“சென்னையில் மழை பெய்யாததற்கு இதுதான் காரணம்...” - நடிகர் மன்சூர் அலிகான் கண்டுபிடிப்பு! | "This is the reason why there is no rain in Chennai "- Actor Mansoor Ali Khan!

வெளியிடப்பட்ட நேரம்: 19:10 (30/07/2017)

கடைசி தொடர்பு:11:59 (31/07/2017)

“சென்னையில் மழை பெய்யாததற்கு இதுதான் காரணம்...” - நடிகர் மன்சூர் அலிகான் கண்டுபிடிப்பு!

 

ரசியல் கருத்தானாலும், சமூகக் கருத்தானாலும் மனதில் தோன்றியதை தயங்காமல் வெளிப்படுத்திவிடுபவர் நடிகர் மன்சூர் அலிகான். சமீபத்தில் திரைப்பட நிகழ்ச்சி ஒன்றில், 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில், கமல்ஹாசன் பங்கு பெற்றிருப்பது குறித்து துணிச்சலான கேள்விகளை எழுப்பியவர். சமீபத்திய அரசியல் நிகழ்வுகள் குறித்த நமது கேள்விகளுக்கு, இங்கே 'பளிச் பதில்' அளிக்கிறார்....

மன்சூர் அலிகான்

“இன்றைய அரசியல் சூழலில் யாரை கேள்வி கேட்க விரும்புகிறீர்கள்?”

“போன வருஷம் செப்டம்பர் 22-ம் தேதியிலிருந்து இந்தக் கேள்வியைக் கேட்டுக்கிட்டே இருக்கிறேன். அதாவது, போன வருஷம் செப்டம்பர் 22-ம் தேதி நமது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, திடீரென உடல் நலம் சரியில்லாமல் அப்போலோவில் அட்மிட் ஆகிறார். அப்படி திடீரென அவருக்கு என்ன உடல்நலக்குறைவு ஏற்பட்டது என்பதைக் கண்டறிய போயஸ்கார்டனில் உள்ள வேதாநிலைய வீட்டிலுள்ள சி.சி.டி.வி காட்சிகளைப் பார்த்துதானே தெரிந்துகொள்ள வேண்டும். அந்த சி.சி.டி.வி புட்டேஜ் எங்கே, பூங்குன்றன் எங்கே, அங்கே வேலை செய்துகொண்டிருந்த ஆட்கள் எங்கே என்றெல்லாம் கேட்டால், வாயில் வாழைத்தாரை வைத்ததுபோல் பதில் சொல்லாமல் எஸ்கேப்பாகிவிடுகிறார்கள் எல்லோரும். 

வீட்ல வைங்க, ரோட்ல வைங்கன்னு ஊரு, உலகமெல்லாம் சி.சி.டி.வி காமிரா வைக்கச்சொல்லி காவல்துறை அறிவிப்பு செய்கிறது. செயின் பறிக்கிறவர்களைக்கூட சி.சி.டி.வி படம் பார்த்துதான் புடிக்கிறார்கள். ஆனால், '22-ம் தேதி போயஸ்கார்டனில் நடந்தது என்ன? கார்டனில் உள்ள புட்டேஜ் எங்கே போனது?' என்பது குறித்து மட்டும் யாரும் கேள்வியும் கேட்கமாட்டேன் என்கிறார்கள். இந்தக் கேள்வியைக் கேட்கவேண்டிய ஊடகமும்கூட, மவுனமாகி நிற்கிறது. சென்னையில் இன்னும் நல்லமழை பெய்யாததற்கு இதுதான் காரணம்.''

“ஜெயலலிதா, மரணத்தில் உங்களுக்கு என்ன சந்தேகம்?”

“ஜெயலலிதா, நல்லவரா கெட்டவரா என்பதெல்லாம் வேறு விஷயம். ஆனா, அவர் சாகடிக்கப்பட்டிருக்கிறார். ‘மோடியா இந்த லேடியா' என்றெல்லாம் தைரியமாக கேட்டு நின்ற பெண்மணி ஜெயலலிதா. அவரை ஜெயிக்கமுடியாம சாகடிக்க வெச்சுட்டு, ஐயோ இப்படி சாகடிச்சுட்டாங்களேன்னு இப்ப சொல்றாங்க. சொத்துக்களைப் பிடுங்குறாங்க. 'ஊழல் பண்ணவில்லை, ஊழல் பண்ணவில்லை' என்று சொல்லிக்கொண்டே வெளிப்படையா இந்தமாதிரி ஊழல்களை பண்ணிக்கிட்டு, ஜனாதிபதி தேர்தல்லயும் அவங்களோட ஆதரவை வாங்கிக்கிட்டு மறைமுக ஆட்சி செய்றாங்க. 

ஜெயலலிதா

நம்மை மாதிரி சாதாரண ஆட்கள் செத்தாக்கூட, 'சி.சி.டி.வி எங்கே, புட்டேஜ் காட்டு'ன்னு கேட்டு உள்ளே தூக்கி வெச்சுடமாட்டாங்க இந்த போலீசு? அப்போ கமிஷனரா இருந்த ஜார்ஜ் என்ன பண்ணினார்? ஏன் இந்தக் கேள்வியை சென்ட்ரல் கவர்மென்ட் கேட்கவில்லை?
குட்கா விற்பதற்கு கோடிகளில் லஞ்சம் வாங்குகிறார்கள். எந்த அரசாக இருந்தாலும் ஊழல்தான் செய்கிறார்கள். என்னங்க ஜனநாயகம் இது? மது வேண்டாம்னு சொல்லி போராடுறவங்க மண்டையை அடிச்சி உடைச்சி  'ஏய் நீ என்ன சொல்லுறது?'னு கேக்குது போலீஸ். அப்ப, போலீஸ்னாலே தப்பு செய்யச் சொல்லும்னுதானே சின்னப் பசங்க மனசுல பதிஞ்சுபோகுது?

மதுக்கடை வேணாம்னு மக்கள் போராடுனாங்கன்னா, அதை விட்டுடவேண்டியதானே? வருமானம் வருதுனு சொன்னா... அப்படிப்பட்ட அயோக்கியத்தனமான வருமானம் எதுக்கு?

10 லட்சம் டன்னுக்கும் அதிகமான மணலை அள்ளி மாலத்தீவுக்கும் துபாய்க்கும் அனுப்புறாங்க. இந்த மணலைத்தான் துபாய்ல கடல்ல கொட்டி கட்டடம் கட்டுறான். ஆக, இப்படி நாம மணலை அள்ளி அனுப்புறது எவ்வளவு பெரிய துரோகம்? ஆற்றுப்படுகையில ஒரு இஞ்ச் மணல் படியிறதுக்கு 100 வருஷம் ஆகும்னு சொல்றாங்க. ஆனா, இவங்க ராட்சஷ எந்திரங்களை வெச்சு டன் டன்னா மணலை சுரண்டி எடுத்து அனுப்புறாங்க... இது என்ன நாடு? இதே நிலைமையில போனா.... அடுத்த தலைமுறையே உயிர்வாழ முடியாது.
சுற்றுப்புறச் சூழலை கெடுக்கும் இந்த அயோக்கியர்களைச் சுட்டிக்காட்டத்தான் எனது கைக்காசு 10 லட்சம் ரூபாயைப் போட்டு 'பூதாளம்' என்று குறும்படம் ஒன்றை எடுத்தேன். பல நாடுகளுக்கும் படத்தை அனுப்பினேன். யூ ட்யூபில் 'பூதாளம்' என்று தட்டினாலும் படம் வரும். பாருங்கள்....'' 

“ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம், விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடையை நீக்கியிருக்கிறதே?”

“தாமதமாக வந்த தீர்ப்பு என்றாலும் வரவேற்கிறேன். தமிழ்ச் சமூகம் தலைநிமிரணும். இந்திய அரசும் சேர்ந்துநின்றுதான் அங்கே போரை நடத்தியது. இப்போ அதே இந்திய அரசாங்கம் தமிழ்நாட்டிலுள்ள தமிழர்களையும் இந்தியர்களாக மதிக்காமல் நாசம் பண்ணுகிறது; பொருளாதாரத்தை சூறையாடுகிறது.

ஜல்லிக்கட்டு போராட்டம் மாதிரி எழுச்சி மறுபடியும் ஏற்பட்டுவிடக்கூடாது என்று பயப்படுகிறார்கள். அதனால்தான் போராடுகிறவர்களை எல்லாம் குண்டாஸில் கைது செய்கிறார்கள் இந்த யோக்கியர்கள். இன்றைக்கு காமராஜர் உயிரோடிருந்து இதையெல்லாம் பார்த்தால், அவரே கோபம் தாங்காமல் செயல்பட்டிருப்பார்.

“பி.ஜே.பி தலைமையிலான மத்திய அரசின் செயல்பாடுகள் எப்படியிருக்கின்றன?”

“மோடி ஊழல் செய்யவில்லை; ஊழல் செய்யவில்லை என்கிறார்கள். ஆனால், இதுபோன்ற ஊழல்வாதிகளோடு சேர்ந்துகொண்டு ஓட்டு வாங்குகிறார்... அவர்களோடு சேர்ந்துகொண்டுதானே ஊர் சுற்றுகிறார். அப்ப இதுவே ஒரு ஊழல்தானே?

modi

ஏற்கெனவே பண மதிப்பிழப்பு நடவடிக்கையால், ஏழை மக்களின் வாழ்க்கை சூறையாடப்பட்டது. இப்போ ஜி.எஸ்.டி-னு அடுத்தக்கட்டமாக சூறையாடுறாங்க. திடீர்னு ரூபாய் நோட்டு செல்லாதுனு சொல்லிட்டாங்க.... தியேட்டருக்கு வரவேண்டிய கூட்டமெல்லாம் நின்னுபோச்சு.... அந்த சமயத்துல மட்டும் சினிமாத்துறைக்கு 1000 கோடி ரூபாய் வரையிலும் நட்டம்தானே?''

“அரசியல் குறித்த எல்லா கேள்விகளுக்கும் துணிச்சலாக கருத்து தெரிவிக்கிறீர்களே... இதன் எதிரொலியாக பிரச்னைகளை சந்தித்திருக்கிறீர்களா?”

“தொல்லை வரும், குடைச்சல் வரும் என்பதையெல்லாம் நான் கண்டுகொள்வதேயில்லை. துணிந்துதான் செயல்படுகிறேன். 1992 அல்லது 94 என்று நினைக்கிறேன். அப்போது நான் பா.ம.க-வில் இருந்தேன். ராணிப்பேட்டை இடைத் தேர்தலின்போது ஜெயலலிதா கருப்புப் படை பாதுகாப்போடு நூற்றுக்கணக்கான கார்களில் வலம் வந்தார். அப்போது பா.ம.க பிரசாரத்துக்காக நான் அங்கே போனபோது, போலீஸ் என்னை வழிமறித்தது. 'நானும் பிரசாரத்துக்குத்தானே வந்திருக்கிறேன்' என்று சொல்லி சாலையிலேயே உட்கார்ந்துவிட்டேன். பின்னர் போலீஸ் கைது செய்து, வழக்கும் நடந்தது. அதனால் எந்தக் காலத்திலும் நான் பயந்துகொண்டு இருந்ததுகிடையாது.''

“ஜெயலலிதாவுக்கு எதிராக அரசியல் செய்துகொண்டிருந்த நீங்கள், பின்னர் எதனால் அ.தி.மு.க-வில் இணைந்தீர்கள்?”

“ஜெயலலிதா மீதிருந்த அன்பினாலும், பாசத்தினாலும் அவருடைய கட்சியில் பின்னாளில் நான் இணைந்தேன். பக்கத்திலிருந்து பார்த்தபிறகுதான் அவர் குழந்தைத்தனமானவர் என்பதைத் தெரிந்துகொண்டேன். அவரைப் பின்னாலிருந்து வழிநடத்துகிறவர்கள்தான்  ஜெயலலிதாவின் பெயரைக் கெடுத்து, குட்டிச்சுவராக்கி வைத்து இன்று கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். மற்றபடி ஜெயலலிதா, தெய்வமானவங்க. அந்த நன்றி விசுவாசத்தில்தான் அவருக்காக இவ்வளவு குரல் கொடுக்கிறேன்.''


டிரெண்டிங் @ விகடன்