ஓ.பன்னீர்செல்வம் வீட்டில் வெடிகுண்டு..! - அதிர்ச்சியில் அ.தி.மு.க புரட்சி தலைவி அம்மா அணி | Bomb Found at O Panneerselvam house

வெளியிடப்பட்ட நேரம்: 19:00 (28/07/2017)

கடைசி தொடர்பு:19:00 (28/07/2017)

ஓ.பன்னீர்செல்வம் வீட்டில் வெடிகுண்டு..! - அதிர்ச்சியில் அ.தி.மு.க புரட்சி தலைவி அம்மா அணி

வெடிகுண்டு

மிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சென்னையில் தங்கியிருக்கும் வீட்டுக்கு அருகே இன்று (28-07-2017) காலை வெடிகுண்டு போன்றதொரு பொருள் கண்டெடுக்கப்பட்டதால், அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

ஜெயலலிதா தொடர்புடைய வழக்குகளில் அவருக்கு எதிராக தீர்ப்பு வழங்கப்பட்டு, அ.தி.மு.க-வில் நெருக்கடி ஏற்பட்டபோது இரண்டு முறையும், ஜெ. மறைவைத் தொடர்ந்து ஒரு முறையும், ஆக மொத்தம் மூன்றுமுறை முதலமைச்சர் பதவி வகித்தவர் ஓ.பன்னீர்செல்வம். பின்னர் சசிகலா குடும்பத்தைவிட்டு பிரிந்து தனி அணியாகச் செயல்பட்டு வருகிறார். ஓ.பி.எஸுக்கு ஆதரவு தெரிவித்துவரும் எம்.பி., எம்.எல்.ஏகளுடன் அ.தி.மு.க புரட்சித்தலைவி அம்மா அணி என்ற பெயரில் அவர் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். சசிகலா குடும்பத்தை எதிர்த்து தனி அணியாகப் பிரிந்ததால், கட்சித் தொண்டர்கள், மக்களிடத்தில் ஓ.பி.எஸுக்கு செல்வாக்கு இருந்தது. ஆனால், மத்தியில் பி.ஜே.பி. அரசுக்கு ஆதரவு தெரிவித்து, தமிழகத்தில் நிலவும் பல்வேறு பிரச்னைகளில் ஓ.பி.எஸ் வாய்திறக்காமல் இருப்பது, தொண்டர்களையும், மக்களையும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. இதையடுத்து, இவரின் செல்வாக்கு படிப்படியாகக் குறைய ஆரம்பித்தது. முதல்வர் பதவியில் இருந்துபோது அளிக்கப்பட்டிருந்த அரசு வீட்டைக் காலிசெய்து ஓ.பி.எஸ், தற்போது சென்னை ஆழ்வார்பேட்டை வீனஸ் காலனியில் வசித்துவருகிறார். இங்கிருந்தபடியே தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தொண்டர்களைச் சந்தித்தும், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டும் அரசியல் பணியாற்றி வருகிறார் ஓ.பி.எஸ். 

சமீபத்தில், பெரியகுளம் அருகேயுள்ள லெட்சுமிபுரம் கிராமத்தில் இவரின் மனைவி விஜயலட்சுமி பெயரில் இருந்த மூன்று ராட்சத கிணறுகள் தொடர்பான பிரச்னை ஓ.பி.எஸ்ஸின் செல்வாக்குக்கு ஒருபேரிடியாக அமைந்தது. அந்தக் கிணறுகளில் இருந்து அதிகளவில் தண்ணீர் உறிஞ்சப்பட்டு வந்ததால், கிராம மக்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், இந்த கிணறுகளை கிராம மக்களுக்கு வழங்குவதாகச் சொல்லிவிட்டு, ரகசியமாக தனது நண்பர் சுப்புராஜ் என்பவரின் பெயருக்கு எழுதிக் கொடுத்துவிட்டார். விவரமறிந்த கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், தற்போது அந்தக் கிணறுகளை மீண்டும் கிராம மக்களுக்கே கொடுக்கப்போவதாகச் சொல்லி பிரச்னையை தற்காலிகமாக முடித்துள்ளார்.

இந்நிலையில் நேற்று (27-07-2017) முன்னாள் குடியரசுத்தலைவர் ஏ.பி.ஜே. அப்துல்கலாமின் மணிமண்டபத்தைத் திறந்துவைத்தப் பின் பிரதமர் மோடி மதுரை வந்தார். அப்போது ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் மோடியைச் சந்தித்தார். கலாமிற்கு மணிமண்டபம் திறந்து வைத்ததற்காக, பிரதமருக்கு நன்றி தெரிவித்ததாகவும், தமிழகத்தில்  'நீட்' தேர்வுக்கு விலக்கு அளிக்கும் பிரச்னை பற்றி பேசியதாகவும் பன்னீர்செல்வம் தெரிவித்தார். 

ஓ.பி.எஸ்

இந்த நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரின் வீட்டுக்கு அருகே, காலை பத்து மணியளவில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரித்தபோது, "பன்னீர்செல்வம் வீட்டுக்கு அருகில் ஒரு பிள்ளையார் கோயில் உள்ளது. அதன் அருகில் உள்ள செடிகளுக்கு மத்தியில் ஒரு பையில் சணல் சுற்றப்பட்ட நிலையில் வெடிகுண்டு போன்ற பொருள் கிடந்தது. இதையடுத்து, வெடிகுண்டு நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டனர். பின்னர், அதனைக் கைப்பற்றி ஆய்வு செய்தனர். முதலில் அது நாட்டு வெடிகுண்டு என்று தெரிவிக்கப்பட்டது. அதன்பிறகு அந்தப் பொருள் உண்மையான வெடிகுண்டு அல்ல என்றும், வெறும் சணல் மட்டுமே சுற்றப்பட்டு வீசப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறினர். அந்தப் பொருள் அங்கு எப்படி வந்தது என்றும், யார் கொண்டு வந்து வைத்தார்கள் என்றும் போலீஸார் விசாரணை நடத்திவருகிறார்கள் என்று ஓ.பி.எஸ் வீட்டில் பாதுகாப்புப் பணியில் ஈடுப்பட்டிருந்த காவலர்கள் தெரிவித்தனர்.

முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் சென்னையில் இல்லாத நிலையில், அவரின் வீட்டுக்கு அருகே வெடிகுண்டு போன்ற பொருள் கண்டெடுக்கப்பட்டதாக வெளியான செய்தியால் ஆழ்வார்பேட்டை பகுதியில் சற்றுநேரம் பரபரப்பு நிலவியது. அதிர்ச்சிக்குள்ளான மக்கள், சிறிதுநேரத்தில், 'அது வெடிகுண்டு அல்ல' என்று தெரிந்ததும் நிம்மதி அடைந்தனர்.


டிரெண்டிங் @ விகடன்