வெளியிடப்பட்ட நேரம்: 20:06 (31/07/2017)

கடைசி தொடர்பு:20:06 (31/07/2017)

ஒரு குழந்தைகூட பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக விடமாட்டேன் என ஆண்கள் சபதம் ஏற்க வேண்டும் #StopChildSexualAbuse

பாலியல்

குழந்தைகளின் உடல் மீது ஏன் இவ்வளவு வன்மம்? குழந்தைகள் மீது நிகழ்த்தப்படும் பாலியல் வன்கொடுமைகள், வார்த்தைகளாகக் கடந்துவிடக் கூடியவையல்ல. தினமும் எத்தனை கொடுமைகள் வெளியில் தெரியாமல் நடக்கிறது என்று நினைக்கும்போதே பதறுகிறது. ஒவ்வோர் ஆணும் ஒரு பெண்ணுடலாக தங்களைக் கற்பனை செய்துகொண்டு அந்தப் பாலியல் வன்கொடுமைச் செய்திகளைப் படித்துப் பாருங்கள். அப்போதுதான் உண்மையான வலியை உணர முடியும். 'இந்த உலகில் எந்தக் குழந்தைக்கும் இப்படி ஓர் அவலம் நடக்கக்கூடாது. அப்படி ஒரு கொடுமையை என் எதிரே நான் நடக்க விடமாட்டேன்' என்று ஒவ்வோர் ஆணும் சபதம் எடுக்காத வரை, எத்தனை சட்டங்கள் வந்தாலும் இதைத் தடுத்து நிறுத்துவது கேள்விக்குறிதான். 

பாகிஸ்தானில் நிகழ்ந்திருக்கும் அந்தக் கொடியச் சம்பவம், 'இவ்வளவு மோசமான உலகிலா பெண் குழந்தைகள் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர்?' என்ற அச்சத்தின் சாட்டையை மனதில் வீசுகிறது. அது, முஜாராபாத் நகரில் அமைந்துள்ள ராஜ்பூர் கிராமம். கடந்த 16-ம் தேதி அஷ்பக் என்பவரின் டீன் ஏஜ் வயது சகோதரியை உமர் என்பவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த கிராமப் பஞ்சாயத்து, உமரின் சகோதரியை அஷ்பக் பாலியல் பலாத்காரம் செய்ய உத்தரவிட்டுத் தீர்ப்பளித்துள்ளனர். 

இப்படி ஒரு கொடூரத்தை நீதி (!) என்று நம்பும் அளவுக்கு மக்கள் இருக்கிறார்களா? இந்தச் சம்பவத்தில் குற்றம் செய்தவனை விட்டுவிட்டு, அவனுக்குத் தங்கையாகப் பிறந்த பெண்ணை இன்னொருவன் வன்கொடுமைக்கு உள்ளாக்குவது யார் கற்றுத் தந்த நியாயம்? இந்தச் சம்பவத்துக்குக் காரணமானவர்கள் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால், வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட அந்தச் சிறுமிகளுக்கு நடந்த அந்தக் கொடூரம் வாழ்நாள் முழுக்கவும் மறக்காதே. தூங்கவிடாமல் துரத்துமே? பெண்ணாகப் பிறந்தது அந்தக் குழந்தை செய்த குற்றமா? பெண்ணென்றால் ஆணுக்கு இரண்டு உறுப்புகளாக மட்டும்தான் தெரியுமா? அவனால் அவளை இன்னோர் உயிராக ஏன் உணர முடியவில்லை? 

கேரள மாநிலத்தில் சிறு வயதிலிருந்து தன்னை பாலியல் பலாத்காரம் செய்த சாமியாரின் ஆணுறுப்பை அறுத்தெறிந்தார் ஒரு சட்டக் கல்லூரி மாணவி. சமீபத்தில் அதே கேரளாவில் 12 வயது சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்ததற்காக 60 வயது முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார். இப்படித் தொடர்ச்சியாக பல சம்பவங்களைச் சொல்ல முடியும். பாலியல் பலாத்கார வழக்கில் சிக்காமல் எத்தனை பேர் இன்னும் இன்னும் குழந்தைகளை வதைத்துக்கொண்டிருக்கிறார்கள்? அவர்கள் எல்லோருமே தண்டிக்கப்பட வேண்டும். இதுபோன்ற சம்பவங்களில் புள்ளிவிவரங்களைத் தாண்டி நடப்பவை என்ன? 

பாலியல்

‘‘குழந்தைகள் மீது நடத்தப்படும் பாலியல் வன்கொடுமைகளில் 80 சதவீதம் தெரிந்த நபர்களால் நடக்கிறது. அந்தக் குடும்பத்துக்கு வேண்டியவர்கள் என்று கருதப்படுபவர்கள் மற்றும், பெற்றோராலும் நிகழ்கிறது. மிக வயது குறைந்த குழந்தைகள் ஆபத்தான சூழலில் சிக்கும்போதும் பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுகின்றனர்'' என்கிறார், சேலம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பிரபு. 

''குடும்பங்களில் பெற்றோருக்குள் சண்டை, பிரிந்து இருத்தல், கணவன்/ மனைவிக்கு வேறு நபர்களுடன் தொடர்பு போன்ற சூழலில் வளரும் குழந்தைகள், இதுபோன்ற பாலியல் வன்கொடுமைகளுக்கு அதிகளவில் ஆளாகின்றனர். தங்களது குழந்தைகள் பாதுகாப்பில் பெற்றோர் கவனம் செலுத்தினால் இதுபோன்ற குற்றங்களைப் பெரும்பாலும் தவிர்த்துவிட முடியும். அவர்களே அக்கறையின்மையே தெரிந்த நபர்களால், குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுகின்றனர். 

பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட குழந்தைகள் மீட்கப்பட்டதும், குழந்தைகள் நலக் குழுமத்திடம் ஒப்படைக்கப்படுகின்றனர். அவர்களுக்கு எந்த மாதிரியான பாலியல் தொந்தரவு நடந்துள்ளது என்பதை அரசு மருத்துவனையில் பரிசோதனை செய்து உறுதி செய்யப்படுகிறது. அந்த அறிக்கையின் அடிப்படையில் குற்றவாளிக்கு தண்டனை உறுதி செய்யப்படுகிறது. பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஆதரவளிக்கும் கேர் ஹோம்களில் குழந்தைகள் ஒப்படைக்கப்படுகின்றனர். சில குழந்தைகள் விரும்பும்பட்சத்தில் கவுன்சிலிங் கொடுக்கப்பட்டு, வீட்டுக்கு அனுப்பப்படுகின்றனர். அவர்கள் வீட்டுக்குச் செல்ல விரும்பாவிட்டால், பாதுகாப்பு மையங்களில் அனுமதிக்கப்படுவர். பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஒரு மாதம் வரை உளவியல் ரீதியாக கவுன்சிலிங் கொடுக்கப்படுகிறது. 

இதற்குப் பிறகு, அவர்கள் எங்கே விரும்புகிறார்களோ அங்கே படிப்பைத் தொடரலாம். குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்படி, பாதிக்கப்பட்ட குழந்தைகளின் மறுவாழ்வுக்கு நஷ்ட ஈடும் வழங்கப்படுகிறது. இது, அவர்கள் அடையும் பாதிப்பின் தன்மையைப் பொறுத்து இருக்கும். சேலம் ஓமலூர் சிறுமி, பேருந்து ஒன்றில் மூன்று நபர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானார். தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்த அந்தக் குழந்தைக்கு பாதிப்பின் அடிப்படையில் 7.50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டது. இதுபோன்ற கொடுமைகள் நடைபெறாமல் இருக்க, போக்சோ சட்டம் பற்றியும் விழிப்புஉணர்வை ஏற்படுத்த வேண்டும். நல்ல மாற்றத்துக்கு எல்லோரும் முயற்சிக்க வேண்டும்" என்கிறார் பிரபு.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்