கலாம் நினைவிடத்தில் பைபிள், குரான்: கலாமின் பேரன் மீது இந்து மக்கள் கட்சி புகார்!

சர்ச்சைகுள்ளாகி வரும் பகவத் கீதை விவகாரத்தால் அப்துல் கலாம் நினைவிடம் பரபரப்புக்குள்ளாகி உள்ளது. கலாமின் பேரன் சலீம் மீது இந்து மக்கள் கட்சி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

மறைந்த முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் தேசிய  நினைவு மண்டபம் கடந்த 27-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியினால் திறந்து வைக்கப்பட்டது . இந்த மண்டபத்தினுள்  அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் ஓவியங்கள், புகைப்படங்கள், அவர் கண்டுபிடித்த ஏவுகணை  மாதிரிகள், கலாம் பயன்படுத்திய பொருள்கள், படித்த புத்தகங்களுடன்  கலாம் வீணை வாசிக்கும் நிலையில் உள்ள வெண்கல சிலையும் அமைக்கப்பட்டுள்ளது. 

இந்த சிலையின் அருகில் வெண்கலத்தில் வார்க்கப்பட்ட பகவத் கீதை புத்தக மாதிரியும் வைக்கப்பட்டுள்ளது. இந்துத்துவாவை  வலியுறுத்தும் பகவத் கீதை புத்தக மாதிரி வைக்கப்பட்டதற்கு வைகோ, ஸ்டாலின், முத்தரசன், ஜி.கே.வாசன் உள்ளிட்டத் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

கலாம் நினைவிடத்தில் பகவத் கீதையுடன் உள்ள சிலை

 

இந்த நிலையில் இன்று காலை கலாம் நினைவிடத்திற்குச் சென்ற அவரது பேரன் சலீம், கலாமின் சிலை அருகே பகவத் கீதையுடன் பைபிள் மற்றும் திருக்குரான் ஆகியவற்றை வைத்தார். சிறிது நேரம் மட்டும் அங்கே வைக்கப்பட்டிருந்த குரானும், பைபிளும் பின்னர் கலாமின் சிலைக்கு  அருகில் இருந்த கண்ணாடி பேழைக்குள் வைக்கப்பட்டது. பாதுகாப்பு காரணங்களுக்காக இவை கண்ணாடி பேழையில் வைக்கப்பட்டதாக சலீம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் கலாம் நினைவிடத்தில் பைபிளும், குரானும் வைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த இந்து மக்கள் கட்சியினர் கலாம் நினைவிடத்தின் முன் போராட்டம் நடத்தச் சென்றனர். இதனிடையே, கலாமின் சிலை அருகே இருந்த குரான் மற்றும் பைபிள் எடுக்கப்பட்டதை அறிந்த அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதன் பின்னர் குரான் மற்றும் பைபிளை கலாம் நினைவிடத்தில் வைத்த சலீம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இந்து மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவர் பிரபாகரன் தங்கச்சிமடம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். 

கலாம் பேரன் மீது இந்து மக்கள் கட்சி புகார்
 

புகாரை பெற்று கொண்ட தங்கச்சிமடம் போலீஸார். ''கலாம் நினைவிடம் முழுமையும் பாதுகாப்பு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதால் அவர்களது கருத்தினை அறிந்த பின் புகார் மீது நடவடிக்கை எடுப்பதாக'' தெரிவித்ததை தொடர்ந்து இந்து மக்கள் கட்சியினர் கலைந்து சென்றனர். அடுத்தடுத்து நடந்து வரும் இந்த சம்பவங்களால் கலாம் நினைவிடம் பரபரப்பாகவே உள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!