Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

2 லட்சம் ரூபாய்க்கு மேல் செலவழித்து அரசுப் பள்ளியைச் சீரமைத்த தம்பதியினர்! #CelebrateGovtSchool

பள்ளி

சென்னையை ஒரு சுழற்று சுழற்றிவிட்டுச் சென்ற வர்தா புயலை அவ்வளவு எளிதில் மறந்திருக்க மாட்டோம். மரங்கள், கட்டடங்கள் என அந்தப் புயலின் தாண்டவத்தில் சிக்கியவற்றில் ஒன்று, சென்னையின் அயம்பாக்கம் பகுதி ஆதிதிராவிடர் நலத் தொடக்கப் பள்ளி. விரிசலான தரை, உடைந்த ஓடுகள், உரிந்த சுவர்கள் என உருக்குலைந்த பள்ளியை தமது அர்ப்பணிப்பான முயற்சியால் உருமாற்றி, உரமேற்றி இருக்கின்றனர் ஒரு தம்பதியர்.

சென்னையில் தனியார் நிறுவனங்களுக்கு கன்சல்டன்டு பணி செய்பவர் இளஞ்செழியன். அவரின் மனைவி லாவண்யா. வர்தா புயலின்போது, அயம்பாக்கம் பள்ளியின் உள்கட்டமைப்பு மிகவும் மோசமாகப் பாதிப்படைந்தது. அதற்கடுத்த மாதங்களில் பள்ளியின் ஓடுகள் உடைந்து விழ ஆரம்பித்தன. இதனால், எந்த நேரமும் எதுவும் நடக்கலாம் என்ற பயத்துடனே மாணவர்கள் பள்ளிக்கு வந்துகொண்டிருந்தனர். அரசும் எந்த நடவடிக்கையும் எடுப்பதாக இல்லை; உதவிசெய்ய வருபவர்களையும் உள்ளாட்சித் தேர்தல் வரப்போகிறது எனச் சொல்லி, தேர்தல் விதிகள் தடுத்தன. அதையெல்லாம் தாண்டி பள்ளிக்குத் தேவையான உள்கட்டமைப்பைச் செய்துள்ளனர் இளஞ்செழியன் - லாவண்யா தம்பதியினர். 

பள்ளி

''அப்துல் கலாம் மீதுள்ள பற்றின் காரணமாக நான்கு ஆண்டுகளுக்கு முன்பிலிருந்து நண்பர்கள் சிலர் இனைந்து பொதுச்சேவைகளில் ஈடுபட ஆரம்பித்தோம். 2015-ம் ஆண்டு அப்துல் கலாம் ஐயா மறைந்தபோது, மேலும் சிரத்தையெடுத்து இந்தச் சேவையைத் தொடர வேண்டும் என்று முடிவுசெய்தோம். அவருக்குச் சிலையெடுத்தோம். அந்தச் சிலையைப் பொதுஇடத்தில் நிறுவ ஏகப்பட்ட கெடுபிடிகள் விதிக்கப்பட்டதால், வேலம்மாள் பள்ளியில் 2015 அக்டோபர் 15-ம் தேதி, அவரின் பிறந்தநாளில் நிறுவினோம். அடுத்து, சிவகங்கையிலும் ஒரு சிலையை நிறுவினோம். பிறகுதான், சிலைக்குச் செலவிடும் தொகையை மாணவர்களின் நலனுக்குச் செலவிடலாமே என நினைத்தோம். அதற்கான களமாக அமைந்ததுதான் இந்தப் பள்ளி'' என்று புன்னகையுடன் தொடர்கிறார் இளஞ்செழியன். 

''உடனடியாக பள்ளித் தலைமை ஆசிரியரைச் சந்தித்து கடிதமாக எழுதிக் கேட்டோம். ஒரு மாதத்தில் தரமான ஓடுகளைப் புதுப்பித்தோம். ஓடுகள் கீழே விழாமல் இருக்க, அதிக அழுத்தத்தில் உருவாக்கப்பட்ட ஹை டென்சிட்டி தெர்மாக்கோல்களை ஓட்டுக்கு அடுத்த அடுக்கில் வைத்து, மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்தோம். அடுத்து, சுவர்களுக்கு வண்ணம் பூசி, மாணவர்கள் அமர்வதற்கான நாற்காலிகளைக் கொடுத்தோம். மூன்று செட் ஆடைகள், காலணிகள், அடையாள அட்டை என அவர்களது அடிப்படைத் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்தோம். அப்துல் கலாமின் சிலையும் வளாகத்தில் நிறுவ நினைத்தோம். 'அம்பேத்கர் சிலையும் எங்கள் பகுதியில் நிறுவுங்கள்' என அந்தப் பகுதி மக்கள் கேட்டனர். இப்போது, இருவர் சிலைகளும் இந்தப் பள்ளிக்கூடத்தில் அழகாக வீற்றிருக்கின்றன. மேலும், ஒரு யோகா ஆசிரியரையும் கராத்தே ஆசிரியரையும், பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் ஒரு ஆசிரியரையும் பணிக்கு அமர்த்தி, அவர்களுக்கான தேவைகளை நிறைவேற்றி வருகிறோம்'' என்கிறார் இளஞ்செழியன். 

பள்ளி

'டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டளை' என்ற பெயரில் ஒரு அறக்கட்டளையைப் பதிவுசெய்துள்ளார். இதன்மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி செய்துவரும் இளஞ்செழியனுக்கு மனைவி லாவண்யாவும் பக்கபலமாக இருக்கிறார். அதற்காக தன் வேலையை விட்டுவிட்டு முழு நேர சமூகப் பணிக்கு உதவிவருகிறார். அயம்பாக்கம் ஆதிதிராவிடர் நலத் தொடக்கப் பள்ளிக்கு மட்டுமே 2 லட்சம் ரூபாய்க்கு மேல் செலவழித்துள்ளனர். 

''நம்மை உருவாக்கிய இந்தச் சமூகத்துக்கு நம்மால் முடிந்த உதவியை ஒவ்வொருவரும் செய்ய வேண்டும். அப்படித்தான் செய்துவருகிறோம்'' என்று புன்னகைக்கிறார் லாவண்யா.

அரசுப் பள்ளிகள் முன்னேற்றத்துக்கு உதவும் இவர்களின் பணிகளுக்கு வாழ்த்துகள் சொல்வோம்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement