“தலித்களுக்கு இரட்டை வாக்குரிமை தேவை!” தலித் அமைப்பினர் | We want two voting rights - Dalit organizations

வெளியிடப்பட்ட நேரம்: 07:54 (31/07/2017)

கடைசி தொடர்பு:08:11 (31/07/2017)

“தலித்களுக்கு இரட்டை வாக்குரிமை தேவை!” தலித் அமைப்பினர்

உள்ளாட்சித் தேர்தல்

ள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் இழுத்தடிக்கிறார்கள். இந்நிலையில்,“உள்ளாட்சி தேர்தலில் தலித் மக்களுக்கு இரட்டை வாக்குரிமை வழங்க வேண்டும்" என்று உரக்கக் கோரிக்கை வைக்கத் தொடங்கி இருக்கிறார்கள் தலித் அமைப்பைச்சேர்ந்த பிரமுகர்கள்.

தமிழகம் முழுக்க உள்ள தாழ்த்தப்பட்டவர்கள் பிரதிநிதித்துவம் பெற வேண்டும் என்பதற்காகத்தான் நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்கள் மட்டுமல்லாது, உள்ளாட்சித் தேர்தலிலும் கணிசமாக தலித் மக்களுக்கான இடஒதுக்கீடு பின்பற்றப்படுகிறது. ஆனால், இப்படித் தனித்தொகுதி, தனிப்பஞ்சாயத்து, தனி நகராட்சி என அறிவித்துவிட்டதால், அதன்மூலம் தலித்துகள், சட்டப்பூர்வ மக்கள் பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு கௌரவிக்கப்படுகிறார்கள் என்று அரசாங்கம் நினைக்கிறது. ஆனால், உண்மையில் நடப்பதென்னவோ வேறுவிதமாக உள்ளது.

“உள்ளாட்சிப் பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படும் தலித் பிரதிநிதிகள் பலர் பெரிய அளவில் முக்கியத்துவம் பெறுவதில்லை. காரணம், அந்தந்தப் பகுதிகளில் பெரும்பான்மையாக உள்ளவர்கள், தங்கள் பேச்சைக் கேட்கும் தலித் ஒருவரை நிறுத்தி வெற்றிபெறச் செய்கிறார்கள். இதனால், உண்மையான, முதுகெலும்புள்ள தலித் பிரதிநிதிகள் உள்ளாட்சிப் பதவிகளில் வெற்றிபெற முடிவதில்லை. இதைத் தடுக்க வேண்டுமானால், அம்பேத்கர் முழங்கிய இரட்டை வாக்குரிமையை தலித் மக்களுக்கு மத்திய, மாநில அரசுகள் வழங்க வேண்டும். இதை, வரும் உள்ளாட்சித் தேர்தலிலேயே கொடுக்க வேண்டும்” என்று பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களும் கோரிக்கை வைக்கத் தொடங்கி இருக்கிறார்கள்.

துணைச் செயலாளர் பாஸ்கர்இதுசம்பந்தமாக நம்மிடம் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வழக்கறிஞர் பிரிவு மாநில துணைச் செயலாளர் பாஸ்கர் என்கிற பகலவன், “எல்லா தேர்தல்களிலும் தலித் மக்களுக்கான இடஒதுக்கீடு நடைமுறையில் இருந்தபோதிலும், உள்ளாட்சி அமைப்புகளில் முதுகெலும்புள்ள, சுயமாகச் செயல்படும் தலித் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை. பாப்பாபட்டி, கீரிப்பட்டி ஊராட்சிகளில் தலித்களை உயர்சாதியைச் சேர்ந்தவர்கள் தேர்தலில் நிற்க விடாமல் தடுத்ததுடன், அவர்களை அடித்து, உதைத்து கொடுமைப்படுத்தியதையும், அங்கு தேர்தல் நடத்தவிடாமல் தடுத்த கொடுமைகளையும் கடந்த சில தேர்தல்களின்போது பார்த்தோம். அதைப்போல் இல்லாமல் தற்போது தேர்தல்களில் தலித்களுக்கு ஒதுக்கப்படும் ரிசர்வ் தொகுதிகளில் சம்பந்தப்பட்டவர்கள் நின்று ஜெயிக்கிறார்கள் என்று வேண்டுமானால் கொஞ்சம் ஆறுதல் அடைந்துகொள்ள முடியும். மற்றபடி, தேர்ந்தெடுக்கப்படும் தலித் பிரதிநிதிகளால் அவர்களுக்கும் லாபமில்லை; தலித் மக்களுக்கும் லாபமில்லை.

அவர்களை நிற்க வைத்து ஜெயிக்க வைப்பதே இதர பிரிவினர்தான். படிப்பு வாசனையே அற்ற, விவரம் தெரியாதவர்களை நிறுத்தி, வெற்றிபெறவைக்கிறார்கள். பின்னர். ஜெயிக்க வைப்பவர்களே மறைமுகமாக, அந்தப் பதவியை அனுபவிக்கும் நிலைதான் உள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் கரூர் மாவட்டத்தில் பல இடங்களில் நடந்தேறின. அதற்காகத்தான், அம்பேத்கர் விரும்பிய இரட்டை வாக்குரிமையை தலித்களுக்கு அளிக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைத்திருக்கிறோம். இதன்காரணமாக தங்களின் உண்மையான உள்ளாட்சிப் பிரதிநிதிகளை தலித் மக்கள் தேர்ந்தெடுக்கும் சூழல் உண்டாகும். ஆனால், நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களில் இரட்டை வாக்குரிமை தேவையில்லை. ஏனெனில், வேட்பாளர்களை முடிவு செய்வது அந்தந்தக் கட்சி என்பதால், அவர்களுக்கு அந்தக் கட்சியின் சின்னம் கிடைத்துவிடும். மாறாக, உள்ளாட்சிப் பதவிகளுக்கு தலித்களுக்கு இரட்டை வாக்குரிமையை அளிக்கலாம். அப்போதுதான், அந்த சமுதாயம் மேம்பட வழிவகை ஏற்படும். எங்களின் கோரிக்கைகளை, தமிழக முதல்வருக்கு அனுப்பி உள்ளோம்” என்றார்..

தமிழ்நாடு ஆதிதிராவிடர் முன்னேற்றக்கழக நிறுவனத் தலைவர் சதா.சிவக்குமாரிடம் பேசினோம்,சதா.சிவக்குமார் “தலித்களுக்கு இரட்டை வாக்குரிமை என்பது அம்பேத்கர் காலத்திலிருந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால், அதை நிறைவேற்றத்தான் யாரும் விரும்பவில்லை. அம்பேத்கர், ‘தலித் மக்கள் உண்மையான பிரதிநிதித்துவம் பெற வேண்டுமானால், அவர்களுக்கு இரட்டை வாக்குரிமையை கொண்டு வரவேண்டும்’ என்று சொன்னார். ஆனால், ‘நாட்டின் ஒற்றுமை பாதிக்கப்படும்’ என்று மகாத்மா காந்தி பேசினார். 1930-ல் புனே ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனாலும், தலித்களுக்கு இரட்டை வாக்குரிமையை யாரும் கொண்டு வரவில்லை. விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் திருமாவளவன் சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் தோற்க நேர்ந்தபோது, ‘தலித்களுக்கு இரட்டை வாக்குரிமை வேண்டும்’ என்று வலியுறுத்திப் பேசினார். ஆனாலும், அவரும் அந்தத் தேர்தலோடு தனது கோரிக்கையைத் தொடர்ந்து, வலியுறுத்த மறந்து விட்டார்.

எம்.பி-க்களாக இருந்த தலித் சமூகத்தினர் பலர் இப்போது எங்கே இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை. இந்நிலையில், தலித் மக்களுக்கு இரட்டை வாக்குரிமை வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறோம். இதுபற்றி தற்போது தமிழகத்தில் ஆட்சியில் உள்ள அ.தி.மு.க அரசு, சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசை வலியுறுத்தலாம்.மத்தியில் ஆளும் பி.ஜே.பி. அரசுக்கு தலித் மக்கள் மீது உண்மையிலேயே அக்கறை இருக்குமானால், அந்த மக்களுக்கு இரட்டை வாக்குரிமையை வழங்க முன்வர வேண்டும் அனைத்துக் கட்சிகளிலும் உள்ள தலித் தலைவர்களை அழைத்து, மாநில அளவில் மாநாடு நடத்தி, இதுபற்றி விவாதித்து அறிக்கை அனுப்பலாம்னு இருக்கோம். இரட்டை வாக்குரிமை மட்டுமே தலித் மக்களின் இருண்ட வாழ்க்கையில் நிரந்தர வெளிச்சத்தை தரும்” என்றார் அழுத்தமாக!


டிரெண்டிங் @ விகடன்