சாப்பிடும்போது... பல்லி விழுந்திருப்பது என்ன தெரியவா போகிறது'' என்று பயணிகளின்மீது அக்கறையில்லாதவராக மிகவும் சாதாரணமாகச் சொல்வார். இப்படிப்பட்ட நிலைமைதான், இன்றைய இந்திய ரயில்களில் தயாரித்து வழங்கப்படும் உணவுப் பொருள்களில் இருக்கிறது. இதை எதிர்த்துக் கேட்க முடியாத நிலைமையிலும் சில பயணிகள் பயணம் செய்கின்றனர். சமீபத்தில், ஜார்க்கண்டிலிருந்து உத்தரப்பிரதேசத்துக்குச் சென்றுகொண்டிருந்த பூர்வா விரைவுத் தொடர்வண்டியில் வழங்கப்பட்ட உணவில் பல்லி இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த பயணிகள், அதைப் புகைப்படம் எடுத்து ரயில்வே துறை அமைச்சருக்கு ட்வீட் செய்துள்ளனர். இதையடுத்து உடனடியாக மருத்துவர்கள், பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு உரிய சிகிச்சை அளித்துள்ளனர். இதுகுறித்து கருத்துத் தெரிவித்த முகாம்சர் (உத்தரப்பிரதேசம்) ரயில் நிலையத்தைச் சேர்ந்த மூத்த அதிகாரியான கிஷோர்குமார், ''இந்தச் சம்பவம் பற்றி விசாரணை நடத்தி விரைவில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இது, சம்பந்தப்பட்ட ஓர் அறிக்கையும் அமைச்சரவைக்கு வழங்கப்படும்'' என்றார்.

இந்த நிலையில், நாடு முழுவதும் இயக்கப்படும் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரயில்களில் தினமும் சுமார் இரண்டு கோடிக்கும் மேற்பட்டோர் பயணம் செய்கின்றனர். அவற்றில் பயணிப்பவர்களுக்கு உணவு மிகவும் இன்றியமையாததாக இருக்கிறது. இதனைக் கருத்தில்கொண்டு அவர்களுக்கு ரயிலில் உணவு தயாரித்து வழங்கப்பட்டது. இப்படி ரயிலில்உணவு தயாரித்து வழங்குவதில் பல்வேறு குறைபாடுகள் நிலவியதை அடுத்து, கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு ஐ.ஆர்.சி.டி.சி இந்தப் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுத் தனியார்வசம் ஒப்படைக்கப்பட்டது. இந்த நிலையில், தனியாரும் பயணிகளுக்கு நல்ல தரமான உணவுகளை வழங்குவதில்லை எனவும், அத்துடன் உணவுப்பொருள்களையும் கூடுதல் விலைக்கு விற்கிறது எனவும் பயணிகளிடமிருந்து புகார் எழுந்தது. இதையடுத்து, ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு புதிய உணவுக் கொள்கையைச் சமீபத்தில் அறிமுகப்படுத்தினார். இதன்படி, ரயில் பயணிகளுக்கான உணவுத் தயாரிப்புப் பணிகளை இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலாக் கழகமும், உணவு விநியோகப் பணிகளைத் தனியார் நிறுவனங்களும் மேற்கொள்ள இருக்கின்றன.

ரயில்

ரயிலில் உணவு தயாரித்து வழங்கப்படும் பொருள்களில் தவறுகள் நடக்கக் காரணம், ''அந்தத் துறையில் மாறிக்கொண்டே இருக்கும் கொள்கைகள்தான்'' என இந்திய தணிக்கை பிரிவு அறிக்கை கூறுகிறது. மேலும், ''இங்கு தரமான சமையல்கூடங்கள், ரயில் நிலையங்களில் உணவு வழங்குவதற்கான கட்டமைப்புகள் போன்றவற்றை ஏற்படுத்த ரயில்வே துறை தவறிவிட்டது. நடைபாதைகளிலும், ரயில்களிலும் அங்கீகரிக்கப்படாத பல உணவு விற்பனையாளர்கள் உள்ளனர். போதுமான அளவில் ரயில் நிலையங்களுக்குள் சமையல் கூடங்கள் இல்லை. அப்படியே இருந்தாலும் அவை ‘பராமரிப்பு’ என்பதையே பார்க்காதவையாக இருக்கின்றன. பெரும்பாலான இடங்களில் பயணிகளுக்கு உணவு வெளியிலிருந்தே தருவிக்கப்படுகிறது. ஆய்வுசெய்யப்பட்ட 80 ரயில்களில் 24 மணி நேரத்துக்கும் மேலாகப் பயணம் மேற்கொள்ளும் 9 ரயில்களில் pantry cars எனப்படும் சரக்கு அறைகளுக்கானப் பெட்டிகள் இல்லாதது தெரியவந்துள்ளது. கெட்டுப்போன உணவுகள், அங்கீகரிக்கப்படாத குடிநீர் பாட்டில்கள், கரப்பான் பூச்சிகள், எலிகள் என அனைத்தும் விளையாடும் சமையல் அரங்கு, இப்பேர்ப்பட்ட ‘சுத்தமான’ இடத்தில் மூடி வைக்கப்படாத உணவு வகைகள், பயணிகளுக்கு உணவுப் பொருள்கள் வழங்குகையில் கொஞ்ச நேரம் இருக்கட்டும் எனக் கழிப்பறையின் அருகில் வைக்கப்பட்ட உணவுகள்'' எனப் பக்கம் பக்கமாகத் தவறுகளைப் பட்டியலிட்டு இருக்கிறது தணிக்கைத்துறையின் அறிக்கை. “உணவின் தரம்தான் இப்படி என்றால், உணவின் அளவுகளும் குறிக்கப்பட்ட அளவுகளைவிட குறைக்கப்பட்டே பயணிகளுக்கு விற்கப்படுகின்றன. மெனு அட்டையோ, வாங்கும் உணவுக்குச் சரியான மதிப்புச் சீட்டோ, எதுவும் கிடையாது. 'ரயில்களில் சமையலுக்கான அடுப்புகள் யாவும் மின்மயப்படுத்தப்பட வேண்டும்' என்ற அறிவிப்பு வெளியாகிப் பல வருடங்களான பின்பும்... ரயில் பெட்டிகள் அதுபோன்ற வசதிகள் பொருத்தப்படாமலேயே தயாரிக்கப்படுகின்றன'' எனவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதுகுறித்து சமூக ஆர்வலர் எட்வர்ட், ''இதுவரை பல குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. உணவின் தரத்தைக் கண்காணிக்க... 'கண்காணிப்பு அமைப்பு' என்று எதுவும் இல்லை. இந்தப் பிரச்னையால் பெரிதும் பாதிக்கப்படுவது தென்னிந்தியர்கள்தான். ஒப்பந்தம் எடுப்பவர்கள், எக்காரணம் கொண்டும் உணவின் தரத்தில் கைவைக்கக் கூடாது'' என்றார்.

இனிமேலாவது, இதுபோன்ற தவறுகள் நடக்காதவண்ணம்.. ரயில்வே நிர்வாகம் பயணிகளின் விஷயத்தில் அக்கறைகொள்ள வேண்டியது அவசியம்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close