பிரதமரிடம் என்ன பேசினார் எடப்பாடி பழனிசாமி? - தகிக்கும் திருநாவுக்கரசர்

’தமிழகத்துக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடியிடம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நீட் தேர்வு குறித்து பேசினாரா’ என்று கேள்வியெழுப்பியுள்ளார் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர்.

Thirunavukarasar

இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், '’நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தலைமையில் இன்று நடைபெற்ற மனிதச் சங்கிலி ஆர்ப்பாட்டத்தை தடுத்து ஜி.ராமகிருஷ்ணனையும், அவரோடு மார்க்சிஸ்ட் தோழர்களையும் கைது செய்திருப்பது கண்டனத்துக்குரியது. ஜி.ராமகிருஷ்ணனை கைது செய்ததை தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன். 

நேற்றைய தினம் சேலத்தில் தி.மு.க. செயல் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலினைத் தடுத்து, கைது செய்தார்கள். அதேநேரத்தில் தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் மனிதச் சங்கிலி ஆர்ப்பாட்டம் தொடர்ந்து நடைபெற்றது. இன்று நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆர்ப்பாட்டத்தைத் தடுக்க வேண்டிய அவசியம், கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன ஏற்பட்டது. தமிழக அரசு குழப்பத்தின் உச்சியில் நின்று இரட்டை வேடம் போடுகிறது. பிரதமர் மோடியை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று சந்தித்து நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க கேட்டாரா, அதற்கு பிரதமர் சம்மதித்தாரா, தமிழக அரசு என்ன செய்யப்போகிறது. மத்திய அரசு என்ன செய்யப்போகிறது, தமிழக மாணவர்களின் எதிர்கால நலனை இந்த அரசு காவு கொடுக்கத் துணிந்துவிட்டதா. தமிழக அரசு இவற்றைத் தெரியப்படுத்த வேண்டும்.

தமிழக மாணவர்களின் நலன் காக்கப்பட வேண்டும். தமிழ்நாட்டின் பல்வேறு அரசியல் கட்சிகள் நடத்தும் ஆர்ப்பாட்டம், எழுப்பும் குரல் ஆகியவற்றை சாதகமாகப் பயன்படுத்தி மத்திய அரசுக்கு அழுத்தம் தருவதற்குப் பதிலாக, அறவழிப் போராட்டத்தில் ஈடுபடுபவர்களைக் கைது செய்வதும், போராட்டத்தை நசுக்க முயற்சி செய்வதும் எந்த வகையில் தமிழ்நாட்டுக்குப் பயன்படும். இத்தகைய ஜனநாயக விரோத, சட்டவிரோத தமிழக அரசின் செயலை தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் வன்மையாகக் கண்டிப்பதோடு, கைது செய்யப்பட்டுள்ள ஜி.ராமகிருஷ்ணனையும் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தோழர்களையும் எவ்வித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்'' என கேட்டுக்கொண்டுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!