Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

SHE Box மட்டுமே பாலியல் சீண்டல்களை நிறுத்திவிடுமா? பெண்ணியவாதிகள் காட்டம்! #StopWomenHarassment

பாலியல்

மத்திய அரசு நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள், பாலியல் துன்புறுத்தல் குறித்து புகார் அளிப்பதற்காக, 'ஷி பாக்ஸ் (SHE-box' - Sexual Harassment Electronic Box) http://www.wcd-sh.nic.in என்ற இணையத்தளத்தை, மத்திய அமைச்சர் மேனகா காந்தி அறிமுகம் செய்துவைத்துள்ளார். இது, விரைவில் மாநில அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கும் விரிவடையும் எனத் தெரிவித்துள்ளார். 

இந்திய அளவில் பெண்கள் மீதான வன்கொடுமை அதிகரித்துவருவதை ஆய்வுகள் உறுதிசெய்துள்ளன. இதற்குத் தீர்வு காணும் ஒரு பகுதியாக, மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சரான மேனகா காந்தி, பாலியல் புகார்களைத் தெரிவிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளார். இந்த ஷி பாக்ஸில் தெரிவிக்கப்படும் புகார்கள்மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்துள்ளார். இந்த ஆன்லைனுக்குப் பெண்கள் அனுப்பும் புகார்கள் உடனடியாக உட்புற புகார்கள் குழுவுக்கு அனுப்பப்படும் என்றும் சொல்லப்படுகிறது. 

இங்கே நமக்குள் சில கேள்விகள் எழுகின்றன. இவ்வாறு புகார் தெரிவிக்கும் பெண்கள் பற்றிய தகவல்கள் வெளியில் கசியாமல் இருக்குமா? புகார் தெரிவித்துவிட்டு அந்தப் பணியிடத்தில் மனநிம்மதியோடு பணியாற்ற முடியுமா? அவர்களின் பணிப் பாதுகாப்புக்கு என்ன உத்தரவாதம்? 

மதுரை சோக்கோ அறக்கட்டளை துணை இயக்குநரும் மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான செல்வ கோமதி இதுபற்றி பகிர்ந்துகொள்கிறார். ‘‘நான் அஞ்சல் துறை அலுவலகத்தில், பெண்களுக்கு இயங்கும் ஆன்லைன் புகார் விசாரணைக் குழுவில் உறுப்பினராக உள்ளேன். நிரந்தர வேலை மற்றும் அதிகம் படித்த பெண்கள் தங்களுக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவு குறித்து தயக்கமின்றி வெளியில் சொல்கிறார்கள். இவர்கள் சந்திக்கும் பாலியல் தொந்தரவுகள் குறைவாகவே உளனன. அதே அலுவலகத்தில் தற்காலிகப் பணி மற்றும் சுகாதாரப் பணிகளில் உள்ள பெண்கள், பாலியல் தொந்தரவுகளுக்கு ஆளாகும்போது வெளியில் சொல்லவே பயப்படுகின்றனர். புகார் அளித்தால் வேலை போய்விடுமோ, சம்பளத்தை நிறுத்திவைத்துவிடுவார்களோ என்பது போன்ற பயம் அவர்களிடம் இருக்கிறது. இப்படியான பெண்களைக் குறிவைத்தே ஆண்கள் எல்லை மீறுவதும் பாலியல் தொந்தரவு செய்வதும் அதிகமாக உள்ளது. 

பாலியல்

இப்படியான சூழ்நிலையில் இந்த 'ஷி பாக்ஸ்' திட்டம் நிச்சயம் வரவேற்கத்தக்கது. ஆனால், மத்திய அரசு ஊழியர்களைவிடத் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள் அதிகளவில் பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாகின்றனர். குறிப்பாக, பெட்ரோல் பங்க், ஜவுளிக் கடை போன்ற இடங்களில் பணியாற்றும் பெண்களுக்குப் பணிப் பாதுகாப்பும் பாலியல் பாதுகாப்பும் கேள்விக்குறியாகவே உள்ளன. இவர்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதற்கான வாய்ப்புகளை மத்திய அரசு விரைந்து ஏற்படுத்த வேண்டும். அங்குள்ள பெண்கள் அச்சமின்றி தங்கள் பிரச்னைகளை தெரிவிக்கும் அமைப்புகள் உருவாக்கப்பட வேண்டும். 

ஆணும் பெண்ணும் இணைந்து பணியாற்றும் இடங்களில் ஓர் ஆண், பெண்ணைக் கையைப் பிடித்து இழுப்பது மற்றும் உடலால் வன்கொடுமைக்கு உள்ளாக்குவதும்தான் தண்டனைக்குரிய குற்றமாகப் பார்க்கப்படுகிறது. ஆனால், சொல்லாலும் செய்கையாலும் பல தொல்லைகளுக்குப் பெண்கள் ஆளாகிறார்கள். இவற்றை ஆதாரத்துடன் நிரூபித்து புகார் அளிக்கவும் முடியாத நிலைமை இருக்கும்போது, ஆன்லைன் புகார் வாய்ப்பினால் மட்டும் பாலியல் வன்கொடுமையிலிருந்து பாதுகாத்துவிட முடியும் என்று நினைப்பது சாத்தியமில்லை'' என்கிறார். 

பணியிடங்களில் பெண்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதற்கான சட்டம் 2013-ம் ஆண்டே இயற்றப்பட்டுவிட்டது. சட்டப்படி அனைத்து நிறுவனங்களிலும் பாலியல் புகார்களை விசாரிக்க விசாகா கமிட்டி அமைக்க வேண்டும் என்ற நடைமுறை உள்ளது. ''ஆனால், அது முழுமையாகச் செயல்படுத்தப்படவில்லை. இந்தச் சட்டத்தின்படி புகார் அளிக்கும் பெண், வேறு இடத்துக்குப் பணிமாறுதல் பெறலாம். அல்லது பிரச்னைக்குரிய நபரை வேறு இடத்துக்குப் பணிமாற்றம் செய்யலாம். புகார் அளிக்கும் பெண்ணுக்குப் பணிப் பாதுகாப்பு வழங்கும் வகையில் இந்தச் சட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பணிபுரியும் பெண்கள் மத்தியில் விழிப்புஉணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். பெண்ணைப் பாலியல் தொந்தரவு செய்வது தவறு, அப்படிச் செய்தால் சட்டப்படி என்னென்ன தண்டனைகள் உள்ளன என்பது குறித்த விழிப்புஉணர்வையும் பணியிடங்களில் ஏற்படுத்த வேண்டியது அவசியம்’’ என்கிறார் செல்வ கோமதி. 

'ஷி பாக்ஸ்' குறித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் பொதுச்செயலாளர் வாசுகி கூறுகையில், ‘‘பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை நடக்காமல் தடுப்பதற்கான எந்த வேலையையும் மத்திய அரசு செய்யவில்லை. 2013-ம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்தின் ஒரு பகுதியாக, அமைக்கப்பட்டிருக்கும் விசாகா குழு சரியாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. நிர்பயாவின் வழக்குக்குப் பின்பு இந்தச் சட்டம் குறித்து விவாதிக்கப்பட்டாலும், பணியிடங்களில் பெண்கள் பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து புகார் அளிக்கப் பெரிதாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. முறைப்படுத்தப்படாத நிறுவனங்களில் பணியாற்றும் பெண்களுக்கே இதுபோன்ற தொல்லைகள் அதிகம் ஏற்படுகிறது. இது குறித்தெல்லாம் கண்டுகொள்ளாத மத்திய அரசு, 'ஷி பாக்ஸ்' அமைத்திருப்பது கண்துடைப்பு நாடகம். 

பெண்களைப் பாலியல் வன்கொடுமைகளில் இருந்து பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை. பணியிடங்களில் பெண்களுக்குப் போதிய கழிப்பிட வசதி, நாப்கின் வசதி மற்றும் இன்சினரேட்டர்கள் அமைத்துத் தரவேண்டும். மாதவிடாய் நாட்களில் சோர்வுறும் தருணங்களில் அவர்களுக்கு ஓய்வு எடுப்பதற்கான வசதிகள் தரப்பட வேண்டும். அரசு, தனியார் என்று எந்த நிறுவனமாக இருந்தாலும், பெண்கள் வேலைசெய்யும் இடங்களில் இந்த வசதிகளைக் கட்டாயமாக்க வேண்டும். பெண்ணை சக மனுஷியாக மதிப்பதன் வெளிப்பாடுகளே இவை. சக மனுஷியான பெண் மீது அக்கறைகொள்ள வேண்டுமே தவிர, அவளை ஒரு பாலியல் பொருளாகத் துன்புறுத்துவது தவறு என்பதையும் ஆண் உணர்ந்துகொள்ள வேண்டும். பணியிடங்களில் ஏற்படுத்தப்பட வேண்டிய உடனடி மாற்றங்கள் இவையே. இதன் பிறகுதான் புகார் அளிப்பது, நடவடிக்கை குறித்தெல்லாம் பேச முடியும்’’ என்கிறார் வாசுகி. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close