வெளியிடப்பட்ட நேரம்: 02:24 (29/07/2017)

கடைசி தொடர்பு:08:54 (29/07/2017)

தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் அன்னையின் அன்பின் முன்னே! 

தென்ஆப்பிரிக்காவில் சிங்க ராணி அரவணைப்பில் மான்குட்டி ஒன்று வளர்ந்து வருகிறது. தான்சேனியாவில் சிறுத்தைக்குட்டி ஒன்றை மற்றொரு பெண்சிங்கம் பாதுகாக்கிறது. 

மானை வருடிக்கொடுக்கும் சிங்கம்

தென்ஆப்பிரிக்காவில் க்ரேகர் வனத்துக்குச் சுற்றுலா சென்ற க்ரீம் மெத்லே மற்றும் அவரின் மனைவி, பெண் சிங்கம் ஒன்றின் அரவணைப்பில் மான்குட்டி ஒன்று இருப்பதைக் கண்டு வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளனர். சாலையில் வாகனத்தில் சென்று  கொண்டிருந்த போது,  சிங்கத்தின் வாயில் ஏதோ ஒன்று இருப்பதை அவர்கள் கண்டுள்ளனர்.  உற்றுக்கவனித்த போது, அது உயிருடன் உள்ள மான்குட்டி எனத் தெரிய வந்தது. அந்தப் பெண் சிங்கம், மான்குட்டியைத் தாயன்போடு நாவால் வருடிக் கொடுத்துக்கொண்டே இருப்பதையும் அவர்கள்  பார்த்திருக்கின்றனர். அருகில், மான்குட்டியைக் கொல்வதற்காக கழுகு, செந்நாய் போன்றவை சுற்றி வந்தாலும், சிங்க ராணி, அதிக கவனத்துடன் மான்குட்டியைப் பராமரித்து வருகிறது. 

சிறுத்தைப் புலிக்குட்டி பால் குடிக்கிறது

அதேபோல், தான்சேனியாவில் உள்ள காரன்காரோ வனப்பகுதியில் பெண் சிங்கம் ஒன்று சிறுத்தைக் குட்டியை வளர்த்து வருகிறது. அண்மையில் இந்தப் பெண் சிங்கம், குட்டிகளை ஈன்று பறிகொடுத்ததாகச் சொல்லப்படுகிறது. தாயை இழந்த சிறுத்தைக் குட்டி, வனப்பகுதியில் பரிதாபத்துடன் சுற்றி வந்துள்ளது. இதனைப் பார்த்த பெண் சிங்கம் சிறுத்தைக்குட்டியை அரவணைத்துக் கொண்டது. சிங்கம் தாய் ஸ்தானத்தில் சிறுத்தைக் குட்டிக்குப் பால் கொடுத்து பராமரிக்கிறது. இந்தப் பெண் சிங்கம் வன உயிரின ஆர்வலர்களால் கண்காணிக்கப்பட்டு வருகிறது. 

அழகிய சிறுத்தைப் புலிக் குட்டி

வன உயிரின ஆர்வலர்கள், '' குட்டியை இழந்த பெண் சிங்கத்துக்குப் பரிதாப நிலையில் இருந்த சிறுத்தை குட்டியைக் கண்டதும் தாய்மை உணர்வு பீறிட்டிருக்கலாம். இதனால் சிறுத்தைக்குட்டியைத் தன் குட்டியாகக் கருதி பால் கொடுக்கத் தொடங்கிருக்கும் '' என்றுக் கூறுகின்றனர். பெண்சிங்கங்கள் அவ்வளவு எளிதில் பிற இனக்குட்டிகளை அரவணைப்பதில்லை. அப்படியிருக்கையில், இந்த இரு சம்பவங்களும் மிருகங்களுக்கு மனிதகுணம் வந்து விட்டதோ என்று நினைக்க வைக்கிறது!
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க