வெளியிடப்பட்ட நேரம்: 20:27 (28/07/2017)

கடைசி தொடர்பு:20:27 (28/07/2017)

இறந்தவர்களைக் குளிப்பாட்டக்கூட தண்ணீர் இல்லை - திண்டாடும் திருப்புவனம் மக்கள்!

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் இந்திரா நகர் பகுதியில் ஐந்நூறுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் கடந்த மூன்று மாத காலமாக குடிப்பதற்கு மட்டுமின்றி அன்றாடத் தேவைக்குக் கூட தண்ணீர் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். "குடிதண்ணீர் பிரச்னைகளை உடனடியாக சரிசெய்ய வேண்டி ஆண்களும் ,பெண்களும் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்தார்கள். ஆனால் ஆட்சியர் இல்லாத காரணத்தால் மாவட்ட வருவாய் அதிகாரியிடம் மனு கொடுத்து முறையிட்டார்கள்.

மாவட்ட ஆட்சியரிடம் தண்ணீர் கேட்டு புகார் மனு கொடுக்க வந்த போது

அப்போது பேசிய பொதுமக்கள்  "தண்ணீர் இல்லாமல் இறந்தவர்களைக்கூட குளிப்பாட்ட முடியவில்லை. அந்த அளவிற்கு அவதிப்படுகிறோம்.வீடுகளில் உள்ள போர்வெல் பைப்புகளில் தண்ணிர் சுத்தமாக இல்லை. பிள்ளைகள் பள்ளிக்கூடம் செல்ல சிரமாக இருக்கிறது. திருவிழா, கல்யாணம் போன்ற நல்ல நிகழ்ச்சிகளுக்குத் தண்ணீர் விலை கொடுத்து வாங்கவேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம். நாங்கள் பல முறை பேரூராட்சியில் புகார் கொடுத்தாலும் அதிகார ஆணவத்தோடு பேசுகிறார்கள் அதிகாரிகள். எங்கள் பகுதியில் இருந்து வைகை ஆறு சுமார் இருநூறு மீட்டர் தூரம்தான். அங்கே உடனடியாக ஆழ்குழாய் கிணறு போட்டால் எங்களுக்கு விமோச்சனம் கிடைக்கும். இல்லையெனில் நாங்கள் வீட்டை காலி செய்து வேறு இடங்களுக்குச் செல்வதைத் தவிர வேறு வழி தெரியவில்லை' என்கிறார்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க