மணல் கொள்ளையில் ஈடுபடும் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்? அன்புமணி ராமதாஸ் அதிரடி

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், குட்கா விற்கிறார். போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், மணலை முறைகேடாக விற்கிறார் என்று பா.ம.க இளைஞர் அணித் தலைவர் அன்புமணி குற்றம் சாட்டினார். 


தமிழகத்தில் காவிரியில் தண்ணீர் திறக்கக் கோரி, ஓகேனக்கல் தொடங்கி பூம்புகார் வரை அன்புமணி ராமதாஸ் இருசக்கர வாகனப் பிரச்சாரம் செய்கிறார். இரண்டாம் நாளான இன்று ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் தொடங்கி, கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம், வாங்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், வாகனப் பிரசாரம் செய்தார். அப்போது, ஆங்காங்கே அமைக்கப்பட்டிருந்த மேடைகளில் பேசிய தருமபுரி எம்.பி., அன்புமணி ராமதாஸ், 'தமிழகத்தில் விஜயபாஸ்கர்னு பேர் வச்சாலே, ஊழலுக்கும் கொள்ளைக்கும் துணைபோவார்கள் போல. சுகாதாரத்துறை அமைச்சராக இருக்கும் சி.விஜயபாஸ்கர், குட்கா விற்கிறார். அவருக்கு நாற்பது கோடி வரை குட்கா கம்பெனியினர் லஞ்சம் கொடுத்திருக்கிறார்களாம்.

இந்த மாவட்டத்திலுள்ள போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், மணல் கொள்ளையில் பிரசித்திபெற்றுவருகிறார். இங்குள்ள காவிரி ஆற்றில் உள்ள நீரை, கரூர் காகிதபுரத்தில் உள்ள தமிழ்நாடு காகித ஆலை திருட்டுத்தனமாக உறிஞ்சுகிறது. மணல் வேண்டும் என்று மக்கள் கேட்கிறார்கள் என்பதற்காகத்தான், குறைந்த விலையில் விற்க ஆன்லைன் முறையை தமிழக முதல்வர் அறிமுகப்படுத்தினாராம். ஆனால், அதிலும் பல முறைகேடு. தமிழகத்துக்கு ஒருநாளைக்கு 30 ஆயிரம் லோடு மணல் தேவை. ஆனால், எடுப்பதோ, 90 ஆயிரம் லோடுகள். மீதமுள்ள 60 ஆயிரம் லோடுகள் எங்கே போகிறது? கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மாலத்தீவு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு கடத்தப்படுகிறது. இதற்குப் பின்னே, போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் பெயர் அடிபடுகிறது' என்று குற்றம்சாட்டினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!