“இனி இவங்களுக்கு மட்டும்தான் ரேஷன் பொருள்கள்..!” சொல்கிறது தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு விதிகள் | "Rice products are only for them" says Tamil Nadu Food Security

வெளியிடப்பட்ட நேரம்: 10:09 (31/07/2017)

கடைசி தொடர்பு:10:36 (31/07/2017)

“இனி இவங்களுக்கு மட்டும்தான் ரேஷன் பொருள்கள்..!” சொல்கிறது தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு விதிகள்

ரேஷன் பொருட்கள்

தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தை 2013-ம் ஆண்டு மத்திய அரசு கொண்டுவந்தது. இந்தச் சட்டத்தை கடந்த ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்து தமிழக அரசும் ஏற்றுக்கொண்டுவிட்டது. இதன் அடிப்படையில்தான் பொதுவிநியோகத் திட்டம் தொடர்பான அனைத்து அடிப்படை விவரங்களையும் www.tnpds.gov.in என்ற இணையதளத்தில் இப்போது பதிவேற்றம் செய்து வருகிறார்கள். குடும்ப உறுப்பினர்களின் ஆதார் விபரம் ஒவ்வொரு குடும்ப அட்டையிலும் இணைக்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக ஸ்மார்ட் கார்டுகளும் கொடுக்கப்படுகிறது. இந்நிலையில், தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை அமல்படுத்தும் வகையில், 'தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு விதிகள், 2017' என்பதை தமிழக அரசு வகுத்துள்ளது. அதாவது, நாட்டில் வறுமையில் வாடும் மக்களுக்கு நியாய விலைக் கடைப் பொருள்களை வழங்குவதில் முன்னுரிமை அளிக்க வகை செய்யப்பட்டுள்ளது. இந்த முன்னுரிமை அடிப்படையில் பொருள்கள் வாங்கும் குடும்பங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதன் விவரம் வருமாறு:

நகர்ப் பகுதிகளில் (For Urban Areas) கீழ்க்கண்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் பொருள்கள் வழங்கப்படும். ‘அனைத்து அந்தியோதயா அன்னயோஜனா குடும்பங்கள், அன்னபூர்ணா திட்ட பயனாளிகளை உறுப்பினர்களாகக் கொண்ட குடும்பங்கள், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிடம் உள்ள அனைத்து வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பங்கள், முதியோர் உதவித் தொகை திட்டப் பயனாளிகள் போன்ற இதர நலத்திட்டப் பயனாளிகள், விதவை மற்றும் திருமணமாகாத பெண்மணியைக் குடும்பத் தலைவராகக் கொண்ட அனைத்துத் குடும்பங்கள், மாற்றுத்திறனாளிகளை (40 விழுக்காட்டுக்கும் மிகுதியாக உடல் ஊனம் இருக்க வேண்டும்) குடும்பத்தலைவர்களாகக் கொண்ட குடும்பங்கள், குடிசைப்பகுதியில் வசிப்பவர்கள், இடம் பெயர்ந்தவர்கள், வீடு இல்லாதவர்கள், வேலைத்திறன் குறைந்த குப்பை எடுப்பவர்கள், திறனில்லா தொழிலாளிகள் மற்றும் இதர அரசு நலத்திட்டங்களின் கீழ் பயன்பெறும் ஏழை பயனாளிகள்' ஆகியோர் இந்தப் பட்டியலில் இடம்பெறுகிறார்கள்.

ரேஷன் கடை

கிராமப்புற (For Rural Areas) பகுதிகளைப் பொருத்தவரையில், 'அனைத்து அந்தியோதயா அன்னயோஜனா குடும்பங்கள், அன்னபூர்ணா திட்ட பயனாளிகளை உறுப்பினர்களாகக் கொண்ட குடும்பங்கள், கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளிடம் உள்ள அனைத்து வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பங்கள், முதியோர் உதவித் தொகை திட்டப் பயனாளிகள் போன்ற இதர நலத்திட்ட பயனாளிகள், விதவை மற்றும் திருமணமாகாத பெண்மணியைத் குடும்பத் தலைவராகக்கொண்ட அனைத்துக் குடும்பங்கள், மாற்றுத்திறனாளிகளை (40 விழுக்காட்டுக்கும் மிகுதியாக உடல் ஊனம் இருக்க வேண்டும்) குடும்பத் தலைவர்களாகக் கொண்ட குடும்பங்கள், விவசாயக் கூலித் தொழிலாளர்களைக் கொண்ட குடும்பங்கள், மக்கள் நிலை ஆய்வின் (Participatory Identification of poor) கீழ்க் கண்டறியப்பட்ட பாதிக்கப்பட்ட ஏழை குடும்பங்கள் ஆகியவை இந்தப் பட்டியலுக்குள் வருகின்றன.

நியாயவிலைக் கடைகளில், இதுவரை ரேஷன் பொருள்களை வாங்கிக் கொண்டிருக்கும் குடும்பங்களை நீக்குதலுக்கான (Criteria for Exclusion) அடிப்படை விதிகளும் வகுக்கப்பட்டுள்ளன. இதன்படி, 'வருமான வரி செலுத்தும் நபரை (குறைந்தது ஒருவர்) உறுப்பினராகக் கொண்ட குடும்பங்கள், தொழில்வரி செலுத்துபவர்களை உறுப்பினராகக் கொண்ட குடும்பங்கள், பெரு விவசாயிகள் (5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்துள்ளவர்கள்) என வகைப்படுத்தப்பட்ட குடும்பங்கள், மத்திய /மாநில உள்ளாட்சி அமைப்புகள்/ மாநகராட்சிகள் / மத்திய/மாநில தன்னாட்சி அமைப்புகள் ஆகியவற்றில் பணிபுரிபவர்கள் மற்றும் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களை உறுப்பினர்களாகக் கொண்ட குடும்பங்கள், 4 சக்கர மோட்டார் வாகனத்தை வைத்துள்ள குடும்பங்கள் (தினசரி வாழ்வாதாரத்துக்காக ஒரேயொரு வாகனத்தை வணிக பயன்பாட்டுக்குப் பயன்படுத்திவரும் குடும்பங்கள் நீங்கலாக),  குளிர்சாதன கருவி வைத்துள்ள குடும்பங்கள், 3 அல்லது அதற்கு மேற்பட்ட அறைகளைக் கொண்ட தின்காரை மேற்கூரை மற்றும் சுவர்களைக் கொண்ட வீடுகள், பல்வேறு சட்டங்களின் கீழ் வணிக நிறுவனங்களைப் பதிவு செய்து தொழில் செய்துவரும் குடும்பங்கள், அனைத்து ஆதாரங்களிலிருந்தும் பெறப்படும் ஆண்டு வருமானம் ரூபாய் ஒரு லட்சத்துக்கும் அதிகமாக உள்ள குடும்பங்கள்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்