கமல், ரஜினி கவுன்சிலராகக்கூட ஜெயிக்க முடியாது! -தனியரசு தடாலடி தகவல்! | Kamal and Rajini could not win in a councillor post in tamilnadu, says Thaniyarasu

வெளியிடப்பட்ட நேரம்: 21:05 (28/07/2017)

கடைசி தொடர்பு:21:05 (28/07/2017)

கமல், ரஜினி கவுன்சிலராகக்கூட ஜெயிக்க முடியாது! -தனியரசு தடாலடி தகவல்!

தமிழகத்தில் ஒப்பனையில் இருந்த சினிமாக்காரர்களை நம்பி வாக்களித்த நிலைமை மாறிவிட்டது. கமல், ரஜினி ஆகியோர் தேர்தலில் போட்டியிட்டால் கவுன்சிலராகக் கூட ஜெயிக்க முடியாது எனத் தனியரசு தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ-வான கே.ஆர்.ராமசாமி தலைமையிலான தமிழக சட்டமன்ற பொதுக்கணக்குக் குழு நெல்லை மாவட்டத்தில் இன்று பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டது. எம்.எல்.ஏ-க்களான நட்ராஜ், தனியரசு, ஆஸ்டின், தேன்மொழி, ரேவதி ஆகியோரைக் கொண்ட இந்தக் குழுவினர் நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். 

கணக்குக் குழு

இந்தக் குழுவினரிடம் தி.மு.க-வைச் சேர்ந்த எம்.எல்.ஏ-க்களான டி.பி.எம்.மைதீன்கான், ஏ.எல்.எஸ்.லட்சுமணன், பூங்கோதை ஆகியோர் தங்களுடைய தொகுதிகளின் பிரச்னைகள் குறித்து மனு அளித்தனர். அதிகாரிகளுடனான ஆலோசனைக்குப் பின்னர் பொதுக்கணக்குக் குழுவினர் செய்தியாளர்களிடம் பேசினர். குழுவின தலைவரான கே.ஆர்.ராமசாமி கூறுகையில், ‘தமிழகத்தில் போதுமான வளர்ச்சி இல்லை. இந்த ஆட்சியாளர்களுக்கு அவர்களைத் தக்க வைப்பதே சிக்கலாக இருப்பதால் மக்களுக்கான வளர்ச்சிகள் எதுவுமே நடக்கவில்லை’ என்றார். 

அப்போது குறுக்கிட்ட அ.தி.மு.க-வைச் சேர்ந்த எம்.எல்.ஏ-வான நட்ராஜ், ’நெல்லையில் உள்ள சாலைகள் நன்றாகத்தானே இருக்கின்றன?’ என்றார். அதற்குப் பதிலளித்த கே.ஆர்.ராமசாமி, ‘நான் ஒட்டுமொத்த தமிழகத்தைதான் குறிப்பிட்டேன். தமிழகத்தில் வளர்ச்சி இல்லை. ஆட்சியாளர்களுக்கு ஏகப்பட்ட பிரச்னைகள் இருப்பதால் அதனை மீறி அவர்களால் எதையும் செய்ய முடியவில்லை” என்று தெரிவித்து அந்த விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

தொடர்ந்து பேசிய அவர், ‘’நெல்லை மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளுக்குள் எந்தவிதத் தடையும் இல்லாமல் செல்ல முடிகிறது. ஆனால், இங்குள்ள கல் குவாரிகள் மற்றும் தாதுமணல் குவாரிகளுக்குள் செல்லவே முடியாத நிலை இருக்கிறது. அங்கு போனாலே நம்மை வித்தியாசமாகப் பார்க்கிறார்கள். குவாரிகளில் நடக்கும் பிரச்னைகளுக்கு அரசியல்வாதிகளின் தலையீடு மற்றும் அதிகாரிகளின் முறைகேடு காரணமாக உள்ளது. இதனை தமிழக அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்வோம்’’ என்றார்.

பொது கணக்குக் குழு

தொடர்ந்து பேசிய தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவைத் தலைவரான தனியரசு எம்.எல்.ஏ., ‘’தமிழகத்தில் முன்பு இருந்த நிலைமை இப்போது இல்லை. சினிமா நடிகர்களை நம்பி அறியாமையில் மக்கள் வாக்களித்த காலம் முடிவடைந்து விட்டது. முன்னர், ஒப்பனையை உண்மை என்று நம்பி மக்கள் வாக்களித்தார்கள். இப்போது அந்த நிலைமை இல்லை. அறிவு சார்ந்த அரசியலுக்கு மக்கள் வந்து விட்டார்கள். கமல், ரஜினி ஆகியோர் அரசியலுக்கு வந்தால் அவர்களால் கவுன்சிலராகக் கூட ஜெயிக்க முடியாது என்பதுதான் தற்போதைய தமிழகத்தின் நிலைமை’’ என்று தெரிவித்து சர்ச்சையைக் கிளப்பினார். 

இந்தக் குழுவினர் நெல்லை மாவட்டத்தில் நடக்கும் திட்டங்களைப் பார்வையிட்டதுடன், புதிய திட்டங்கள் தொடர்பாக பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கொடுத்த மனுக்களையும் பெற்றுக் கொண்டனர்.