வெளியிடப்பட்ட நேரம்: 17:59 (28/07/2017)

கடைசி தொடர்பு:17:59 (28/07/2017)

அந்த செல்போன் எங்கே? நடிகை கடத்தப்பட்ட வழக்கில் திணறும் கேரள போலீஸ்!

கேரள நடிகை கடத்தப்பட்டு பாலியல் தொல்லைக்கு உள்ளான வழக்கில் நடிகர் திலீப் கைது செய்யப்பட்ட நிலையில், வழக்கு தொடர்பான ஆதாரத்தை போலீஸார் தேடி வருகிறார்கள்.

dileep

கடந்த பிப்ரவரி 17-ம் தேதி கேரளாவை பரபரப்புக்கு உள்ளாக்கிய நடிகை கடத்தல் சம்பவம் நடைபெற்றது. இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்திய போலீஸார் பல்சர் சுனில் என்ற குற்றவாளியைக் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணைக்குப் பின்னர், நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார். பின்பு அவர் ஆலுவா சப்-ஜெயிலில் அடைக்கப்பட்டார். அவரது நீதிமன்றக் காவல் ஆகஸ்ட் 8-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், இந்த வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லாததால் கேரள போலீஸார் கவலையில் உள்ளனர். நடிகர் திலீப் கைது செய்யப்பட்ட பின்னர், அவருக்கு நெருக்கமான பலரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். திலீப்பின் மனைவி காவியா மாதவனிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அவரது அலுவலகத்திலும் போலீஸார் சோதனை நடத்தினார்கள். ஆனால், போலீஸாருக்கு இந்த வழக்கு தொடர்பாக எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. 

இந்த வழக்கில் இதுவரை எந்த ஆதாரமும் கிடைக்காததால், முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. கடந்த முறை திலீப் ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தபோது பதில் மனுத் தாக்கல் செய்த போலீஸார், ‘இந்த வழக்கில் மிக முக்கியமான ஆதாரம், நடிகையை துன்புறுத்தியபோது எடுக்கப்பட்ட வீடியோ. அந்த வீடியோ எடுக்கப்பட்ட மொபைல் போன், மெமரி கார்டு போன்றவை இதுவரை கைப்பற்றப்படவில்லை. திலீப்புக்கு நெருக்கமானவர்களிடம் இந்த முக்கிய ஆதாரம் இருப்பதால் அவரை வெளியே விட்டால் சாட்சியத்தைக் கலைத்து விடுவார். அதனால், அவருக்கு ஜாமீன் கொடுக்கக் கூடாது’ என வாதிட்டனர்.

அதன்படி கடந்த முறை திலீப்பின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த நிலையில், நடிகர் திலீப் சார்பாக அடுத்த வாரம் மீண்டும் ஜாமீன் மனுத் தாக்கல் செய்யப்பட உள்ளது. அந்த சமயத்தில் ஜாமீன் மனுவை எதிர்க்க காவல்துறை சார்பாக எந்த வலுவான ஆதாரமும் இல்லாததால், திணறி வருகின்றனர். நடிகைக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்தப்போது எடுக்கப்பட்ட வீடியோவுடன் அந்த செல்போன் வெளிநாட்டுக்குக் கடத்தப்பட்டு இருக்கக் கூடும் என போலீஸார் கருதுகின்றனர். நடிகர் திலீப்பின் நண்பர்கள் பலர் வெளிநாடுகளுக்குச் சென்றதால் அவர்கள் மூலமாக அந்த செல்போன் கடத்தப்பட்டு இருக்கலாம் என போலீஸார் கருதுகின்றனர்.

ஆனாலும், அதற்கான ஆதாரம் எதுவும்  கிடைக்காததால், அடுத்த கட்டமாக யாரிடம் விசாரணை நடத்துவது எனத் தெரியாத நிலையில் உள்ளனர். சர்ச்சைக்குரிய அந்த மொபைல் போன் குறித்து போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். அது கிடைத்தால் மட்டுமே காவல்துறையினரால் இந்த வழக்கை அடுத்த கட்டத்துக்கு நகர்த்த முடியும் என்பதே தற்போதைய நிலை..