வெளியிடப்பட்ட நேரம்: 19:59 (30/07/2017)

கடைசி தொடர்பு:19:59 (30/07/2017)

குற்றாலத்தில் தண்ணீர் இல்லாததால் படகுப் போட்டி ரத்து... சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்!

மெயின் அருவி

குற்றாலத்தில் தற்போது சாரல் திருவிழா நடைபெற்று வருகிறது. இன்று படகுப் போட்டி நடைபெற இருந்த நிலையில், தண்ணீர் இல்லாததால் படகுப் போட்டி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் ஜூன் மாதம் தொடங்கிய சீசன் போதிய மழை இல்லாததால் மந்த நிலையிலேயே நீடித்து வருகிறது. பழைய குற்றாலம், புலி அருவி ஆகியவற்றில் தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடக்கின்றன. ஐந்தருவியில் இரு பிரிவுகளில் மட்டுமே தண்ணீர் விழுகிறது. ஞாயிற்றுக் கிழமையான இன்று கூட்டம் அதிகமாக இருந்ததால் நீண்ட வரிசையில் காத்திருந்து குளிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. அருவிப் பகுதியையும் கடந்து வாகனங்கள் நிறுத்தும் இடம் வரையிலும் நீண்ட வரிசை இருந்ததால் ஓரிரு மணி நேர காத்திருப்புக்குப் பின்னரே குளிக்க முடிந்ததால் பயணிகள் அதிருப்தி அடைந்தனர். 

ஐந்தருவி

குற்றாலத்தின் மெயின் அருவிலும் தண்ணீர் குறைவாகவே விழுந்து வருகிறது. பாறையை வழுக்கிக் கொண்டு வரக்கூடிய சொற்பத் தண்ணீரில் தலையை நனைக்கக் கூட்டம் அலைமோதுவதால்,  அங்கும் நீண்ட வரிசையில் காத்திருந்தே சுற்றுலாப் பயணிகள் குளிக்க வேண்டிய நிலைமை உள்ளது. பகல் முழுவதும் வெயில் வாட்டி எடுத்ததால், இதமான சீதோஷ்ணநிலையைத் தேடி வந்திருந்த பயணிகள் அவதிக்கு உள்ளாகினர். 

படகுக் குழாம்

தமிழக அரசின் சார்பாக கடந்த 27-ம் தேதி சாரல் திருவிழா தொடங்கப்பட்டது. நாள்தோறும் கரகாட்டம், ஒயிலாட்டம், கிராமிய நடனங்கள், இசைக்கச்சேரி என நிகழ்ச்சிகள் களைகட்டி வருகின்றன. அத்துடன் சுற்றுலாப் பயணிகளை ஊக்குவிக்கும் வகையில் வில் வித்தை, யோகா, மினி மாரத்தான், நீச்சல் என பல்வேறு பிரிவுகளில் நாள்தோறும் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இன்று படகுக் குழாமில் படகுப் போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

படகுக் குழாம் அமைந்துள்ள வெண்ணமடைக் குளத்துக்கு தண்ணீர் வராததால் இந்த ஆண்டு காலதாமதமாக கடந்த 5-ம் தேதி தான் படகு சவாரி தொடங்கப்பட்டது. அதன்பின்னர், மழை இல்லாததால் குளத்திற்கு நீர் வரத்து இருக்கவில்லை. அதனால் இன்று திட்டமிட்டபடி படகுப் போட்டிகளை நடத்துவதில் சிரமம் ஏற்பட்டது. அதனால் போட்டி ரத்து செய்யப்படுவதாக கடைசி நேரத்தில் அறிவிக்கப்பட்டது. படகுப் போட்டியில் பங்கேற்க வருகை தந்த பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.