Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மலை ஆக்கிரமிப்பைத் தடுத்ததால் ஆத்திரம்… நித்யானந்தா சீடர்கள் ஆபாசத் தாக்குதல்!

நித்யானந்தா

திருவண்ணாமலையில் உள்ள பவழக்குன்று மலையை நித்யானந்தாவின் சீடர்கள் ஆக்கிரமிக்க முயற்சி செய்தபோது, அதைத் தடுத்து நிறுத்தியதில் முன்னின்ற எழுத்தாளர் கருப்பு கருணாவையும், அவருடைய குடும்பத்தினரையும் இழிவுபடுத்தும் வகையில் சமூகவலைதளத்தில் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. மேலும், கருப்பு கருணாவுக்கு கொலைமிரட்டலும் விடுக்கப்பட்டுள்ளது. இது, திருவண்ணாமலையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில துணைப்பொதுச்செயலாளரான கருப்பு கருணா, திருவண்ணாமலையைச் சேர்ந்தவர். சில வாரங்களுக்கு முன்பாக, திருவண்ணாமலையில் உள்ள பவழக்குன்று மலையை நித்யானந்தாவின் சீடர்கள் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்க முயற்சி செய்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும், த.மு.எ.க.ச அமைப்பினரும் பொதுமக்களும் சேர்ந்த அந்த ஆக்கிரமிப்பு முயற்சியைத் தடுத்து நிறுத்தினர். இந்த நிலையில், நித்யானந்தாவின் ஆட்கள் தனக்குக் கொலைமிரட்டல் விடுப்பதாக கருப்பு கருணா குற்றம்சாட்டியிருக்கிறார்.

இது தொடர்பாக, கருப்பு கருணாவிடம் பேசினோம். “சமீபத்தில், பன்றிக்குப் பூணூல் போடும் போராட்டம் நடத்தப்போவதாக திராவிட பெரியார் கழகம் அறிவித்தது. உடனே நித்யானந்தா, பன்றிக்கு கருப்புச்சட்டை போடுவோம் என்று பேசினார். நித்யானந்தாவின் அந்தக் கருத்தைக் குறிப்பிட்டு, ‘திருவண்ணாமலையை உங்கள் ஊர் என்று சொல்கிறீர்கள். முடிந்தால் திருவண்ணாமலையில் அந்தப் போராட்டத்தை நடத்துங்கள்’ என்று என் ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு ஸ்டேட்டஸ் போட்டேன். உடனே, ஃபேக் ஐ.டி மூலம் நித்யானந்தாவின் சீடர்கள், எனக்கு எதிராக ஆபாசமாக கமென்ட்களைப் பதிவிட்டனர்.

அவற்றை ஸ்கிரீன் ஷாட் எடுத்து, ஒரு சாமியாரின் ஆட்கள் எப்படியெல்லாம் எழுதுகிறார்கள் பாருங்கள் என்று ஸ்டேட்டஸ் போட்டேன். உடனே, என்னையும் என் குடும்பத்தினரையும் இழிவுபடுத்தும் வகையில் வீடியோ ஒன்றை சமூகவலைதளத்தில் வெளியிட்டனர். மேலும், நித்யானந்தாவின் சீடர் ஒருவர், வீடியோ ஒன்றில், எனக்கு நேரடியாகக் கொலைமிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து காவல்நிலையத்தில் புகார் செய்துள்ளோம்.

நித்யானந்தா, நடிகை ரஞ்சிதாவுடன் சேர்ந்திருக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பாகியிருந்த நேரம். அப்போது, திருவண்ணாமலைக்கு ‘சத்சங்கம்’ நடத்த நித்யானந்தா வருகிறார் என்று போஸ்டர் ஒட்டியிருந்தார்கள். உடனே, ‘சரச சாமியாருக்கு சத்சங்கம் எதற்கு?’ என்று த.மு.எ.க.ச சார்பில் போஸ்டர் அடித்து ஒட்டினோம். அத்துடன், ‘திருவண்ணாமலை கோவிலுக்குள் நித்யானந்தாவை அனுமதிக்கக் கூடாது’ என்று அதிகாலை நாலரை மணிக்கு கருப்புக்கொடி போராட்டம் நடத்தினோம். அதிகாலை நாலரை மணிக்கு நித்யானந்தா வருகிறார் என்ற தகவல் முன்கூட்டியே எங்களுக்குக் கிடைத்தது.

நித்யானந்தா

திருவண்ணாமலை கோவிலுக்கு நான்கு வாசல்கள் உள்ளன. நாங்கள் ஒரு வாசலில் போராட்டம் நடத்திக்கொண்டிருந்தபோது, ராஜகோபுரம் வழியாக கோவிலுக்குள் நித்யானந்தா போய்விட்டார். பிறகு, அவர் வெளியே வந்தபோது மடக்கிவிட்டோம். சொந்த ஊரில் அப்படியொரு எதிர்ப்பு வந்ததால், அவர் ஆத்திரமடைந்தார்.

அதன் பிறகு, பவழக்குன்று மலையை ஆக்கிரமிக்க நித்யானந்தா முயற்சி செய்தார். ‘அந்த மலையில் உட்கார்ந்திருந்தபோதுதான், எனக்கு ஞானம் கிடைத்தது. எனவே, அது என்னுடைய மலை’ என்று நித்யானந்தா சொல்லிவருகிறார். மொத்தம்  3,100 ஏக்கர் பரபரப்பளவு கொண்ட மலை அது. முழுக்க முழுக்க புறம்போக்கு நிலம். அதை, நித்யானந்தாவின் ஆட்கள் குடிசை போட்டு ஆக்கிரமித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும், த.மு.எ.க.ச அமைப்பினரும், பொதுமக்களும் சேர்ந்து, போலீஸ் உதவியுடன் அவர்களை அங்கிருந்து வெளியேற்றினோம்.

அதற்கடுத்து, சில வாரங்களுக்கு முன்பு, பவழக்குன்று மலையை ஆக்கிரமிக்கும் முயற்சியில் நித்யானந்தாவின் ஆட்கள் மீண்டும் ஈடுபட்டனர். சுமார் 50 பேர் மலையை ஆக்கிரமித்து சாமி சிலைகளை வைத்து பூஜை செய்ய ஆரம்பித்தனர். பிறகு, அங்கு குடிசைகள் போட்டு தங்க ஆரம்பித்தனர். சுமார் 100 ஏக்கர் அளவுக்கு கம்பி வலை அமைத்து மலையை வளைத்தனர். நாங்கள் தாசில்தார், ஆர்.டி.ஓ., கலெக்டர் ஆகியோரிடம் புகார் செய்து, பெரும் போராட்டத்துக்குப் பிறகு அவர்களை வெளியேற்றினோம்.

இப்படியாக, பவழக்குன்று மலையை ஆக்கிரமிக்க முயற்சி செய்ததை, இரண்டு முறையும் முறியடித்தோம். அதனால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீதும், த.மு.எ.க.ச மீதும் நித்யானந்தா கடும் ஆத்திரத்தில் இருக்கிறார். இங்குள்ள சில லெட்டர்பேடு கட்சிகளை வைத்து எங்களுக்கு எதிராக போஸ்டர்களை ஒட்ட வைத்தார். ‘மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் வீரபத்திரன் ஐந்து லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டார்’ என்றும், ‘திருவண்ணாமலையில் உள்ள மலையில் 4,500 வீடுகள் உள்ளன. அவற்றை அகற்ற வேண்டும்’ என்றும் திருவண்ணாமலை முழுவதும் 20 ஆயிரம் போஸ்டர்களை ஒட்டினார்கள். இந்த சம்பவங்களை எல்லாம் என்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் தொடர்ந்து அப்டேட் செய்தேன். அதனால், நித்யானந்தாவின் சீடர்கள் ஃபேஸ்புக்கில் என்னை ஆபாசமாகத் திட்டிவருகிறார்கள். வீடியோவில் கொலைமிரட்டலும் விடுத்துள்ளார்கள். என் குடும்பத்தினரை இழிவுபடுத்தும் வகையில் வீடியோ வெளியிட்டுள்ளார்கள்
எப்படியாவது பவழக்குன்று மலையை ஆக்கிரமித்து ஆசிரமம் கட்டிவிட வேண்டும் என்பது நித்யானந்தாவின் நீண்டகாலக் கனவு. அதற்கு இடையூறாக இருப்பதால் எங்கள் மீது தாக்குதல் தொடுக்கிறார்கள். இரண்டு பேரையாவது போட்டுத்தள்ளினால்தான் நாம் நினைப்பது நடக்கும் என்று நினைக்கிறார்கள். இரண்டு நாள்களுக்கு முன்பு, என் வீட்டுப் பக்கம் வந்து சிலர் நோட்டம்விட்டுப் போயிருக்கிறார்கள். அதற்கு, உள்ளூரைச் சேர்ந்த ஒரு சிலர் உடந்தையாக இருக்கிறார்கள் என்று தெரிகிறது.

கருப்பு கருணாஇங்கு பல அரசியல் கட்சிகள் இருந்தபோதிலும், நித்யானந்தாவின் இந்த ஆக்கிரமிப்பு முயற்சியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே எதிர்த்து வருகிறது. திருவண்ணாமலையைச் சேர்ந்த அரசியல் புள்ளிகள் சிலர் எங்களிடம் வந்து, ‘பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் (நித்யானந்தா) பெரிய ஆளாக வந்திருக்கிறார். அவரைப்போய் ஏன் எதிர்க்கிறீர்கள்? அவர் ஒரு சூத்திரர் என்பதால்தானே எதிர்க்கிறீர்ள். இதுபோல ரமணரை எதிர்ப்பீர்களா?’ என்றெல்லாம் கேட்கிறார்கள். யாராக இருந்தாலும், அரசு நிலத்தை ஆக்கிரமிப்பதை எப்படி அனுமதிக்க முடியும்? எனவே, நாங்கள் எதிர்க்கிறோம்” என்று உறுதியுடன் சொல்கிறார் கருப்பு கருணா.

கருப்பு கருணாவின் ஃபேஸ்புக் பக்கத்தில் ஆபாசமான கமென்ட்களை பதிவிட்டு வருபவர்கள், தங்களுடைய புரெஃபைலில் நித்யானந்தாவின் புகைப்படத்தையே வைத்துள்ளார்கள். அந்தப் பதிவுகளில் பெரியாரையும், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியையும் கூட இழிவாகச் சித்தரிக்கும் படங்களை அந்த நபர்கள் வெளியிட்டுள்ளனர். இதைக் கண்டித்து தமிழகத்தின் கலை இலக்கிய அமைப்புகள் ஒன்று சேர்ந்து ஆகஸ்ட் 3-ம் தேதி போராட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளன.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement