பெட்ரோல் ஏற்றிவந்த ரயிலில் திடீர் தீ! -அதிகாரிகளின் சாதுர்யத்தால் பெரும் விபத்து தடுப்பு

பெட்ரோல் ஏற்றி வந்த ரயிலில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. அதிகாரிகள் மிகுந்த கவனத்துடன் தீயை அணைக்க நடவடிக்கை எடுத்ததால், பெரிய அளவில் ஏற்பட இருந்த விபத்து தவிர்க்கப்பட்டது.

சென்னையிலிருந்து டேங்கர்களில் பெட்ரோல் ஏற்றிவந்த ரயில், நெல்லை ரயில் நிலையத்தில் வந்து நின்றது. அப்போது, ஒரு டேங்கரின் அடிப் பகுதியில் கரும்புகை வருவதை அங்கிருந்த ரயில்வே ஊழியர்கள் பார்த்தனர். உடனடியாக அதிகாரிகளுக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ரயில்வே அதிகாரிகள், நிலைமையின் தீவிரத்தைப் பார்த்து அச்சம் அடைந்தனர். உடனடியாக தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். 

ரயிலில் தீ

சம்பவ இடத்துக்கு 3 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்புத்துறையினர், தீ மேலும் பரவாமல் கட்டுப்படுத்தினர். நெல்லை ரயில் நிலையத்தின் அருகே இந்தியன் ஆயில் நிறுவனத்துக்குச் சொந்தமான பெட்ரோலியப் பொருள்களைச் சேமித்துவைக்கும் கிடங்கு உள்ளது. அங்குள்ள ராட்சச தொட்டிகளில் பெட்ரோலியப் பொருள்கள் சேமிக்கப்படுகின்றன. பின்னர், அவற்றை நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு மட்டுமல்லாமல், தூத்துக்குடி, குமரி மாவட்டங்களுக்கும் லாரிகள் மூலமாகக் கொண்டுசெல்லப்பட்டு, விநியோகம் செய்யப்படுகிறது.

அந்த இடத்தின் அருகே நிறுத்தப்பட்டிருந்த ரயிலில் தீ விபத்து ஏற்பட்டிருந்தால், மிகப்பெரிய விபத்து  நடந்திருக்கும். ஆனால், அதிகாரிகளும் தீயணைப்புத்துறையினரும் மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு, தீ பரவாமல் தடுத்தனர். அதிக பாரத்துடன் வந்த ரயில் நிறுத்தப்பட்டபோது, அதன் சக்கரங்கள் தண்டவாளத்தில் உராய்ந்ததன் காரணமாகவே இந்த தீ விபத்து ஏற்பட்டதாகவும்  உரிய நேரத்தில் அணைக்கப்பட்டதால் விபத்து தவிர்க்கப்பட்டுவிட்டதாகவும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.


 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!