Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மண் கொள்ளையர் கூடாரம் எரிப்பு... கிராம மக்கள் ஆவேசம்!

                                             மண் கொள்ளை

ரியில் சவுடு மண் அள்ள  அனுமதியைப் பெற்றுவிட்டு செம்மண்ணை அள்ளிய மணல் கொள்ளையர்களின் கூடாரம் பொதுமக்களால் எரிக்கப்பட்டிருக்கிறது.

குடிநீருக்கும், விவசாயப் பயிருக்கும் வந்துள்ள தண்ணீர்ப்பஞ்சத்தை தூரவைத்தே பார்த்த பெரும்பான்மை மக்கள், இப்போது அருகில் வைத்துப் பார்க்க ஆரம்பித்துள்ளதையே இது காட்டுகிறது. எங்கோ ஒரு பகுதியில் காலி குடங்களுடன் மக்கள் திரிவதை புகைப்படங்களில் பார்த்தால், வெறுமனே 'உச்' கொட்டுவதுதான் இங்கே சமூக நடைமுறை. காயங்கள் தனக்கானது என்கிற உணர்வுக்கு மக்கள் இப்போதுதான் வரத் தொடங்கியுள்ளனர். அதன் எதிரொலியாக   தங்களுடைய எதிர்ப்பையும் தீவிரமாக்கி வருகிறார்கள். 
வனத்துறை, பொதுப்பணித்துறை, உள்ளாட்சி நிர்வாகத்துறை ஆகியவை நீர்-மண் பாதுகாப்பில் நேரடி பொறுப்பைக் கொண்ட துறைகள். இந்தத் துறைகளின் நிர்வாகப் பொறுப்பு என்பது மாவட்ட ஆட்சியர், அமைச்சர்களில் ஆரம்பித்து முதல் அமைச்சர்வரையிலும் சங்கிலித் தொடராக இருக்கிறது. அவரவர் பொறுப்பை அவரவர் உணராமல் அல்லது கண்டும் காணாமல் இருப்பதால்தான் இப்போது பொதுமக்களே நேரடியாகக் களத்துக்கு வந்துள்ளனர்.

மண் கொள்ளையர்கள், லாரிகளுக்கு வரிசைமுறை வைத்து டோக்கன் கொடுக்கத் தங்கியிருக்கும்  கூடாரத்தை பொதுமக்களின் கோபத் தீ இப்போது முதற்கட்டமாக எரித்துள்ளது.  இரண்டாவதாக சட்டம்-ஒழுங்கைக் காப்பாற்ற போலீஸ் வந்திருக்கிறது. யோசித்துப் பார்த்தால், மக்களைத் தவிர அனைவருக்கும் இந்தக் குற்றங்களில் பங்கு இருக்கிறது என்றுதான் கருத வேண்டியிருக்கிறது. திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே இருக்கிறது தத்தைமஞ்சி ஏரி. இந்த ஏரிப்பகுதியில், குறிப்பிட்ட இடத்தில், குறிப்பிட்ட அளவில் மண் அள்ள அரசிடம் அனுமதி பெற்றிருக்கிறது, மண் குவாரிகளை நடத்தும் கும்பல். சென்னை பல்லாவரம், திரிசூலம் பகுதி கல்குட்டைகளில் தேங்கிக் கிடக்கும் தண்ணீரே சென்னை மக்களின் தாகம் தணிக்கிறது என்ற கடைசி நிலையில்தான் கடந்த 27-ம்தேதி மக்கள் போராட்டம் வெடித்துள்ளது.

தத்தைமஞ்சி ஏரியில், அனுமதிக்கப்பட்டுள்ள மண்ணை கொண்டுசெல்ல 5 லாரிகளே அதிகம் என்ற நிலையில், அங்கு இருந்ததோ 50 லாரிகள். பொன்னேரி சுற்றுப்பகுதிகளில் உள்ள படித்த இளைஞர்கள் சிலர் பொதுமக்களிடம் 'உண்மை நிலவரம் இதுதான்' என்று சொல்லிவைக்க, லாரிகள் சிறை பிடிக்கப்பட்டது. நிர்ணயித்த அளவைவிட மண் அதிகம் சுமந்த லாரிகள், தலைகீழாகக் கவிழ்க்கப்பட்டன. மண் கொள்ளையர்கள், லாரிகளுக்கு வரிசைமுறை வைத்து டோக்கன் கொடுக்கத் தங்கியிருக்கும் கூடாரத்தையும் பொதுமக்கள் தீயிட்டுக் கொளுத்தினர். இதனால், குவாரி நடத்தியவர்கள் தெறித்து ஓடினர். 'அதிக மண் அள்ளினால், எங்களுக்கு நஷ்ட ஈடு (?) கொடுத்துவிட்டுப் போங்கள்' என்று ஊர்மக்கள் கேட்டதாக மண்குவாரி நடத்தியவர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர்.

பொதுமக்களோ, 'நீர் கிடைக்கும் வழிகளை அடைத்து ஊரையே இவர்கள் சீரழிப்பதை நாங்கள் கண்டுகொள்ளாமல் இருந்தால் பணம் தருவதாக சொன்னதே மண் கொள்ளையர்கள்தான். நாங்கள் மொத்தபேரும் இறங்கி அடிக்க ஆரம்பித்ததும், கதையையே மாற்றுகிறார்கள்' என்று ஆத்திரப்பட்டனர்.

இதன்பின்னர் பொதுமக்களிடம் பேசிய போலீசார், 'உரிய நடவடிக்கை  மேற்கொள்கிறோம், இனி தீ வைப்பில் ஈடுபடாதீர்கள்' என்று கேட்டுக் கொண்டனர். போலீசாரின் உறுதியை ஏற்றுக் கொண்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். அடுத்த சில நிமிடங்களில், பொதுமக்களால் கவிழ்க்கப்பட்ட லாரிகள், குவாரி நடத்தும் நபர்களால் நிமிர்த்தப்பட்டது. நிமிர்த்தப் பட்ட லாரிகளில் மீண்டும் மண் நிரப்பப்பட்டது. மீண்டும் பொதுமக்கள் அங்கு திரண்டு வந்தனர், மீண்டும் போலீசார் சமரசப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மீண்டும் மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறும் கதையாக,  திருவள்ளூர் மாவட்டத்தின் பல இடங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. கடந்த சில நாள்களுக்கு முன்னர் சோழவரம் ஏரிக்கும் இதே நிலைதான் ஏற்பட்டது. ஏரியின் மொத்த மண்ணும் தோண்டியெடுக்கப் பட்டபின் போலீஸ், ஆர்.டி.ஓ., வனத்துறை என்று பலதுறைகளின் சார்பில் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சோழவரம் ஏரி

திருத்தணி, கே.கே.சத்திரம், திருவாலங்காடு,  திருவள்ளூர் தாலுகா, பொதட்டூர்பேட்டை, பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை காவல் நிலைய எல்லைகளின் வழியாகத்தான் கொசஸ்தலை ஆற்றின் பயணம் இருக்கிறது. அதேபோல் வெங்கல், பெரியபாளையம், ஆரணி ஆகிய போலீஸ் நிலைய எல்லைகளின் வழியாகத்தான் ஆரணி ஆற்றின் பயணம் இருக்கிறது. மப்பேடு, கடம்பத்தூர், மணவாளநகர், செவ்வாப்பேட்டை, வெள்ளவேடு ஆகிய  போலீஸ் நிலைய எல்லைக்குள் கூவம் நதியின் பயணம் இருக்கிறது... இரண்டு விஷயத்தை இங்கே நினைவில் கொள்வது அவசியம்...  சென்னைக்குள் நுழைந்தபின் இருக்கும்  கூவம் நதியின் நிலை திருவள்ளூர் மாவட்டத்தில் இல்லை.  சென்னையில் கூவம் வரும் வழிப்பாதைகளின் மீது, கொட்டப்படும் அநீதிகள்தான் கூவத்தை 'துர்நாற்றம்' பிடித்த நீர்ப்பாதையாக மாற்றி வைத்துள்ளது. கூவம் என்றாலே 'துர்நாற்றம்' என்ற சிந்தனையை நம் நாசிக்குள்  உட்கார வைத்ததும் அதுவே.மேற்கண்ட நீர்வழிப்பாதைகள் அனைத்தும், குறிப்பிட்ட காவல் நிலையங்களின் எல்லைக்குள்தான் பாய்ந்தோடுகின்றன என்று கோடிட்டுக் காட்டுவதற்கும் காரணம் உண்டு. நீர்வழிப்பாதைகளில், மண் திருடுபவர்கள் யாராக இருந்தாலும் போலீசார் நடவடிக்கை எடுக்க முழு சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும். கைது நடவடிக்கையின்போது வட்டம், மாவட்டம் என்ற அரசியல் தலையீடுகள் இருக்கக்கூடாது.
அதன்பின்னரும் மண் திருட்டு நடக்குமானால், குறிப்பிட்ட காவல்நிலையப் போலீசாரைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்புப் போலீசாருக்கு முழு அதிகாரம் கொடுக்க வேண்டும். தீர்வுக்கு இதுவே வழி! 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement