வெளியிடப்பட்ட நேரம்: 17:03 (28/07/2017)

கடைசி தொடர்பு:18:42 (09/07/2018)

முதல்வர் பழனிசாமி பங்கேற்ற அரசு விழாவில் ஏன் அந்தச் சடங்குகள் இல்லை?

 

 

                                           முதல்வர் பங்கேற்ற அரசுவிழா பேனர் (வட்டத்தில் திட்ட மதிப்பு)

மிழ்த்தாய் வாழ்த்தும் தேசிய கீதமும் இசைக்காமல் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற அரசு விழா, சென்னை திருவொற்றியூரில் இன்று காலை இனிதே நடந்து முடிந்துள்ளது. 

530 மீட்டர் மேம்பாலத்தை ஆறு ஆண்டுகளாகக் கட்டினர்

திருவொற்றியூர் பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கைகளில் ஒன்றான 'மாட்டு மந்தை' மேம்பாலத் திறப்பு விழாவில் இது அரங்கேறியது. கடந்த 2011-ம் ஆண்டில் அப்போதைய முதலமைச்சர் மறைந்த ஜெயலலிதா, இந்தப் பாலத்துக்கு அடிக்கல்நாட்டி ரூ.47 கோடியைத் திட்டப் பணிக்காக ஒதுக்கீடு செய்தார். வெறும் 530 மீட்டர் நீளமே கொண்ட இந்த மேம்பாலப்பணிகளை, கடந்த ஆறு ஆண்டுகளாக இழுத்தடித்து, கட்டடத்துக்கு சாரம் கட்டுவதுபோல் ஆமைவேகத்தில் கட்டிக்கொண்டிருந்தனர். ஏறக்குறைய இந்த மேம்பாலப்பணிகள் சவலை மாடு நடப்பதைப்போலவே நடந்ததால், தி.மு.க., பா.ம.க., கம்யூனிஸ்ட்டுகள் என அடுத்தடுத்து பல்வேறு கட்சியினரும் பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இதனால், மேம்பாலப் பணி சற்றே சூடுபிடித்தது. மேம்பாலமும் கட்டிமுடிக்கப்பட்டாகிவிட்டது. ஆனால், திருவொற்றியூர் பகுதி மக்களுக்கு அடுத்து புதிதாக இன்னொரு சோதனை ஏற்பட்டது. பணிகள் முடிக்கப்பட்ட நிலையில் இருந்த மேம்பாலத்தை முறைப்படி திறந்து வைக்காமல், அப்படியே மூடிவைத்திருந்தனர் பொதுப்பணித்துறை அதிகாரிகள்.

கட்டிமுடித்தும் திறக்கவில்லை! முதல்வர் 'தேதி' இல்லை!

                                                முதல்வர் பங்கேற்ற அரசுவிழா பேனர் ( வட்டத்தில் திட்ட மதிப்பு)

'முதல்வரின் தேதி கிடைக்கவில்லை', 'மேம்பாலத்தை யார் வந்து திறப்பது? என இன்னும் முடிவாகவில்லை', 'ஆகஸ்ட் மாதத்துக்குப் பின்னரே, பாலம் திறக்கப்படும்' என்றெல்லாம் மக்கள் மத்தியில் 'டாக்' ஓடியது. 'மேம்பாலத்தை நாங்களே திறந்துவிடுகிறோம்' என்று அறிவித்த பா.ம.க-வினர், அந்தப் பகுதியில் மிகவும் வயதான தம்பதியை அழைத்துவந்து, ரிப்பன் வெட்டித் திறக்க மேம்பாலப் பகுதிக்கு வந்தனர். ஆனால், அவர்களை போலீஸாரும் அதிகாரிகளும் மேம்பாலத்தைத் திறக்கவிடாமல் தடுத்துவிட்டனர். இதையடுத்து, மேம்பாலத்துக்கு இருபுறமும் 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டது. திருவொற்றியூர் தொகுதி தி.மு.க-வினரோ இந்தப் பிரச்னையை விடுவதாகயில்லை. மேம்பாலத்தின் அருகிலேயே இரவு நேரங்களில் தீப்பந்தங்களுடன் காவல் இருக்க ஆரம்பித்து விட்டனர். 'போலீஸார் சற்று அசந்தால் மேம்பாலத்தைத் திறந்துவிட வேண்டியதுதான்' என்ற நிலையில் தி.மு.க-வினர் காவல்காத்து வரும் தகவல் பரவியதால், அந்தப் பகுதி முழுவதுமே எப்போதும் பதற்றநிலை தொடர்ந்தது. 

                           ஆர்.கே.நகர் தொகுதியிலும் திறப்புக்காக காத்திருந்த மேம்பாலம்

 பொதுமக்களுக்கு என்ன பாதிப்பு ?
"மேம்பாலத்துக்கு நிதி ஒதுக்கியது, ஜெயலலிதா ஆட்சியில்தான். பா.ம.க-வினர் இதைத் திறக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம்" என்று லோக்கல் அ.தி.மு.க-வினர் ஒருபக்கம் மல்லுக்கு நின்றனர். இதனால், "திருவொற்றியூர் 'மாட்டுமந்தை' மேம்பாலத்தைத் திறப்பதற்கு முன் அந்தப் பகுதியில் ஏதாவது கலவரம் வெடிக்கலாம்" என்ற தகவலை அந்தப் பகுதியின் உளவுத்துறை போலீஸார் மேலிடத்துக்குத் தெரிவித்து உஷார் படுத்தினர்.சென்னை ஆர்.கே.நகர் தொகுதி, கொருக்குப்பேட்டை மேம்பாலப் பணியும் இதேபோல்தான் நத்தை வேகத்தில் பல ஆண்டுகளாக நகர்ந்தது. ஒருவழியாக மேம்பாலத்தைக் கட்டி முடித்தபின்னும் அதை திறந்துவைக்க மாதக்கணக்கில் இழுத்தடித்தனர்.  ஒரு கட்டத்தில் பொதுமக்களே அந்த மேம்பாலத்தைத் திறக்கும் சூழ்நிலை உருவானதால் அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா, அதை அவசரகதியில் திறந்து வைத்தார். திருவொற்றியூரில் மாட்டுமந்தை மேம்பாலத்தைத் திறக்க  கட்சிகள் ஒருபக்கம் போராட்டங்களைக் கையில் எடுத்தாலும், அவர்களை விஞ்சும் வகையில் பொதுமக்களும் 'மாட்டுமந்தை' மேம்பாலத்தைத் திறப்பதற்கு எல்லாவகையிலும் ஆர்வம் காட்டினர். பொதுமக்கள் வேகத்தின் பின்னணியில் ஒரு வலுவான காரணம் உண்டு. திருவொற்றியூரில் இருந்து மாதவரம், கொடுங்கையூர், செங்குன்றம், புழல், சோழவரம், திருவள்ளூர் பகுதிகளுக்குச் செல்ல மணலிசாலை சந்திப்பு- திருவொற்றியூர் மாட்டுமந்தை ரெயில்வே கேட்டை கடந்துதான் போகவேண்டியிருந்தது. புறநகர் ரயில்கள், வடமாநில எக்ஸ்பிரஸ் ரெயில்கள், சரக்கு ரெயில்கள் எனத் தினமும் நூறுமுறை ரயில்கள் இந்தத் தண்டவாளத்தில் கடந்து செல்வதால், கேட் பூட்டப்பட்டு, அந்த வழியாகச் செல்லும் மக்களுக்கு மிகுந்த சிரமம் ஏற்பட்டது. அதன் காரணமாகவே பொதுமக்கள் தாங்களே பாலத்தைத் திறக்க முடிவெடுத்தனர். 

தமிழ்த்தாய் வாழ்த்து - தேசியகீதம் இரண்டுமே இல்லை

ஒருபக்கம், எண்ணூர் விரைவுச் சாலை திட்டப் பணிகளுக்காக திருவொற்றியூர் நல்லதண்ணீர் ஓடை குப்பத்தில் வீடுகளைக் காலிசெய்த மக்களுக்கு இன்னும் ஆட்சியாளர்கள் மாற்று இடம் ஒதுக்கிக் கொடுக்கவில்லை. இதற்காகவும் அந்தப் பகுதியில் அடிக்கடி மக்கள் போராட்டம் நடந்துவருகிறது. சி.பி.சி.எல். நிறுவனத்தாரின் ஆயில் குழாய் பதிக்கும் பணிகளை எதிர்த்தும் மக்கள் போராட்டம் அவ்வப்போது தொடர்ந்துகொண்டிருக்கிறது. இந்தச் சூழ்நிலையில்தான் 'மாட்டுமந்தை' மேம்பால திறப்புக்காக மக்களும் எதிர்க்கட்சியினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இத்தனை களேபரமான ஒரு சூழ்நிலை போய்க்கொண்டிருக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை வரவேற்று தொகுதியின் முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. குப்பன் வைத்த பேனரில், மேம்பால மதிப்பு ரூ.47 கோடி... பேனரின் ஒரு மூலையில் டி.டி.வி.தினகரன் சிரித்துக்கொண்டிருந்தார். மந்திரி பெஞ்சமின்  சார்பில் வைக்கப்பட்ட பேனரில், மேம்பால மதிப்பு  ரூ.52 கோடி என்றிருந்தது... இதில் ஜெயலலிதா மட்டும் சிரித்துக்கொண்டிருந்தார். மேம்பாலக் கட்டுமானப்பணியில் இருந்த ஐந்து கோடி வித்தியாசத்தைப் பார்த்த பொதுமக்கள் ஆளாளுக்கு ஒரு 'கண்டுபிடிப்பு' கதையைச் சொல்லிச் சென்றனர். திருவொற்றியூர் தொகுதியைப் பொறுத்தவரை மக்கள் பிரச்னை என்பது தோளில் போட்ட துண்டுபோல இல்லாமல் பெரிய சைஸ் போர்வையாகிவிட்டதால், இன்று நடைபெற்ற மேம்பாலத் திறப்புவிழாவுக்கு போலீஸார் நூற்றுக்கணக்கில் குவிக்கப்பட்டிருந்தனர். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் சில எம்.பி-க்கள், எம்.எல்.ஏ-க்கள் பங்கேற்ற இந்த அரசு விழா பதற்றம் நிறைந்ததாகவே காணப்பட்டது. 'மாட்டுமந்தை' மேம்பாலம் திறக்கப்படுவதற்கு முன்னதாகத் தமிழ்த்தாய் வாழ்த்தும் இல்லை. விழா முடிந்ததும் தேசிய கீதமும் இசைக்கப்படவில்லை. "இது அரசு விழாதானா? குறிப்பாக, நம் தமிழ்நாட்டில் நடக்கும் விழாதானா?" என்று மக்கள் வேதனையுடன் பேசிக்கொண்டதைப் பார்த்தபோது, மிகுந்த வேதனை ஏற்பட்டது. 

 


டிரெண்டிங் @ விகடன்