வெளியிடப்பட்ட நேரம்: 16:15 (30/07/2017)

கடைசி தொடர்பு:16:15 (30/07/2017)

தாமிரபரணி ஆற்றுப் போராளி நயினார் குலசேகரன் காலமானார்

தாமிரபரணி ஆற்றைக் காக்க பல்வேறு போராட்டங்களைத் முன்னெடுத்த 'தாமிபரபரணி போராளி' தூத்துக்குடி மாவட்டம் நட்டாத்தி கிராமத்தைச் சேர்ந்த நயினார் குலசேகரன் உடல் நலக்குறைவால் காலமானார்.

nainar kulasekaran

ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டமாக இருந்தபோதே காங்கிரஸ் கட்சியின் மாவட்டச் செயலாளராக இருந்த நயினார் குலசேகரன், காங்கிரஸ் கட்சி ஆளும் கட்சியாக இருந்த போதே விவசாயிகளுக்கு ஆதரவாகப் போராட்டம் நடத்தி சிறைக்குச் சென்றவர். சிறுவயதில் தொடங்கி விவசாயிகள் போராட்டம், தாமிரபரணியிலிருந்து தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் எடுக்கத் தடை, மணல் அள்ள எதிர்ப்பு, தாமிரபரணி மாசைக் குறைக்க நடவடிக்கை என பல போராட்டங்களை நடத்தியவர்.  தாமிரபரணி ஆற்றிலில்  மணல் அள்ளக்கூடாது என்று பல முறை போராட்டம் நடத்தி பலனில்லாததால், நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து 5 ஆண்டுகள் தாமிரபரணியிலிருந்து மணல் அள்ள தடையாணை தீர்ப்பை பெற்றுத் தந்தவர்களில் குலசேகரனும் ஒருவர் ஆவார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீ வைகுண்டம் சுற்று வட்டார தாமிரபரணி ஆற்றுப் பாசன விவசாயிகளுக்கு எந்த பிரச்னை என்றாலும் முதலில் விவசாயிகள் தேடி ஓடி வருவது நயினார் குலசேகரனைத்தான்.

உடனே சம்மந்தப்பட்ட அதிகாரியிடம் மனு அளித்து குறிப்பிட்ட நாளுக்குள் திருப்தியான தீர்வு கிடைக்காவிட்டால் அடுத்த கட்டமாக போராட்டம், ஆர்ப்பாட்டம், நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தல் என நீளும் இவரது அடுத்தடுத்தகட்ட நடவடிக்கைகள்.  ஒவ்வொரு வாரம் திங்களன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்திலும், விவசாயிகள் குறைதீர் கூட்டத்திலும் இவரை ஆட்சியர் அலுவலகத்தில் காண முடியும். இதுவரை விவசாயப் பிரச்னைகளுக்காக போராட்டம் நடத்தி 10 முறை கைதாகி சிறைக்குச்  சென்று வந்தவர்.

தாமிரபரணி ஆற்றை பாதுகாக்க "தாமிரபரணி நதிநீர் பேரவை" என்ற அமைப்பை நிறுவி  விவசாயிகளை ஒருங்கிணைத்து இவர் நடத்திய போராட்டங்கள் எண்ணற்றவை. 94 வயது வரை போராடி வந்த குலசேகரன் கடந்த சில மாதங்களாகவே உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து, இன்று அவர் காலமானார்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க