வெளியிடப்பட்ட நேரம்: 12:31 (30/07/2017)

கடைசி தொடர்பு:12:31 (30/07/2017)

பயிர்க் காப்பீடு... ஏமாற்றும் இன்ஸ்சூரன்ஸ் கம்பெனி... விரக்தியில் விவசாயிகள்!

டந்த மாதம் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் சிவகங்கை மாவட்ட கலெக்டர் மலர்விழி, ''இன்னும் பதினைந்து நாள்களில் விவசாயிகளுக்கான பயிர்க் காப்பீட்டுத் தொகை பெற்றுத் தரப்படும்'' என்று வாக்குறுதி கொடுத்தார். ஆனால், வாக்குறுதி மட்டுமே இருக்கிறது; விவசாயிகளுக்குப் பணமும் வரவில்லை. வாக்குறுதி கொடுத்த கலெக்டரும் வரவில்லை. இந்த நிலையில் மாவட்டத்துக்குத் தேவையான நிவாரணத் தொகை 265 கோடி ரூபாய். ஆனால், தற்போது வந்திருப்பது 71 கோடி ரூபாய். 64 ஆயிரம் விவசாயிகளை வர்ணபகவான் ஏமாற்றியதால் பயிர்க் காப்பீட்டுக்காக நடையாய் நடந்து சாகிறார்கள். நூறு சதவிகிதம் வறட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டம் என மாவட்ட ஆட்சியரே அறிவித்திருக்கிறார். அறிவிப்பில் எந்த ஏமாற்றமும் இல்லை. ஆனால், ஐ.சி.ஐ.சி.ஐ லம்பார்டு என்கிற தனியார் வங்கிதான் விவசாயிகளை ஏமாற்றுவதாகக் குற்றம்சாட்டுகிறார்கள் விவசாயிகள்.

விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்குக் கலெக்டர் மலர்விழி வரவில்லை. ஆகையால், மாவட்ட வருவாய் அதிகாரி ஆர்.டி.ஓ போன்ற முக்கிய அதிகாரிகள் இந்தக் கூட்டத்தை நடத்தினார்கள். பயிர்க் காப்பீட்டுப் பணம் பெறாமல் காத்திருக்கும் விவசாயிகள், ''இன்றைக்குப் பயிர்க் காப்பீட்டு பணம் பற்றிய முழு விபரமும் தெரியாமல் இன்ஸ்சூரன்ஸ் அதிகாரிகளை இங்கிருந்து போகவிடக் கூடாது'' என்று கொந்தளித்தார்கள். கிட்டத்தட்ட இன்ஸ்சூரன்ஸ் விவகாரம் மட்டுமே சுமார் இரண்டுமணி நேரத்துக்கு மேல் ஓடியது. விவசாயிகள் கேட்கும் கேள்விகளுக்கு அதிகாரிகள் பதில் சொல்லமுடியாமல் மலுப்பிக்கொண்டே போனார்கள். ஒருகட்டத்தில் விவசாயிகள், ''நாங்கள் கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்து பயிர்க் காப்பீடு பற்றித்தான் பேசிக்கொண்டிருக்கிறோம். நீங்களும் எங்களை இந்தா, அந்தா என்று ஏமாற்றிக்கொண்டிருக்கிறீர்கள்'' என்று கொதித்தெழுந்தார்கள்.

அய்யாச்சாமி

மானாமதுரை பகுதியைச் சேர்ந்த அய்யாச்சாமி, “ஐ.சி.ஐ.சி.ஐ லம்பார்டு இன்ஸ்சுரன்ஸ் கம்பெனி பல்வேறு மாவட்டங்களில் விவசாயிகளை ஏமாற்றியிருக்கிறார்கள். தென் மாவட்டத்தில் சிவகங்கையில் இந்தக் கம்பெனி இதுபோன்ற குளறுபடிகளைச் செய்துகொண்டிருக்கிறார்கள். பக்கத்து மாவட்டமான ராமநாதபுரத்தில் நூறு சதவிகிதம் பயிர்க் காப்பீட்டுத் தொகை கொடுத்து முடிக்கப்போகிறார்கள். அரசுத் துறை காப்பீட்டு நிறுவனங்களில் எந்தக் குளறுபடியும் இல்லை. ஆனால், இவர்கள் மட்டும் 'பட்டியல் எடுத்துக்கொண்டிருக்கிறோம்... கூகுள் மேப் படி ஆய்வு செய்கிறோம்... பேங்குக்கு அனுப்பிவிட்டோம். ஐ.எஃப்.எஸ் கெடு மாறிவிட்டது' என இஸ்டத்துக்கு அள்ளி விடுகிறார்கள். மாநில அரசு 50 சதவிகிதமும், மத்திய அரசு 30 சதவிகிதமும், விவசாயிகள் 20 சதவிகிதமும் இன்ஸ்சூரன்ஸ் கம்பெனிக்குப் பிரீமியம் கட்டியிருக்கிறார்கள். 44 கிராமங்களுக்கு இன்ஸ்சூரன்ஸ் வரவே இல்லை. அது எப்படி வராமல் இருக்கும்? எங்களுக்கான இன்ஸ்சூரன்ஸ் பணத்தை ஏமாற்றுவதற்கான வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன என்பதை மட்டும் காட்டுகிறது. திருப்புவனம் பகுதிக்கு வந்த காப்பீட்டுப் பணம் 48 லட்சம் ரூபாய் மீண்டும் கருவூலத்துக்கே போய்விட்டது. ஏன் என்று கேட்டால்... தாசில்தார், 'பேங்க்ல போய் கேளுங்க' என்று சொல்கிறார். பேங்கில் போய்க் கேட்டால், 'தாசில்தாரரிடம் போய்க் கேளுங்கள்' என்று சொல்கிறார்கள். இப்படிச் சடுகுடு விளையாட்டுதான் நடக்கிறது'' என்கிறார்.

ஊராட்சி மன்றத் தலைவராக இருந்த சகாயமேரி என்கிற இந்திரா, ''டெல்லியில் நடந்த விவசாயிகள் கூட்டத்துக்குத் தமிழகத்தில் இருந்துசாகாய மேரி நான் மட்டும்தான் அழைக்கப்பட்டிருந்தேன். அப்போது தற்போதைய துணைக் குடியரசுத் தலைவர் வேட்பாளரான வெங்கய்ய நாயுடு, 'ஒருபெண் விவசாயி இங்கு வந்திருப்பது பெருமையாக இருக்கிறது' என்று அந்தக் கூட்டத்தில் பேசினார். எங்கள் பகுதியில் உள்ள நான்கு வருவாய்க் கிராமங்களில் (அளவிடங்கான், வண்டல், அரண்மனைக் கரை, கலங்காதான் கோட்டை) நெற்கதிர்கள் விளைந்த பருவத்தில் கருகிப்போயின. அதற்கான ஆதாரத்தைப் போட்டோவோடு காட்டினேன். விளைந்த நெற்கதிர்களை வேரோடு பிடுங்கிக்கொண்டு வந்து காட்டினேன். இப்படிக் காட்டியும் எங்கள் ஊருக்கு 25 சதவிகிதம்தான் காப்பீடு தருவதாகச் சொல்கிறார்கள். கேட்டால், 'மேப்பில் பார்த்தோம்' என்று சொல்லி எங்களை வயிற்றில் அடிக்கப் பார்க்கிறது இன்ஸ்சூரன்ஸ் கம்பெனி. 'ஏழு ஆண்டு விளைச்சல் பார்ப்போம்... அதில், இரண்டு ஆண்டுகளைக் கழித்துவிடுவோம்' என்கிறார்கள். நியாயப்படி பார்த்தால், இன்ஸ்சூரன்ஸ் அதிகாரி, மாவட்ட வருவாய்த் துறை அதிகாரி, வேளாண்துறை அதிகாரி, வி.ஏ.ஓ ஆகியோர் எந்த நிலத்தில் ஆய்வு செய்யப்போகிறார்களோ, அந்த நிலத்தின் உரிமையாளர் போன்றவர்கள் இருந்துதான் இழப்பீட்டை முடிவு செய்யவேண்டும். இதுதான் விதி. இது, எதுவுமே இல்லாமல் இவர்களாக முடிவு செய்து கொடுப்பது என்பது விவசாயிகளின் வயிற்றில் அடிப்பதற்குச் சமம்'' என்கிறார் வேதனையோடு.

மேலப்பிடாவூர் கிராமத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற மின்சாரத் துறை அதிகாரி மாரி, “நான், நான்கு ஏக்கர்ல நெல் விவசாயம் செய்றேன். எனக்கு நூறு சதவிகிதம் பாதிப்பு. எங்க ஊர்லேயே வறட்சி நிவாரணத்துக்கு நான்தான் முதல் ஆளா மனுக் கொடுத்தேன். ஆனா, எனக்கு நிவாரணம் வரலை. லிஸ்ட்ல என் பேரு இல்லை. தகவல் பெறும் உரிமைச் சட்டத்துலகூடக் கேட்டுப் பாத்துட்டேன். அதுக்கும் பதில் வரலை. 'பத்து நாள்ல உங்களுக்கு வறட்சி நிவாரணம் வரும்'னு சொன்னாங்க. ஆனா, ஒரு நிவாரணமும் வந்தபாடிலில்லை என்றார்.

பால் கொள்முதலில் முறைகேடு நடக்கிறது. அதேபோல, தனியார் பஸ்களுக்குத் தாரைவார்ப்பதற்காக அரசுப் பேருந்துகளில் ரூட் மாற்றுவதும் வழித்தடங்களை நிறுத்துவதுமாக போக்குவரத் துறை அதிகாரிகள் செயல்படுகிறார்கள் என்கிற குற்றச்சாட்டும் அதிகாரிகளை அசைத்துப் பார்த்தது. ஆனால், அது அனைத்தும் இதுபோன்ற குறைதீர்க்கும் கூட்டங்களில் தட்டிக்கழிக்கும் விதமாகவே இருந்தது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்