Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பிக் பாஸில் காப்பாற்றப்படுகிறாரா காயத்ரி ரகுராம்!? #BiggBossTamil

'பிக்பாஸ்' நிகழ்ச்சிக்கு முன்பு காயத்ரி ரகுராமைத் தமிழ்நாட்டில் எத்தனை பேருக்குத் தெரியும் என்று தெரியவில்லை. காயத்ரியின் பெயருக்குப் பின்னால் உள்ள ரகுராம், தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற நடன இயக்குநர். காயத்ரி தன் முதல் படத்தில் புகழ்பெற்ற இன்னொரு நடன இயக்குநரோடு இணைந்து நடித்தார். 'முதலாம் சந்திப்பில் நாம் அறிமுகமானோமே' என்று பிரபுதேவாவோடு 'சார்லி சாப்ளின்' படத்தில் ஆடிப்பாடி அறிமுகமானார். அதைவிட பிரபலமான பாடல் 'சும்மா சும்மா சும்மா' என்ற 'சும்மா' பாடல். அந்தப் பாடலில் காயத்ரி அசால்ட்டாகக் காலைத் தூக்கிப் பிரபுதேவா தோளில் போட்டது அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது. 'தோளில் கைபோட்டால் நட்பு, கால் போட்டால் காதல்' என்ற அரிய தத்துவமும் காயத்ரியுடனே தமிழ்கூறும் நல்லுலகுக்கு அறிமுகமானது.

காயத்ரி

டான்ஸ் மாஸ்டர் பிரபுதேவாவோடு ஒரு படம் என்றால், இன்னொரு டான்ஸ் மாஸ்டரான ராகவா லாரன்ஸோடு 'ஸ்டைல்' என்ற படத்தில் நடித்தார். இரண்டு டான்ஸ் மாஸ்டர்களுடன் நடித்த பிறகு, ஹரிஷ் ராகவேந்திரா என்ற பாடகருடன் 'விகடன்' என்ற படத்தில் நடித்தார். பாகிஸ்தான் தீவிரவாதிகளை வேட்டையாடுவதையே வேட்கையாகக்கொண்ட அர்ஜூனின் 'பரசுராம்' படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்தார். காயத்ரி ரகுராம், கிரண் என்ற இரண்டு நாயகிகளுடன் டூயட் ஆடிய நேரம்போக மிச்ச நேரத்தில் தீவிரவாதிகளை வேட்டையாடித் தேசத்தைக் காப்பாற்றினார் அர்ஜூன்.

காயத்ரி ரகுராம் நடித்த மர்மப்படம் 'விசில்'. அதிலும் இரண்டு ஹீரோயின்கள். ஒரு ஹீரோயினான ஷெரினின் தங்கையை ராக்கிங் செய்து கொடுமைப்படுத்தி, தற்கொலைக்குத் தூண்டும் நண்பர்களில் ஒருவராக காயத்ரி ரகுராம் (அப்பவே அப்படி!). பிறகு, சில துண்டுதுக்கடா படங்களில் நடித்தார். நடிப்பில் மாஸ்டராக முடியாததால் நடன மாஸ்டராகிப் படங்களுக்கு நடனம் அமைக்கத்தொடங்கினார். பாலாவின் 'தாரை தப்பட்டை' படத்தில் பிணத்துக்கு முன்னால் காயத்ரி போட்ட குத்தாட்டத்தால் தாரை தப்பட்டைகள் கிழிந்து தொங்கின. காயத்ரி ரகுராம் படங்களின் சிறப்பே ஒரு படம்கூட 'ஓஹோ ஆஹா' என்று ஓடவில்லை என்பதுதான்.

காயத்ரிக்குத் தமிழ் சினிமாவில் இப்போதுவரை இருக்கும் இடம் இவ்வளவுதான். ஆனால், 'பிக்பாஸ்' நிகழ்ச்சியின் மூலம் காயத்ரி ரகுராமுக்கு உருவாகியிருக்கும் இடமோ பெரிது. சொல்ல மறந்துவிட்டேன். இடைப்பட்ட காலத்தில் மக்களுக்குச் சேவை செய்ய ஆசைப்பட்டு பாரதிய ஜனதா கட்சியில் இணைந்த காயத்ரி ரகுராம், மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதியில் நிற்கவும் விண்ணப்பித்திருந்தார், நல்லவேளை கிடைக்கவில்லை. சரி, பிக்பாஸுக்கு வருவோம்.

பிக்பாஸ் வீட்டில் இரண்டாம்நாளே காயத்ரி ரகுராமின் ஆட்டம் ஆரம்பமானது. முதல் குறி ஜூலி. அவர் மெரினா போராட்டத்தில் ஈடுபட்டது தனக்குப் பிடிக்கவில்லை என்பதை நேரடியாகவும் மறைமுகமாகவும் வெளிப்படுத்தினார். மெரினா போராட்டத்தில் திட்டப்பட்ட மூவர் மோடி, சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் என்பதால் ஜூலியைக் காயத்ரி, ஆர்த்தி, சினேகன் ஆகிய மூவருக்கும் பிடிக்காமல் போனதில் ஆச்சர்யமில்லை. 'அந்தப் பொண்ணு நல்லவிதத்தில் பிரபலமாகவில்லை' என்று தன்பக்கம் உள்ள 'நியாயத்தை'யும் ஆர்த்தியிடம் பகிர்ந்துகொண்டார் காயத்ரி.

காயத்ரியும் ஆர்த்தியும் ஜூலியை டார்ச்சர் செய்வதற்குச் சொன்ன காரணம் 'அவர் ஒரு ஃபேக், நடிக்கிறார்' என்பது. காயத்ரியும் ஆர்த்தியும் சினேகனும்தான் எதார்த்தமான மனிதர்கள். எனவே இந்த எதார்த்தமான மனிதர்கள் ஸ்விம்மிங் பூலுக்கு அருகில், பாத்ரூம் கதவுக்கு வெளியில், கிச்சனில் என்று எல்லா இடங்களிலும் மற்றவர்களைப் பற்றி புறணி பேசி 'நல்லமுறையில்' பிரபலமாகத் தொடங்கினார்கள். அதிலும், ஒருகட்டத்தில் 'நீ என் கண்ணைப் பார்த்துத்தான், 'நான் ஆங்கிலோ இண்டியன் ஸ்கூலில் படிச்சேன், அங்கே தமிழ்த்தாய் வாழ்த்து சொல்லித் தந்தாங்க'னு சொன்னே' என்று ஜூலியுடன் சண்டை போட்டதெல்லாம் மயிலாப்பூர் கோயில் கல்வெட்டில் பொறிக்கப்பட வேண்டிய மகா வாக்கியங்கள்.

பஞ்சாபி ஸ்கூலில் படித்த காயத்ரிக்குத் தமிழ் தெரியாது, சமஸ்கிருதம்தான் தெரியும் (ஆப் கி பார் மோடி சர்க்கார்!), ஆங்கிலோ இண்டியன் ஸ்கூலில் படித்த ஜூலிக்கோ தமிழ்த்தாய் வாழ்த்து தெரியும், ஆனால் அதை எழுதியவர் யார் என்றுதான் தெரியாது. ஒருகட்டத்தில் காயத்ரியின் டார்ச்சர் தாங்காமல் அம்மா கால அ.தி.மு.க. அமைச்சர்களைப்போல அடிமையாகவே மாறிப்போனார் ஜூலி. இரண்டாவது வாரமே தலைவியான காயத்ரி 'தலைவி ஈ ஈ' என்று சிணுங்கிச் சிரித்தபோது 'புரட்சித் தலைவி'யின் ஞாபகம்தான் வந்தது.

கஞ்சா கருப்பு என்ற கோபக்கழுகு கொத்தித் தீர்த்தது பரணி என்ற அப்பாவியை. மக்களின் 'அமோக ஆதரவுடன்' கஞ்சா கருப்பு வெளியேறியபிறகு 'பரணி இருந்தா பெண்களுக்குப் பாதுகாப்பில்லை' என்று முதன்முதலில் பேச்சைத் தொடங்கியவர் காயத்ரி. பிறகு ஒட்டுமொத்தக் கூட்டத்தின் டார்ச்சர் தாங்காமல் ஸ்மோக்கிங் ஜோன் கூரை வழி ஏறி, தெறித்து ஓடினார் பரணி. காயத்ரியை யார் யாரெல்லாம் ஆதரிக்கிறார்களோ அந்த ஆர்த்தி, நமீதா ஆகியோரை மக்கள் ஓட்டு போட்டு விரட்டியடித்தார்கள்.

இவ்வளவு நடந்தாலும் மாமியார்போல நடந்துகொண்ட காயத்ரியை 'அம்மா மாதிரி' என்று சொல்லவும் சில பிக்பாஸ் போட்டியாளர்கள் தயங்கவில்லை.அதிலும் கலா மாஸ்டர் , " என் அக்கா பொண்ணு காயத்ரி, வீட்டுல கிச்சன் பக்கம் எட்டிப் பார்த்தது இல்ல.காபி கூடப் போடத் தெரியாது.ஆனா, இந்த நிகழ்ச்சில அத்தனை பேருக்கும் சமைச்சுப் போடுறா" என பேட்டியளித்த போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் காட்டப்படும் கிச்சன் நிச்சயம் சிரித்திருக்கும். காயத்ரியோ தன்னிடம் உள்ள ஒரே தப்பு 'கோபப்படுவதுதான்' என்று சொல்லிக்கொண்டார். ஆனால், காயத்ரிக்கு இருப்பது கோபம் அல்ல, ஆணவம். அதுவும் மேட்டிமைத் திமிர். அதனால்தான் ஜூலி என்ற பிரபலமல்லாத ஒரு சாதாரணப் பெண்ணையும் பரணி என்ற அப்பாவியையும் அவரால் சகித்துக்கொள்ள முடியவில்லை. சினிமாக்காரர்களிடமும் தன்னைப்போலவே சினிமா குடும்பத்தில் இருந்து வந்திருக்கும் சக்தியிடம் காட்டும் நெருக்கத்தை வேறு யாரிடமும் அவர் காட்டுவதில்லை. 

ஜூலி தனக்கு அடிமையானபிறகு, காயத்ரியின் மேட்டிமைத் திமிர் திரும்பியது ஓவியாவின் பக்கம். ஒவியாவைப் பற்றி அவர் பேசிய வார்த்தைகளையும் முகச்சுளிப்பையும் பார்த்த மக்கள் மீண்டும் மீண்டும் ஓவியாவுக்கு ஆதரவு அளித்ததோடு தற்கொலைப்படையாகவே மாறிவிட்டார்கள். ஆனாலும், அப்போதும் திருந்தவில்லை காயத்ரி. 'தப்பாக் காட்டுறாங்க' என்று நியாயம் சொன்னார், தப்பாகவே நடந்துகொண்ட காயத்ரி. 

ஆர்த்திக்கும் நமீதாவுக்கும் பாடம் புகட்டிய மக்களுக்கு காயத்ரிக்குக் காட்டமாகப் பாடம் புகட்டும் சந்தர்ப்பம் இன்னும் கிடைக்கவில்லை. நேரடியாக மக்களே நாமினேட் செய்து எலிமினேட் செய்யும் வாய்ப்பு கிடைத்தால் முதலில் அனுப்பப்படுபவராக காயத்ரியே இருப்பார். மக்களின் கோபம் இருக்கட்டும். சிலவாரங்களாகக் காயத்ரி குறித்து உருவாகும் பிம்பங்கள் இயல்பானவைதானா?

அதுவரை உள்ளுக்குள் நடக்கும் எதையும் வீடியோவாகப் போட்டுக் காட்டாத கமல்ஹாசன் 'காயத்ரி - கால்சியம்' வீடியோவைப் போட்டுக்காட்டியபோது, 'ஆஹா, காயத்ரி அம்பலப்படப்போகிறார்' என்றுதான் பலரும் ஆனந்தமடைந்தார்கள். ஆனால் கடைசியிலோ 'காயத்ரிக்கு 'சீராக' என்ற வார்த்தைக்கு அர்த்தமே தெரியாது. அவர் ஓர் அப்பாவி' என்று நியாயப்படுத்தப்பட்டார். 'எச்சை', 'வெச்சு செய்யணும்', 'கையைக் காலை உடைக்கணும்', 'சேரி பிஹேவியர்', 'முகரக்கட்டையைப் பாரு', 'ஹேர் மாதிரி மதிப்பீங்க', ' அவ ஹிஸ்டரி எனக்குத் தெரியும்' என்ற வார்த்தைகளுக்கு எல்லாம் அர்த்தம் தெரிந்த காயத்ரிக்கு 'சீராக' என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியவில்லை. அய்யகோ! 

இரண்டாவது அம்பலப்படுத்தப்பட்டது ஜூலி - ஓவியா வீடியோ. 'காயத்ரி ரகுராம் நியாயப்படுத்தப்பட்டதுபோலவே தன்னையும் நியாயப்படுத்திக்கொள்ள ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும்' என்றுதான் ஜூலி நினைத்தார். அதனால்தான் 'அன்னைக்குக் காலையில ஆறுமணி இருக்கும்' என்பதைப்போல 'அஞ்சு செகண்ட் வீடியோ' என்ற வசனத்தைப் பார்ப்பவரிடம் எல்லாம் பேசினார். ஆனால், காயத்ரிக்குக் கிடைத்த 'நியாயம்' ஜூலிக்குக் கிடைக்கவில்லை. இப்போது ஜூலிதான் வில்லி.

அதன் அடுத்தகட்டமாக காயத்ரிக்கும் ஓவியாவுக்கும் உள்ள பிணக்குகளைத் தீர்த்துக்கொள்வதற்கான வாய்ப்பும் 'ரிப்போட்டர் டாஸ்க்' மூலம் உருவாக்கப்பட்டது. ஆனால் இதற்கு முன் ஜூலியும் பரணியும் கார்னர் செய்யப்பட்டபோதெல்லாம் ஏன் இதுமாதிரியான வாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை? ஓவியா காயத்ரியிடம் கண்ணீருடன் 'ஸாரி' கேட்க, கட்டிப்பிடித்து சமாதானம் ஆகி நட்பு பாராட்டிவிட்டார் காயத்ரி. 'நான் முகரக்கட்டையப் பாருன்னு சொன்னதுக்கு ஸாரி' என்று ஓவியாவிடம் மன்னிப்பும் கேட்டுவிட்டார். ஆனால், உண்மையில் காயத்ரி முதலில் மன்னிப்பு கேட்கவேண்டியது ஜூலியிடமும் துரத்தப்பட்ட பரணியிடமும்தான்.

ஜூலி - ஓவியா விஷயத்தையே எடுத்துக்கொள்வோம். காயத்ரிக்குப் பிடிக்காத ஓவியாவுடன் ஜூலி நெருக்கமாக இருந்ததாலேயே அவரைக் காயத்ரியும் நமீதாவும் தனிமைப்படுத்தினார்கள். ஜூலி வலியால் துடித்தபோதும் குறைந்தபட்ச மனிதாபிமானமும் இல்லாமல் 'நடிக்கிறா' என்று சொல்லி ஒதுங்கிக்கொண்டார்கள். காயத்ரியின் விசுவாசமான அடிமையாக வேண்டும் என்பதற்காகப் பொய் சொல்லி அம்பலமானவர் ஜூலி. அது பெரிதாகப் பேசப்பட்டது. ஆனால், காயத்ரி உள்ளிட்டவர்கள் மனிதாபிமானம் இல்லாமல் நடந்துகொண்டது போகிறபோக்கில் பேசப்பட்டதோடு சரி.

காயத்ரிக்குப் பிடிக்காத ஓவியாவோடு ஜூலி பழகக்கூடாது. ஆனால், இப்போது ஓவியாவோடு காயத்ரி நட்பாகிவிட்டார். ஜூலியோ, அறைக்கு வெளியே சோபாவில். இவ்வளவு நடந்தும் ஏன் காயத்ரியின் ஆணவம் கேள்விக்குள்ளாக்கப்படவே இல்லை? ஓவியா பேசும் கெட்ட வார்த்தைகள், 'அண்ணியா, பன்னிமாதிரி இருக்கு' என்பதையெல்லாம் விலாவாரியாக வினா எழுப்பிய கமல்ஹாசன், காயத்ரி ரகுராம் பேசிய மோசமான வார்த்தைகள் குறித்து ஏன் விமர்சிக்கவில்லை, அந்த வீடியோக்கள் ஏன் போட்டுக்காட்டப்படவில்லை? போட்டுக்காட்டப்பட்ட ஒரே ஒரு வீடியோவும் 'காயத்ரி அப்பாவி' என்று 'நிரூபிக்கவே' பயன்பட்டது ஏன்?

அதனாலேயே ஓவியாவும்கூட 'காயத்ரி கோபக்காரரே தவிர அப்பாவி. அவரை ஜூலி ஏமாற்றிவிட்டார், தூண்டிவிட்டார்' என்று நம்புகிறார். காயத்ரியின் செய்கைகளும் வார்த்தைகளும் அம்பலப்படுத்தப்படாததற்கு 'அவர் ஒரு வில்லியைப்போல நடந்துகொள்கிறார். அப்போதுதான் நிகழ்ச்சி சுவாரஸ்யமாக இருக்கும்' என்ற 'டி.ஆர்.பி' காரணம் மட்டும்தானா? இப்போது அவர் 'வில்லி'கூட இல்லையே, 'குணச்சித்திர நடிகை' ஆகிவிட்டாரே? காயத்ரியைக் காப்பாற்றுவதற்கு வேறு காரணங்களும் உள்நோக்கங்களும் இருந்தால் அது அநீதி இல்லையா?

இப்போது பொம்மை செய்தார், பொட்டுக்கடலை சட்னி செய்தார் என்று ஏதோ காரணங்களைச் சொல்லி காயத்ரியை சின்ன பிக்பாஸ் ஆக்கிவிட்டார்கள். ஆர்த்தி, நமீதா, கஞ்சா கருப்பு போன்றவர்களை எல்லாம் வெளியேற்றிவிட்டு, ஜூலியை  வில்லியாக்கிவிட்டு காயத்ரியை நியாயப்படுத்துவது, ரிப்போட்டர் ஆக்குவது, சின்ன பிக்பாஸ் ஆக்குவது ஆகியவற்றின் பின்னணிதான் என்ன?

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement