வெளியிடப்பட்ட நேரம்: 20:32 (30/07/2017)

கடைசி தொடர்பு:11:34 (31/07/2017)

போலி பஸ்-பாஸ் தயாரித்து மோசடி! போலீஸில் சிக்கிய அரசு ஊழியர்கள்

                                  பஸ் நிலைய வாசலில் பயணிகள் 

ரசுப் பேருந்துகளில் பயணம் செய்ய வழங்கப்படும் கட்டண 'பஸ்-பாஸ்' போலவே போலியாகத் தயாரித்து மோசடியில் ஈடுபட்ட கும்பலைப் போலீஸார் கைதுசெய்துள்ளனர். சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் ஒருநாள் மட்டும் விருப்பம்போல் பயணம் செய்ய ரூபாய் 50-க்கு 'டெய்லிபாஸ்' வழங்கப்படுகிறது. விருப்பம்போல் பொதுமக்கள் பயணிக்கும் மாதாந்திர 'பஸ்-பாஸ்' ரூபாய் 1,000 என்ற கட்டணத்தின்கீழ் வழங்கப்படுகிறது. இந்த ஆயிரம் ரூபாய் பஸ்-பாஸைச் சிலர் தாங்களே தயாரித்து குறைந்த விலையில் விற்கிறார்கள் என்ற தகவல் போக்குவரத்துக் கழகத்துக்குத் தெரியவரவே விவகாரம், புகாராகப் போலீஸுக்குப் போனது.

இதுதொடர்பாகச் சென்னைப் பல்லவன் போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி, சென்னைப் போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதனிடம் புகார் அளித்திருந்தார். இதையடுத்து அந்த மனுமீது சென்னை மத்தியக் குற்றப்பிரிவு போலீஸார், தீவிர விசாரணை நடத்திவந்தனர். விசாரணையில், கிருஷ்ணகுமார் (திருவான்மியூர் டெப்போ) மற்றும் ஜெகதீஷ், ஆந்திராவின் நகரியைச் சேர்ந்த ரமேஷ்பாபு, சுரேஷ் (அண்ணா நகர் டெப்போ), பிரகாஷ் (ஆவடி டெப்போ) ஆகிய ஐந்து பேர் பிடிபட்டனர். அடுத்தகட்ட விசாரணையில், ரூபாய் 100 முதல் 200 வரையில் வாங்கிக்கொண்டு, ஆயிரம் ரூபாய் விலையுள்ள விருப்பம்போல் பயணிக்கும் மாதாந்திர பஸ்-பாஸ்களை இவர்கள்  தயாரித்துக்கொடுத்தது தெரியவந்தது. இந்த மோசடிக்குப் டெப்போக்களில் பணியாற்றும் ஊழியர்களில் சிலரும்  உடந்தையாக இருந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. 

போலீஸில் சிக்கிய ஐந்து பேரும் 475, 468, 470, 471 மற்றும் 408 ஆகிய சட்டப் பிரிவுகளின்கீழ் கைதுசெய்யப்பட்டு, சென்னை எழும்பூர் (அல்லிக்குளம்) கோர்ட்டில் மாஜிஸ்திரேட் கபீர் முன்பு ஆஜர் படுத்தப்பட்டனர். இந்தப் போலி பஸ்-பாஸ் மோசடி விவகாரத்தில் தமிழ்நாடு மின்வாரிய கான்ட்ராக்ட் ஊழியர் ரமேஷ்பாபு மற்றும் கிருஷ்ணகுமார் ஆகிய இருவர்தான் மூளையாக இருந்து செயல்பட்டவர்கள் என்று போலீஸார் கருதுகின்றனர்.

MTC Bus

சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழக (பல்லவன் இல்லம்) மக்கள் தொடர்பு அதிகாரி குமரேசன் கூறும்போது, "டிக்கெட் பரிசோதகர்களின் பார்வையில்தான் இந்தப் போலி பஸ்-பாஸ் முதலில் பட்டிருக்கிறது. அவர்கள் கொடுத்த தகவலின் பேரில்தான் புகார் செய்யப்பட்டது. பஸ்-பாஸ் போலவே கலர் ஜெராக்ஸ் எடுத்துத் தயாரித்துள்ளார்கள். பெரிய மோசடிதான் இது. சென்னைப் போலீஸ் கமிஷனரிடம் கடந்த மாதம் இதுகுறித்து நிர்வாக இயக்குநர் சார்பில் புகார் அளிக்கப்பட்டது" என்றார். போலி பஸ்-பாஸ் என்பது சாதாரண அளவில் நின்றுவிட்ட மோசடியா அல்லது இமாலய மோசடியா என்பது இன்னும் முழுமையாக வெளியில் வரவில்லை. ''பல ஆண்டுகளாகப் போலி பஸ்-பாஸ் தயாரித்து வந்தோம்'' என்று போலீஸில் சிக்கியவர்கள் விசாரணையில் சொன்னதாகத் தெரிகிறது.
 
தமிழக அரசின் எட்டுப் போக்குவரத்துக் கழக சொத்துக்களாக, 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் தமிழகம் முழுவதும் இயக்கப்படுகின்றன. குக்கிராமங்கள் முழுவதும் அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டாலும், லாபம் என்பது கொஞ்சமும் இல்லை என்பதுதான் தொழிற்சங்கங்களின் குற்றச்சாட்டாக இருந்துவருகிறது. அதுபோக நஷ்டத்தில் இயங்கும் அரசுப் பேருந்துகளுக்கு வழங்கப்படும் மானியத்தால், அரசுக்குக் கூடுதல் நிதிச்சுமையும் ஒவ்வோர் ஆண்டும் ஏற்படுகிறது. இந்தச் சூழ்நிலையில் 'போலி பஸ்-பாஸ்' தயாரிப்பு விவகாரம் கூடுதல் நஷ்டத்துக்கு வழி செய்திருக்கிறது.


டிரெண்டிங் @ விகடன்