'இனி ஒண்ணாக இருப்போம்!' - தினகரனோடு கைகுலுக்கிய திவாகரன் | TTV Dinakaran joins with Divakaran

வெளியிடப்பட்ட நேரம்: 13:45 (28/07/2017)

கடைசி தொடர்பு:15:28 (28/07/2017)

'இனி ஒண்ணாக இருப்போம்!' - தினகரனோடு கைகுலுக்கிய திவாகரன்

சசிகலாவின் அண்ணன் சுந்தரவதனத்தின் மனைவி சந்தான லட்சுமியின் மறைவையடுத்து, இன்று தஞ்சாவூரில் சசிகலா குடும்ப உறவுகள் ஒன்று திரண்டனர். இதில், திவாகரனும் தினகரனும் ஒன்றாக அமர்ந்து பேசியதை அதிர்ச்சியோடு கவனிக்கின்றனர் எடப்பாடி பழனிசாமி தரப்பினர். புற்றுநோய் தாக்கத்தின் விளைவாக சந்தான லட்சுமி இறந்தார். அவரது மறைவுக்குச் செல்வதற்காக பரோல் விண்ணப்பத்தை சசிகலா சிறைத்துறை அதிகாரிகளிடம் கொடுத்தார். ' ரத்த சம்பந்தமுள்ள உறவாக இல்லாததால், பரோல் வழங்க முடியாது' என சிறைத்துறை மறுத்துவிட்டது.

தினகரன் - திவாகரன்

 

இன்று காலை சந்தான லட்சுமியின் இறுதிச் சடங்கு நிகழ்வுக்காக தஞ்சையில் உள்ள காந்தி நகரில், சசிகலா உறவுகள் குவிந்தனர். எம்.எல்.ஏ-க்கள் வெற்றிவேல், தங்க.தமிழ்ச்செல்வன், செந்தில்பாலாஜி, பழனியப்பன், ஜக்கையன் உள்ளிட்ட தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களும் வந்திருந்தனர். அங்கு அனைவருடனும் கலகலப்பாகப் பேசிக் கொண்டிருந்தார் தினகரன். இந்த உற்சாகத்தில் திவாகரனும் பங்கெடுத்துக்கொண்டார். 

தினகரன் - திவாகரன்

 

 

' நீங்கள் அனைவரும் எங்களுடன் இருக்க வேண்டும்' என அ.தி.மு.க நிர்வாகிகளை திவாகரன் கேட்டுக்கொண்டார். இதுகுறித்து நம்மிடம் பேசிய சசிகலா உறவினர், "தினகரனுக்கு எதிராகக் குடும்ப உறவுகள் ஒன்றுகூடுவதை சசிகலா விரும்பவில்லை. 'நமக்குள் அடித்துக் கொண்டிருந்தால் எதிரிகள் வலுவடைகிறார்கள். ஒன்றாக இருந்து வென்று காட்டுவோம்' என உருக்கமாக வேண்டுகோள் வைத்தார் சசிகலா. இந்த வேண்டுகோளை ஏற்று, திவாகரன் வீட்டில் வைத்து பலமணி நேரம் ஆலோசனை நடத்தினார் தினகரன். 'இனி இருவரும் இணைந்து செயல்படுவோம்' என்ற முடிவுக்கு வந்துவிட்டனர். 'திவாகரனோடு எனக்கு எந்த கருத்து வேற்றுமையும் கிடையாது' என பத்திரிகையாளர்களிடம் பலமுறை சுட்டிக் காட்டினார் தினகரன். இன்று நடந்த இறுதிச்சடங்கு நிகழ்வில் இருவரும் ஒன்றாக அமர்ந்து விவாதித்தனர். ஆகஸ்ட் 5-ம் தேதியோடு தினகரன் கொடுத்த கெடு முடிவடைகிறது. அதன்பின்னர், திவாகரனோடு இணைந்து அதிரடிகளை நிகழ்த்த இருக்கிறார் தினகரன்" என்றார் விரிவாக.

தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் பேசிய திவாகரன், "துக்க நிகழ்ச்சிக்கு யாரு வேண்டுமானாலும் வரலாம் வராமலும் போகலாம். இதை அரசியலாக்க வேண்டாம். யாருக்கும் எந்தவிதமான அரசியல் நெருக்கடி கிடையாது. பதவி என்பது வேறு, ஆட்சி என்பது வேறு. அதிமுகவுக்கு தற்போது சோதனையான காலக்கட்டம். சக்கர வியூகத்தில் மாட்டிக்கொண்டுள்ள அபிமன்யுபோல தற்போது அதிமுக சிக்கித்தவிக்கிறது. அதை எப்படியும் மீட்டெடுப்போம். எனக்கும் தினகரனுக்கும் எந்தவிதமான கருத்து வேறுபாடும் கிடையாது. பிரச்னையே, எங்கள் இருவருக்கும் இல்லாதபோது நடராஜன் எப்படி பிரச்னையை தீர்த்து வைக்க முடியும். எடப்பாடி நல்ல முறையில் ஆட்சி செய்து வருகிறார்" என்றார்.

பின்னர் தினகரன் கூறுகையில், "துக்கவீட்டில் அரசியல் பேச விரும்பவில்லை. ஒருசிலர் நேரில் வருகிறார்கள், ஒருசிலர் போன் மூலம் துக்கம் தெரிவிக்கிறார்கள். அமைச்சர்கள் வராததை அரசியலாக்க வேண்டாம். அ.தி.மு.க-வில் என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பாருங்கள்" என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க