வெளியிடப்பட்ட நேரம்: 13:52 (29/07/2017)

கடைசி தொடர்பு:13:52 (29/07/2017)

‘இணைந்த மன்னார்குடி உறவுகள்!’ - அடுத்த குறி இவர்களுக்குதான்

 சசிகலா, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம்டி .டி.வி.தினகரன்

எலியும் பூனையுமாக இருந்த டி.டி.வி.தினகரன், திவாகரன் கைகோத்துள்ளது அவர்களின் ஆதரவாளர்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால், முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினருக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அ.தி.மு.க-வில் குழப்பங்கள் ஏற்பட்டன. சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அணிகள் உருவாகின. சசிகலா குடும்பத்தினரிடையே அதிகார போட்டிகள் தலைதூக்கின. இந்தசமயத்தில் சசிகலாவும் டி.டி.வி.தினகரனும் சிறைக்குச் சென்றுவிட்டனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி தொடர்ந்துவருகிறது. பிரிந்த அ.தி.மு.க.வை ஒன்றிணைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட குழப்பங்களால் இரண்டு அணிகளும் ஒன்றிணையவில்லை. 

இந்தச் சூழ்நிலையில் சசிகலாவின் அண்ணி சந்தான லெட்சுமியின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் திவாகரன், டி.டி.வி.தினகரன் இருவரும் ஒன்றாகச் சேர்ந்து பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர். எலியும் பூனையுமாக இருந்த அவர்கள் இருவரும் ஒன்றாக கைகோத்திருப்பது ஆதரவாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சசிகலா குடும்ப உறவுகள் ஒன்றாகச் சேர்ந்துள்ளது, முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் அணியினருக்குச் சிக்கலை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சசிகலா,டி.டி.வி.தினகரன், திவாகரன்

இதுகுறித்து நம்மிடம் பேசிய அ.தி.மு.க. வட்டாரங்கள், "முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியுடன் திவாகரன் நெருக்கத்தில் இருந்துவந்தார். இதனால், அந்த அணியில் உள்ள அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களில் சிலர் திவாகரனின் கட்டுப்பாட்டில் உள்ளனர். அவர்கள், திவாகரனின் உத்தரவுக்காகக் காத்திருக்கின்றனர். இதுவரை மன்னார்குடி உறவுகளின் சண்டை காரணமாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு சிக்கல் ஏற்படவில்லை. முதல்வர் அணியிலிருக்கும் தினகரன், திவாகரனின் ஆதரவாளர்களால் ஆட்சிக்கு நெருக்கடி கொடுக்கப்பட வாய்ப்புள்ளது.

தினகரன், திவாகரன் தரப்பிலிருந்து அவர்களுடைய ஆதரவாளர்களுக்கு அழைப்புகள் சென்றுள்ளன. அதில், 'அ.தி.மு.க-வில் இரண்டு அணிகள் இணைய உடனடியாக நடவடிக்கை எடுங்கள். ஏற்கெனவே, தினகரன் கொடுத்த 60 நாள்கள் கெடு முடிவடையும் நிலையில் உள்ளது. இரண்டு அணிகளும் இணையவில்லை என்றால் ஆகஸ்ட் 5-ம் தேதிக்குப் பிறகு, கட்சிப்பணிகளில் நாங்கள் இருவரும் சேர்ந்தே ஈடுபடவுள்ளோம். இது, நிச்சயம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும். ஓ.பன்னீர்செல்வம் அணியில் உள்ள மக்கள் பிரதிநிதிகளில் சிலர் அதிருப்தியில் உள்ளனர். அவர்களில் ஒருவர், பா.ஜ.க-வில் சேரலாமா என்ற ஆலோசனையில் உள்ளார். மேலும், சிலர் எடப்பாடி பழனிசாமி அணியினருடன் சேரும் முடிவில் உள்ளனர். 

டி.டி.வி.தினகரன், திவாகரன்

ஓ.பன்னீர்செல்வம் அணியினரின் தர்மயுத்தத்தில் சசிகலா குடும்பத்தினரை ஓரங்கட்டப்பட வேண்டும் என்பதே முதல் கோரிக்கை. எங்கள் குடும்பத்தைத் தவிர்த்துவிட்டு அ.தி.மு.க. இல்லை. அந்தளவுக்கு எங்களின் ஆதரவாளர்கள் கட்சியில் உள்ளனர். எங்களை ஓரங்கட்டினால் அதன்விளைவு அதிரடியாக இருக்கும் என்பது முதல்வர் பழனிசாமிக்கும் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் தெரியும். எனவே, யோசித்து முடிவெடுங்கள்' என்ற தகவல் இரண்டு அணியில் உள்ள முக்கியமானவர்களுக்குச் சொல்லப்பட்டுள்ளது. இதனால், முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் அவருக்கு நெருக்கமானவர்களும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். இன்னும் சில தினங்களில் அ.தி.மு.க-வில் பெரியளவில் மாற்றங்கள் ஏற்படும்" என்றனர்.

டி.டி.வி.தினகரனுக்கு நெருக்கமான ஒருவர் கூறுகையில், "இதுவரை எங்களின் கோரிக்கை ஒரு கை ஓசையாகவே அ.தி.மு.க-வில் கேட்டுவந்தது. தற்போது, திவாகரன் ஆதரவாளர்களும் எங்களுடன் கைகோர்த்துள்ளதால் இருகை ஓசை கேட்கும். அ.தி.மு.க. வளர்ச்சியில் எங்களுக்கும் பங்கு இருக்கிறது. எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு, ஜெயலலிதாவுக்கு பக்கபலமாக இருந்தது நாங்கள்தான். எங்களால்தான் தற்போதுள்ள அமைச்சர்களுக்கும் எம்.எல்.ஏ-க்களுக்கும் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அதை அவர்கள் என்றைக்கும் மறந்துவிடமாட்டார்கள். அவர்கள் இன்றுவரை டி.டி.வி.தினகரனுக்கு விசுவாசமாகவே உள்ளனர்.

அதுபோல, திவாகரனுக்கும் கட்சியில் தனிப்பட்ட செல்வாக்கு உள்ளது. அவர்களும் எங்களுடன் இணைந்திருப்பதால் அ.தி.மு.க-வில் எங்களுக்குள்ள ஆதரவு பெருகியுள்ளது. அது, முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் நன்றாகத் தெரியும். எனவே, இனி அவர்கள் எடுக்கும் முடிவுகள் எங்களுக்கு பாதகமாக இருக்காது. எங்களைப் பொறுத்தவரை அ.தி.மு.க-வில் அணிகள் இருக்கக் கூடாது. ஜெயலலிதா விரும்பிய ஆட்சி தமிழகத்தில் நடக்க வேண்டும். அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும். நாங்கள் நினைத்திருந்தால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு முடிவு கட்டியிருக்க முடியும். அதை டி.டி.வி.தினகரன் விரும்பவில்லை. அ.தி.மு.க. அழிந்துவிடக் கூடாது என்பதற்காக அவர் அமைதியாக இருந்தார். விரைவில் அ.தி.மு.க. அணிகள் ஒன்றாக இணைந்த செய்தி வரும். அதற்கான ஏற்பாடுகள் நடந்துவருகின்றன" என்றனர்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் பேசியவர்கள், "இது, எங்களுக்கு சிக்கலான தருணம். சசிகலா குடும்பத்தினரை ஓரம்கட்ட வேண்டும் என்ற கோரிக்கையோடு ஓ.பன்னீர்செல்வம் அணியினர் எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்திவருகின்றனர். சசிகலா குடும்பத்தினரை ஓரம் கட்டினால், அவர்களது ஆதரவாளர்களால் எங்களுக்கு நிச்சயம் சிக்கல் ஏற்படும். ஏன், ஆட்சியைக் கவிழ்க்கக்கூட அவர்கள் முடிவெடுப்பார்கள். இதனால், யாருக்கும் பாதகமில்லாமல் முடிவெடுக்க ஆலோசனை நடத்திவருகிறோம். சசிகலா குடும்பத்தினரின் ஆதரவாளர்களிடம் தனித்தனியாகப் பேசிவருகிறோம். அவர்களில் சிலர் அமைச்சரவையில் இடம், கட்சியில் முக்கிய பொறுப்புகளைக் கேட்கின்றனர். அதற்கான வாக்குறுதிகளைக் கொடுக்கவும் தற்போதுள்ள சூழ்நிலையில் வழியில்லை. இப்போதைக்கு எந்த முடிவும் எடுக்கப்படவில்லை" என்றனர். 

சசிகலா, ஓ.பன்னீர்செல்வம்

ஓ.பன்னீர்செல்வம் அணியினர் கூறுகையில், "முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியில் ஆறுக்குட்டி எம்.எல்.ஏ. சேர்ந்துவிட்டதால் எங்களின் பலம் குறைந்துவிடாது. மக்களின் ஆதரவும் தொண்டர்களின் ஆதரவும் எங்களுக்குத்தான் உள்ளது. சசிகலா குடும்பத்தினரை மக்களும் தொண்டர்களும் விரும்பவில்லை. இதனால்தான் நாங்களும் அந்தக் குடும்பத்தினரின் பிடியில் அ.தி.மு.க. சென்றுவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம். சசிகலாவுக்கும் டி.டி.வி.தினகரனுக்கும் ஏற்பட்டுள்ள சிக்கல் இன்னும் முடிவடையவில்லை. தினகரனும் திவாகரன் மட்டுமே அ.தி.மு.க. இல்லை என்பதை அவர்களின் ஆதரவாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும். எங்களை பொறுத்தவரை, அ.தி.மு.க. ஒன்றாக இணைய வேண்டும் என்றே விரும்புகிறோம். அதற்காக சசிகலா குடும்பத்தினருடன் என்றுமே சமரசம் செய்துகொண்டுதான் அ.தி.மு.க-வை இணைய வேண்டும் என்றால் அதற்கு நாங்கள் சம்மதிக்கமாட்டோம்" என்றனர்.

திவாகரன் தரப்பில் பேசியவர்கள், "முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி சிறப்பாக உள்ளது என்று திவாகரன் தெரிவித்துள்ளார். இதனால், முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்தே செயல்பட முடிவு செய்துள்ளோம். எங்களால் இந்த ஆட்சிக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. ஆகஸ்ட் மாதத்தில் அ.தி.மு.க-வில் நல்லது நடக்கும்" என்றனர். 


முதல்வர் எடப்பாடி பழனிசாமி அமைச்சரவையில் உள்ள தினகரன், திவாகரனின் ஆதரவாளர்களைக் ரகசியமாகக் கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாம். அவர்களால் ஆட்சிக்குச் சிக்கல் ஏற்பட்டால் அதன்பாதிப்பு எனக்கு மட்டுமல்ல... அவர்களுக்கும்தான் என்று சொல்ல தொடங்கிவிட்டாரம் முதல்வர். அதுபோல, ஓ.பன்னீர்செல்வம் அணியினரும் எல்லாவற்றையும் மேலே இருக்கிறவன் பார்த்துக்கொள்வான் என்று பா.ஜ.க.வை அதிகமாக நம்பிவருகின்றனர்.
   


டிரெண்டிங் @ விகடன்