கோவில்பட்டி தீப்பெட்டித் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து! | Fire accident at Kovilpatti matchbox company

வெளியிடப்பட்ட நேரம்: 16:39 (29/07/2017)

கடைசி தொடர்பு:16:39 (29/07/2017)

கோவில்பட்டி தீப்பெட்டித் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து!

கோவில்பட்டி ராஜீவ் நகர் 6-வது தெருவைச் சேர்ந்தவர் இளங்கோ. இவருக்கு சொந்தமான கட்டடம், ராஜீவ்நகர் 5-வது தெருவில் உள்ளது.  தற்போது விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை சேர்ந்த ராமராஜ் என்பவர், இளங்கோவுக்குச் சொந்தமான இடத்தில்,  இயந்திர தீப்பெட்டி தொழிற்சாலையை லீஸுக்கு எடுத்து நடத்திவருகிறார். 

kovilpatti fire

இந்நிலையில், இன்று காலை வழக்கம்போல தீக்குச்சிமரக் கட்டைகளிலிருந்து இயந்திரம்மூலம் தீக்குச்சிகள் தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது, தீக்குச்சி தயாரிக்கும் இயந்திரத்தில் திடீரென புகைமண்டலம் ஏற்பட்டு, மளமளவென்று தீப்பிடிக்கத் துவங்கியது. இதனால், அந்தப் பகுதியிலிருந்து தொழிலாளர்கள் உடனடியாக வெளியேறினர்.

kovilpatti fire
 

 கோவில்பட்டி, கழுகுமலை ஆகிய தீயணைப்பு நிலையங்களிலிருந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, தீப்பெட்டித் தொழிற்சாலையில் எரிந்துகொண்டிருந்த தீயை நீண்ட நேரம் போராடி அணைத்தனர். இந்தத் தீவிபத்தில், ஏற்கெனவே தயாரித்து அடுக்கிவைக்கப்பட்டிருந்த 1,500-க்கும் மேற்பட்ட தீப்பெட்டிப் பண்டல்கள், தீக்குச்சித் தயாரிக்கும் இயந்திரம், கட்டடம், மேற்கூரைகள், தளவாடப் பொருள்கள், தீக்குச்சிகள் போன்றவைகள் தீயில் எரிந்து நாசமாகின. இவற்றின் மதிப்பு ரூ.3 கோடி என கூறப்படுகிறது. மேலும், இந்த தீ விபத்துகுறித்து கோவில்பட்டி மேற்கு போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க