"கீழடி அகழ்வாராய்ச்சி" வெறும் கண்துடைப்பு நாடகமா?

கீழடி

'கீழடியில் கண்டெடுக்கப்பட்ட பொருள்கள் சுமார் 2,200 வருடங்கள் பழமையானவை' என்று அமெரிக்காவைச் சேர்ந்த ஆராய்ச்சி நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. இரண்டே இரண்டு பொருள்களை வைத்து மட்டுமே கீழடியின் தொன்மையைச் சொல்லிவிட முடியாது. அந்தப் பகுதியில் தொடர்ந்து ஆராய்ச்சிகள் நடத்தப்பட வேண்டும். அதன்பிறகே. கீழடியின் உண்மையான தொன்மையைக் கணக்கிடமுடியும் எனத் தற்போது பலரும் கூறி வருகின்றனர்.

"மதுரை அருகேயுள்ள கீழடி என்ற இடத்தில், கண்டெடுக்கப்பட்ட பொருள்களின் காலத்தைக் கண்டறிய, அவை ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டுள்ளனவா?" என்று நாடாளுமன்றத்தில் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கேள்வி எழுப்பியிருந்தார். இதையடுத்து கீழடியில் கண்டெடுக்கப்பட்ட இர‌ண்டு கார்பன்‌ மாதிரிகளின் காலத்தைக் கண்டறிய அமெரிக்காவின் ஃபுளோரிடாவில் உள்ள 'பீட்டா அனலடிக்' என்ற நிறுவனத்திற்கு பரிசோதனைக்காக அவை அனுப்பிவைக்கப்பட்டன. அந்தப் பரிசோதனையின் முடிவுகளை மத்திய கலாசாரத்துறை இணையமைச்சர் மகேஷ் சர்மா நேற்று வெளியிட்டார். அதில் "கீழடி அகழ்வாராய்ச்சி பகுதியில் கண்டெடுக்கப்பட்ட ஒரு பொருள் 2,160 ஆண்டுகளுக்கும், மற்றொரு பொருள் 2,220 ஆண்டுகளுக்கும் முற்பட்டவை. கரிம பகுப்பாய்வு சோதனையில் கீழடி நகர நாகரிகம் கி.மு. இரண்டாம் நூற்றாண்டுக்கு முந்தையது என்பது உறுதிபடுத்தப்பட்டது" என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

காவிரிப் பூம்பட்டினம் அகழ்வாராய்ச்சிக்குப் பிறகு மத்திய தொல்லியல் துறை தமிழகத்தின் கீழடியில்தான் ஆய்வு நடத்தி இருக்கிறது. கீழடியில் கண்டுபிடிக்கப்பட்ட தொல்லியல் மேடானது, கிட்டத்தட்ட 110 ஏக்கர் பரப்பளவைக் கொண்டது. கி.பி. 300-ம் ஆண்டு தொடங்கி பத்தாம் நூற்றாண்டு வரையிலான தடயங்கள் கிடைத்தன. ஆனால், கீழடியில் அகழ்வாராய்ச்சிப் பணிகள் தடுத்து நிறுத்தப்பட்டன. கீழடியில் தொடர்ந்து அகழ்வாராய்ச்சி நடத்த வேண்டும் எனப் பல்வேறு அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன. இதையடுத்து, அங்கு அகழ்வாராய்ச்சிப் பணிகளை மேற்கொண்டிருந்த தொல்லியல் கண்காணிப்பாளர் அமர்நாத், அந்தப் பதவியில் இருந்து மாற்றப்பட்டு, துணை கண்காணிப்பாளராக இருந்த ஸ்ரீராம் பணியில் அமர்த்தப்பட்டார். அதன்பிறகு மத்திய தொல்லியல்துறை அகழ்வாராய்ச்சிக்கு அனுமதியளித்தது. தற்போது, கீழடியில் பெயரளவிற்கு மட்டுமே ஆராய்ச்சி நடப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அங்கு கண்டெடுக்கப்பட்ட பொருள்கள் சுமார் 2200 வருடங்கள் பழமையானவை நிரூபணமாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து, மத்திய தொல்லியல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "கீழடியில் இரண்டு சதவிகிதம் மட்டுமே அகழ்வாராய்ச்சி நடத்தப்பட்டது. இரண்டு வருடங்கள் ஆராய்ச்சி நடத்தியதற்கே 5,300 தொன்மையான பொருள்கள் கிடைத்திருக்கின்றன என்றால், இன்னும் பத்து முதல் இருபது வருடங்கள்வரை ஆராய்ச்சி நடத்தினால் என்னவெல்லாம் கிடைக்கும் என்பதை எண்ணிப்பார்க்க முடிகிறது. இன்னும் பல வருடங்கள் ஆராய்ச்சி நடத்தினால்தான் கீழடியின் உண்மையான காலத்தையும், அங்குவாழ்ந்த மக்களின் நாகரிகத்தையும் முழுமையாகக் கண்டறிய முடியும். இப்போது பரிசோதனையில் இருந்து கிடைத்திருக்கும் தகவல், மதுரைக்கு அருகே 'சங்ககால நகரம்' ஒன்று இருந்ததற்கான ஆதாரம் மட்டுமே. கீழடியில் முழுமையாக ஆறு மீட்டர் ஆழத்திற்கு அகழ்வாராய்ச்சி நடத்தப்பட வேண்டும். அப்போதுதான், இந்த நகரம் எப்படித் தோன்றியது என்பதை கண்டுபிடிக்க முடியும்" என்றார்.

கீழடி ஆராய்ச்சி

ஆய்வில் 70-க்கும் மேற்பட்ட தமிழ் பிராமி எழுத்துகள், பிராகிருத மற்றும் சமஸ்கிருத எழுத்துகள் கிடைத்திருக்கின்றன. ஆப்கான் நாட்டின் சூது பவளமும், ரோமானிய மண் பாண்டமும் 2,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ் பாரம்பர்யத்தில் இருந்திருக்கிறது என்ற தகவல் கிடைத்திருக்கிறது. கீழடியில் பத்தாம் நூற்றாண்டு வரையிலான தகவல்கள் மற்றும் தடயங்கள்தான் கிடைத்துள்ளன. அவற்றில் குறைந்தபட்சம் பத்து பொருள்களையாவது கார்பன் பகுப்பாய்வு முறைக்கு அனுப்பியிருக்க வேண்டும். ஆனால் இரண்டே இரண்டு பொருள்களை மட்டுமே மத்திய கலாசாரத்துறை பரிசோதனைக்கு அனுப்பியிருக்கிறது. அதற்கான முடிவுகள் மட்டுமே வந்து சேர்ந்திருக்கிறது. கீழடியில் இருக்கும் தொல்லியல்மேடு முழுவதும் அகழ்வாராய்ச்சி நடத்தி, அங்கு கிடைக்கும் பொருள்களைக் அங்கேயே அருங்காட்சியகம் அமைத்து பாதுகாக்க வேண்டும்" என்றார்.

தமிழர் நாகரிகம் பற்றிச் சொல்லும் கீழடி குறித்து, தொடர்ந்து எழுதியும், பேசியும் வரும் எழுத்தாளர் சு.வெங்கடேசனிடம் பேசியபோது, 'கீழடி அகழ்வாராய்ச்சி - தமிழக வரலாற்றைக் குறிக்கும் மிகமுக்கிய ஆவணம். ஆறு மீட்டர் தோண்டப்பட்ட தொல்லியல் குழியில், மூன்றாவது குழியில் எடுக்கப்பட்ட பொருள்களின் காலம், சுமார் 2,200 வருடங்களுக்கு முந்தையது என்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. அதற்கடுத்து நான்கு முதல் ஆறு மீட்டர் தோண்டினால்தான் மனிதர்கள் வாழ்ந்ததற்கான எச்சங்கள் கிடைக்கப்பெறும். அதையும் கார்பன் பகுப்பாய்வு பரிசோதனைக்காக அனுப்ப வேண்டும். இதை ஏன் மத்திய அரசு செய்யவில்லை? அதோடு, கீழடி ஆராய்ச்சியை முன்னெடுத்து நடத்திய தொல்லியல் கண்காணிப்பாளர் அமர்நாத்தை மீண்டும் கீழடியில் பணியமர்த்த மத்திய அரசு ஆவன செய்ய வேண்டும்" என்றார்.

தமிழரின் தொன்மையைப் பறைசாற்றும் கீழடியில் முழுமையாக அகழ்வாராய்ச்சி நடத்தப்பட வேண்டும். இங்கிருந்து மைசூருக்கு எடுத்துச் செல்லப்பட்ட பொருள்களை மீண்டும் இங்கேயே திரும்பக் கொண்டுவந்து அருங்காட்சியகம் அமைக்க வேண்டும். கீழடியில் குறிப்பிடப்படும் 110 ஏக்கர் தொல்லியல்மேடு முழுவதும் அகழ்வாராய்ச்சி செய்திட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கீழடி ஆராய்ச்சியைத் தொடங்கிய அமர்நாத்தை மீண்டும் கீழடிக்குப் பணியமர்த்த வேண்டும். இல்லையெனில், 2000 வருடங்கள் பழமையான நாகரிக இடத்தில், தற்போது நடந்துவரும் அகழ்வாராய்ச்சி வெறும் கண்துடைப்பாகவே இருக்கும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!