தேனி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்!

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், விவசாயிகளின் குறைதீர்க்கும் கூட்டம் இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில், மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் பொன்னம்மாள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் நூற்றுக்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர். கூட்டத்தில், குளத்திலிருந்து வண்டல் மண் எடுத்து விவசாய நிலங்களுக்கு வழங்கப்படுவதில் இருந்த குழறுபடிகளுக்கு நிரந்தரத் தீர்வு காணப்பட்டது. மாவட்டத்தில் நிலவிவரும் கால்நடைத் தீவன பற்றாக்குறைக்கு, எப்படிப்பட்ட நடவடிக்கை நிரந்தரத் தீர்வாக அமையும் என்று விவாதிக்கப்பட்டது.

மாவட்ட வனப்பகுதியில், அதிகமாக மரங்கள் வெட்டப்பட்டு வருவதாக விவசாயிகள் குற்றம் சாட்டினர். அதை, வனத்துறையினர் கண்காணிக்க வேண்டும் என்றும், மரம் வெட்டுபவர்களை குண்டர் சட்டத்தில் கைதுசெய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். மூலவைகையில் அணை கட்ட வேண்டும் எனவும், எம்.ஜி.ஆர் காலத்தில் அடிக்கல் நாட்டப்பட்டது என்ன ஆனது என்றும் கேள்வி எழுப்பினர். அப்போதைய மதிப்பீட்டில், 1,200 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்ட பணம் எங்கே போனது என்றும் கேள்விகள் எழுப்பினர். அதற்குப் பதில் அளித்த மாவட்ட கலெக்டர், அது குறித்து பொதுப்பணித்துறை கவனத்துக்குக் கொண்டுசெல்கிறேன் என்று உறுதியளித்தார். மேலும், மாவட்ட விவசாய சங்கங்கள்மூலம், மாவட்டம் முழுவதும் 3 லட்சம் மரக்கன்றுகள் நட அனுமதி கேட்கப்பட்டதாகவும் அதற்கு வனத்துறை அனுமதி மறுத்ததாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டினர்.

பல இடங்களில் சாலை வசதி ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர். மலை மாடுகளுக்கு இலவச பாஸ் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கப்பட்டது. அதற்கு வனத்துறையினர், உடனே நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதுபோன்ற பல்வேறு கோரிக்கை மனுக்கள் விவாதிக்கப்பட்டு, தீர்வு காணப்பட்டது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!