'கொடைக்கானல் போர்க்களமாகிவிடும்'- இரோம் சர்மிளா திருமணம் எதிர்ப்புக்கான ஆதாரம் தாக்கல்!

இரும்பு பெண்மணி இரோம் சர்மிளா, தனது காதலர் தேஸ்மந்த் கொட்டின்கோ-வை திருமணம் செய்துகொள்வதற்காக, கடந்த ஜூலை 12-ம் தேதி கொடைக்கானல் சார்பதிவாளர் அலுவலகத்தில் மனு செய்திருந்தார். இவர்களது மனு, சார்பதிவாளர் அலுவலக அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டது. இந்திய திருமண சட்டப்படி, 'மனுதாரரின் திருமணத்தில் ஆட்சேபனை இருப்பவர்கள் முப்பது நாள்களுக்குள் தங்களது எதிர்ப்பைத் தெரிவிக்கலாம்' என அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இரோம் சர்மிளா மனு செய்த அடுத்தநாளே, கொடைக்கானல் பேத்துப்பாறையைச் சேர்ந்த தே.மு.தி.க பிரமுகரான மகேந்திரன் இவர்களின் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மனு ஒன்றை அளித்தார். அதைப் பெற்றுக்கொண்ட சார்பதிவாளர் ராஜேஷ், எதிர்ப்புக்கான காரணங்களை ஆதாரங்களுடன் ஜூலை 28-ம் தேதி, சார் பதிவாளர் அலுவலகத்தில் அளிக்க வேண்டும் என அறிவுறுத்தியிருந்தார்.

அதன்படி இன்று, சார் பதிவாளரிடம் தனது எதிர்ப்புக்கான ஆதாரங்களைக் கொடுத்தார் மகேந்திரன். பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய மகேந்திரன், ''கொடைக்கானல் ஒரு சர்வதேச சுற்றுலாத் தலமாக இருக்கிறது. சுற்றுலாப் பயணிகளை நம்பித்தான் அனைத்து தொழில்களும் இங்கு நடைபெற்று வருகிறது. அதை நம்பி, சுமார் ஒரு லட்சம் பேர் வாழ்கிறார்கள். இந்நிலையில் இரோம் சர்மிளா - தேஸ்மந் கொட்டின்கோ திருமணம் இங்கே நடைபெற்றால், கொடைக்கானல் போர்க்களமாகிவிடும். அதன்மூலம், கொடைக்கானல் மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும் அபாயம் இருக்கிறது. இதற்கான ஆதாரங்களைப் புகைப்படங்களாகவும் வீடியோவாகவும் சார் பதிவாளரிடம் கொடுத்துள்ளேன். இதைப் பெற்றுக்கொண்ட சார்பதிவாளர், உங்கள் ஆதாரங்கள் அனைத்தும் அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்படும் என கூறினார்" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!