கோமாவில் இருந்து மீண்டவரின் ஆசை நிறைவேறுமா? டி.ஜி.பி-யிடம் மனு!

டி ஜி பியிடம்  மனு கொடுத்தபோது

தென் மண்டலத்தில் பணியாற்றும் காவல் துறையினரின் நீண்டநாள் குறைகளைக் கேட்பதற்காக டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் சமீபத்தில் மதுரை வந்தார். குறைகளைத் தெரிவிக்க 923 காவல் துறையினர் வந்திருந்தனர். அந்த நிகழ்ச்சியில், கான்ஸ்டபிள்கள்முதல் இன்ஸ்பெக்டர்கள்வரை கோரிக்கை மனுக்களை அளித்தார்கள். அப்போது டி.ஜி.பி-யிடம் மனு அளிக்கத் தட்டுத்தடுமாறி வந்த சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரைக் கைத்தாங்கலாக அழைத்துவந்தார் ஓர் இளம்பெண். அதைப் பார்த்து அனைவரும் அதிர்ச்சியடைந்தார்கள். போலீஸ் என்றாலே கம்பீரமாகப் பார்த்துப் பழகிய நமக்கு, அவரைப் பார்த்து அதிர்ச்சி ஏற்பட்டது. தனக்கு இதுபோன்றதொரு நிலை ஏற்பட்டுவிட்டதே என்பதை நினைத்து அவர் மருகுவது முகத்தில் தெரிந்தது. டி.ஜி.பி., அவரிடம் மனுவை வாங்கி ஆறுதலாகப் பேசினார்.

மனு கொடுத்துவிட்டு வந்தபின் அவரை ஓர் இருக்கையில் அமரவைத்தார்கள். அவருடைய நேம்பேஜில் பாண்டியன் என்றிருந்தது. அவருடன் வந்த இளம்பெண் ஜனனியிடம் பேசினோம், ''அவருடைய மகள்தான் நான். கரிமேடு காவல் நிலையத்தின் எஸ்.ஐ-யான அவர், எப்பவும் ஸ்டேஷன், ரவுண்ட்ஸ் என்று துடிப்புடன் இருப்பார். உடல் நோவு என்று என்றைக்குமே வீட்டில் இருந்ததில்லை. இந்த நிலையில்தான், கடந்த வருடம் அவருக்குக் காய்ச்சல் வந்தது. சாதாரண காய்ச்சல் என்று நினைத்தோம். பிறகுதான் அது மூளைக்காய்ச்சல் என்று தெரிந்தது. அதிலிருந்து அவர் உடல் தளர்ந்துவிட்டது. ஒருவருடமாகக் கோமாவில் இருந்துவிட்டுக் கடவுள் புண்ணியத்தில் இப்போதுதான் மீண்டு வந்திருக்கிறார். எவ்வளவோ சிகிச்சை எடுத்தும் பலனில்லை. இப்போதுதான் ஓரளவு தேறி வந்துள்ளார். அவருக்கு எடுக்க வேண்டிய அனைத்து லீவையும் எடுத்துவிட்டோம். இனி லீவு எடுக்க வாய்ப்பில்லை. இன்னொரு நபரின் உதவி இல்லாமல் அவரால் எங்கும் போக முடியாது. அவர் ரிடையர்ட் ஆக இன்னும் நான்கு வருடங்கள் இருக்கின்றன. பொருளாதார ரீதியாகவும் நிறைய இழந்துவிட்டோம். அவர், பார்த்த வேலையை நான் பார்க்க வேண்டும் என்று விரும்புகிறார். என்னுடைய விருப்பமும் அதுதான். அதனால்தான் இஞ்சினீயரிங் முடித்துவிட்டு வேறு எந்த வேலைக்கும் முயற்சி செய்யாமல் போலீஸ் வேலைக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறேன். ஏற்கெனவே ஒருமுறை எஸ்.ஐ செலக்‌ஷனுக்குச் சென்ற நான், அப்பா உடல்நலமில்லாததால் பிசிக்கல் டெஸ்ட்டுக்குப் போக முடியவில்லை. என்னுடைய கனவு, பேஷன் எல்லாமே போலீஸ் அதிகாரியாவதுதான். அதனால், என் அப்பாவின் உடல்நிலையைப் பார்த்து, அவருடைய ஆசையை நிறைவேற்றும் வகையில் எனக்குக் கருணை அடிப்படையில் எஸ்.ஐ வேலை வழங்க ஆவன செய்யவேண்டும். அதற்காகத்தான் மனு கொடுக்க வந்தோம். இதுபோலச் சிலருக்குப் பணி வழங்கப்பட்டு இருப்பதாகச் சொல்கிறார்கள். அந்த அடிப்படையில், எனக்கும் பணி வழங்க வேண்டுமென்று கோரிக்கை வைத்துள்ளோம். எங்கள் இருவரின் ஆசையையும் நிறைவேற்றி வைக்க வேண்டும்'' என்றார்.

காவல் துறையில் 25 வருடங்கள் பணிபுரிந்து இன்று நோய்வாய்ப்பட்டு முடங்கியுள்ளவரின் மனவேதனை எப்படி இருக்கும் என்பது சக காவலர்களுக்குக் கண்டிப்பாகத் தெரியும். காவல் துறை தலைவரும் இவர்களின் கோரிக்கையைப் பரிசீலிப்பார் என்கிறார்கள். காவல் துறை தலைமை இருவரின் கனவையும் நிறைவேற்றி வைக்க வேண்டும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!