வெளியிடப்பட்ட நேரம்: 01:20 (29/07/2017)

கடைசி தொடர்பு:15:37 (09/07/2018)

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி-பர்வதவர்தினி அம்மன் ஆடி திருக்கல்யாணம்

 ராமேஸ்வரம் அருள்மிகு ராமநாதசுவாமி-பர்வதவர்த்தினி அம்மன் ஆடி திருக்கல்யாண வைபவம் மிக விமர்சையாக நடந்தது.

 நாட்டின் மிக முக்கியமான 4 சிவத்தலங்களில் தெற்கே அமைந்துள்ள ஒரே சிவத்தலம் ராமேஸ்வரம் ஆகும். காசிக்கு நிகரான புண்ணிய தலமாக விளங்குவதுடன்  இங்கு ராமர் ஈஸ்வரனை வழிப்பட்ட சிறப்பினையும் கொண்டுள்ள திருத்தலமாகும். இத்தகைய புனிதமும் புகழும் கொண்ட ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயில் ஆடி திருக்கல்யாண உற்சவம் கடந்த 17-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

ராமநாதசுவாமி-பர்வதவர்த்தினி திருக்கல்யாணம்

 திருவிழாவின் முக்கிய நாள்களான ஆடி அமாவாசை, தேரோட்ட தினங்களில் ஶ்ரீ பர்வதவர்த்தினி அம்மன் மண்டகபடிகளுக்கு எழுந்தருளியதுடன் ரதவீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்த  நிகழ்ச்சிகளும் நடந்தது. திருக்கல்யாணத்திற்கு முந்தைய நாளில் ராமர்தீர்த்தம், தபசு மண்டகபடிக்கு எழுந்தருளிய சுவாமி-அம்பாளுக்கு மாலை மாற்று வைபவமும் அன்று இரவு அலங்கார பூப்பல்லக்கில் பர்வதவர்த்தினி அம்மன் வீதி உலாவும் நடந்தது.

திருக்கல்யாண விழாவில் பங்கேற்ற பக்தர்கள்
 ஆடி 2-ம் வெள்ளிக்கிழமை தினமான இன்று திருக்கோயிலின் தெற்கு நந்தவன  திருக்கல்யாண மண்டபத்தில் கும்பலக்னத்தில் ஶ்ரீ பர்வதவர்த்தினி அம்மனுக்கும் ராமநாதசுவாமிக்கும் திருக்கல்யாண உற்சவம் விமர்சையாக நடந்தது. திருக்கோயில் பட்டர்கள் ஶ்ரீராம், விஜயகுமார் போகில், விஜய் ஆனந்த் ஆகியோர் வேத மந்திரங்கள் முழங்க திருக்கல்யாணத்தை நடத்தினர். அதைத் தொடர்ந்து சுவாமி-அம்பாளுக்குச் சிறப்பு தீபாராதனை நடந்தது.
 இந்நிகழ்ச்சியில் திருக்கோயில் தக்கார் குமரன் சேதுபதி, இணை ஆணையர் மங்கையர்கரசி, உதவி கோட்டப் பொறியாளர் மயில்வாகனன், மற்றும் நகரின் முக்கியப் பிரமுகர்கள், திருக்கோயில் ஊழியர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி -அம்பாளை வழிபட்டு சென்றனர்.