Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

"மூன்றாம் பிறை" க்ளைமாக்ஸ் கமல்ஹாசனுக்கு மட்டும் அல்ல அமைச்சரே!

KAMAL, மூன்றாம் பிறை

தமிழக அமைச்சர்களுடன் 'பிக்பாஸ்' விளையாடிக்கொண்டிருக்கிறார் நடிகர் கமல்ஹாசன். ஒரு சின்ன வித்தியாசம்... ஸ்பெஷல் கேமராக்கள் மாறியிருக்கின்றன. ஒரு குறிப்பிட்ட சேனலுக்கு மட்டும் சொந்தமில்லாமல், பல சேனல்களும் ஒளிபரப்பு குத்தகையை எடுத்துள்ளன. தினம்தினம் கமல்ஹாசன் - தமிழக அமைச்சர்களிடையே தொடுக்கப்பட்டு வரும் வார்த்தைக் கணைகளில் விஷத்தன்மை அதிகரித்துக் கொண்டேயிருக்கின்றன.  சமீபத்தில், எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றபோது செய்தியாளர்களிடம் பேசிய நிதியமைச்சர் ஜெயக்குமார், “எத்தனை கமல்ஹாசன், எத்தனை ஸ்டாலின் வந்தாலும் எங்கள் அரசை கவிழ்க்க முடியாது. நடிகர் கமல்ஹாசன் இப்படியே பேசிக்கொண்டிருப்பது நல்லதல்ல. இது இப்படியே தொடர்ந்தால், ‘மூன்றாம் பிறை’ படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் வரும் கமல்ஹாசனைப் போல ஆகிவிடுவார்” என நக்கலடித்தார். அமைச்சர் ஜெயக்குமாரின் இந்தப் பேச்சு பல மட்டத்திலும் எதிர்ப்புகளையே சம்பாதித்தது. 

அது என்ன 'மூன்றாம் பிறை' க்ளைமாக்ஸ்?

இயக்குநர் பாலு மகேந்திரா - கமல்ஹாசன் நிகழ்த்திக்காட்டிய மேஜிக் அது. 1 மணி நேரம் 43 நிமிடங்கள் ஓடக்கூடிய அப்படத்தில், மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணாகவே வாழ்ந்த ஶ்ரீதேவிக்குக்கூட தேசிய விருது கிடைக்கவில்லை. கடைசி ஏழு நிமிடக் காட்சி மொத்தத்தையும் ஒரு அக்மார்க் கலைஞனாக திருடிச்சென்ற கமல்ஹாசன் தேசிய விருது பெற்றார். படத்தில் மனநலம் பாதிக்கப்பட்டிருந்தபோது ஶ்ரீதேவி செய்த சேஷ்டைகளை, ‘விஜி… சீனு விஜி’ எனப் பரிதவிப்புடன் கமல் நடித்துக்காட்ட, ‘பாவம் பைத்தியம் போல’ என்று சாப்பாட்டுப் பொட்டலத்தைக் கொடுத்து கமலுக்கு அதிர்ச்சி அளிப்பார் ஶ்ரீதேவி. ரயிலுக்குள் அமர்ந்திருக்கும் ஶ்ரீதேவியின் பழைய நினைவுகளைத் திரும்பவைப்பதற்காக குரங்கு லீலை, பானை விளையாட்டு என நடித்துக்காட்டியபடியே சென்று இறுதியில், இரும்புக் கம்பியில் மோதி கீழே விழுவார். தன்னைக் கடந்து செல்லும் ரயிலையே இயலாமையோடு பார்த்துக்கொண்டு நிற்பார் கமல். இறுதியாக ‘கேத்தி’ ரயில் நிலையத்திலிருக்கும் பழைய இரும்புச் சேரில் எதுவுமே புலப்படாத ‘சீனு’வாக வெறித்துப் பார்த்தபடி உட்கார்ந்துவிடுவார் அவர். இதுதான் ‘மூன்றாம் பிறை’ க்ளைமாக்ஸ். இதை அமைச்சர் ஜெயக்குமார் எப்படி எடுத்துக்கொண்டிருப்பார் என்ற திறனாய்வு செய்யவேண்டிய அவசியம் இல்லை. அவர் வெளிப்படுத்திய வார்த்தைகளிலேயே அதற்கான அர்த்தம் ஒளிந்திருக்கிறது.     

மூன்றாம் பிறை, kamal

அ.தி.மு.க - கமல்ஹாசன் லடாய் :

தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது, அரசு மீதான தன் விமர்சனங்களை இத்தனை அழுத்தமாக முன்வைக்கவில்லை கமல்ஹாசன். திரைப்பட நிகழ்ச்சிகளில்கூட முதலமைச்சரின் வலம் - இடம் பிரதேசங்களை அலங்கரிக்கும் நட்சத்திரங்களாகவே இருந்தனர் கமல்ஹாசனும் - ரஜினிகாந்தும். ‘விஸ்வரூபம்’ திரைப்பட பிரச்னையின்போதுதான் கமல் பற்றிச் சில வார்த்தைகளை உகுத்தார் ஜெயலலிதா. அதுவும்கூட ‘விஸ்வரூபம்’ பட விவகாரத்தில் கமலுக்கு ஆதரவாக வெளியான கருணாநிதியின் அறிக்கைக்குப் பின்புதான். அப்போதும்கூட, ‘நாட்டை விட்டுப்போகிறேன்’ எனக் கூறினாரே தவிர, இப்போது ட்விட்டரில் பதிவிட்டிருப்பது போல், 'முடிவெடுத்தால் யாம் முதல்வர்' என்பது போல் சீறவில்லை கமல். ஆனால், சமீபமாக தனது எதிர்ப்புகளை பலமாகப் பதிவு செய்து வருகிறார் அவர். 

குறிப்பாக, ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது தொடர்ந்து ட்விட்டரில் கருத்துகளைப் பதிவிட்டு வந்த கமல்ஹாசனுக்கு, சுப்பிரமணியன் சுவாமியுடன் முதல் மோதல் வெடித்தது. பின்னர், 'சிஸ்டம் கெட்டுப்போயிருக்கே...' என்ற ரஜினியின் பேச்சுக்கு ஆதரவு தெரிவித்த கமல், ஒருகட்டத்தில் நேரடியாகவே தமிழக அரசை வறுத்தெடுக்க ஆரம்பித்தார். அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி, கே.பி.அன்பழகன் என அமைச்சரவையே கமல்ஹாசனை குறிவைத்தது. “தமிழக அரசு பற்றி ஆதாரம் இல்லாமல் கமல்ஹாசன் பேசுவதை அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது. உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" எனக் கொதித்து விட்டார் அமைச்சர் கடம்பூர் ராஜூ. ‘அமைச்சர்கள் கண்ணியத்துடன் கமலுக்குப் பதில் அளிக்க வேண்டும்’ என இடையே திகில் கிளப்பினார் டி.டி.வி.தினகரன். 

kamal, மூன்றாம் பிறை

இதுபோன்ற சச்சரவுகளுக்கு நடுவில்தான் அமைச்சர் ஜெயக்குமார் அடித்த, 'மூன்றாம் பிறை க்ளைமாக்ஸ்' கமென்ட் பிரச்னையைக் கிளப்பியுள்ளது. அரசை எதிர்த்து தொடர்ந்து கேள்வி கேட்பவர்களுக்கு இங்கு வெளிப்படையாகவே ஓர் அச்சுறுத்தல் வட்டம் இப்போது உருவாக்கப்பட்டுள்ளது. கல்லூரி காலத்தில் போராட்டம் செய்தார் எனக் ‘கக்கூஸ்’ ஆவணப்பட இயக்குநர் திவ்யாவை சிறைக்குள் தள்ளுகிறார்கள், நினைவேந்தல் நடத்தினார் என திருமுருகன் காந்தி மீதும், நக்சல் பிரிவுக்கு ஆள் சேர்த்தார் என மாணவி வளர்மதி மீதும் குண்டாஸ் பாய்கிறது. முன்பைவிட அரசு அடக்குமுறைகளில், வடஇந்திய வாசம் சற்றுத் தூக்கலாகவே தெரிகிறது. 

பேராசிரியர் ஜெயராமன், திருமுருகன் காந்தி, வளர்மதி, திவ்யா போன்றவர்கள் போராட்டக்களத்தில் கமல்ஹாசனுக்கு வாத்தியார்கள். கமல்ஹாசன் 'நடிகர்' என்பதால், இவர்மீது அதிகம் கவனத்தைக் குவிக்கிறது அரசு... அவ்வளவுதான். ‘இதுவரை கேட்கவில்லை... இப்போது ஏன் கேட்கிறார்’ என்பது போன்ற சாக்குகளுக்கு அதிகாரத்தில் இருப்பவர்கள் விடை கொடுக்க வேண்டும். இங்கு நடக்கும் ஒவ்வொரு பிரச்னைக்கும் ஒரு தீர்க்கமான பதிலை கமல் மட்டும் அல்ல... தமிழகத்தில் பலரும் அரசிடமிருந்து எதிர்நோக்கியிருக்கிறார்கள். அனைத்தையும் மீறி அரசின் தற்போதைய நிலையே தொடருமேயானால், 'மூன்றாம் பிறை' க்ளைமாக்ஸ் காட்சியில் வரும் கமலின் நிலைமைதான் தமிழக மக்களுக்கும்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement