செந்தில் பாலாஜி தம்பியின் கார் டிரைவர் கைதால் கரூர் அ.தி.மு.க-வில் மீண்டும் சலசலப்பு!

கரூர் மாவட்ட அ.தி.மு.க-வில் அமைச்சர் எம்.ஆர்.விஜய பாஸ்கருக்கும் அரவக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ. செந்தில் பாலாஜிக்கும் இடையிலான பிரச்னை மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.


 

ஏற்கெனவே, கரூர் மாவட்டத்தில் 'மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை யார் சொல்லும் இடத்தில் அமைப்பது' என்று குழாயடிச் சண்டை ரேஞ்சுக்கு இருவரும் மீசையை முறுக்கினர். அதனால், அந்தத் திட்டமே கிடப்பில் கிடக்கிறது. அடுத்து, 'தனது தொகுதியில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு, கடந்த இரண்டு வருடங்களாக இலவச சைக்கிள் வழங்காமல் இழுத்தடிக்கிறார்' என்று செந்தில்பாலாஜி அதிரிபுதிரி கிளப்பிவந்தார். ஒருவழியாக,  கலெக்டரோடு போய் சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சியை நடத்த, "எனது தொகுதியில் என்னை அழைக்காமல் எப்படி சைக்கிள் வழங்கலாம்" என்று தடாலடி பேட்டிக் கொடுத்தார் செந்தில் பாலாஜி. 

இருவருக்கும் உள்ள கோதாவின் அடுத்தகட்டமாக, 'கொலை மிரட்டல் விடுத்தார்' என்று அமைச்சர் தரப்பு கொடுத்த புகாரில், செந்தில்பாலாஜியின் தம்பி அசோக்குமாரின் கார் டிரைவரான பிரபாகரன் என்பவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கரூர் தாந்தோணிமலையைச் சேர்ந்த அ.தி.மு.க பேச்சாளர் கோபி என்பவர், கரூர் டவுன் போலீஸ் ஸ்டேஷனில் ஒரு புகார் கொடுத்தார். அதில்,"பிரபாகரன் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அ.தி.மு.க முக்கிய புள்ளிகளை சமூக வலைதளங்களில் யாழினி பிரபாகரன் என்ற பெயரில் ஆபாசமாக சித்தரித்து பதிவிட்டு வருவதாகவும், ஏன் இப்படி அவதூறு பரப்புகிறாய் என்று கேட்டதற்கு,'அப்படித்தான் பண்ணுவேன், தடுத்தால் கொலை செய்துவிடுவேன் என மிரட்டுகிறார்'' என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த புகாரின் பேரில்,கரூர் டவுன் போலீஸார் பிரபாகரனை கைது செய்தனர்.

இதற்கிடையில், ''பிரபாகரன் மீது புகார் கொடுத்த கோபி, அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் நெருங்கிய உறவினர். அவர், அமைச்சரான பிறகுதான் கோபி அ.தி.மு.க.வுக்கு வந்தார். அதற்கு முன்பு, தி.மு.க-வில் இருந்தார். அப்போது, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை கடுமையாக விமர்சனம் செய்தவர். அதைப் பற்றி எங்கள் அண்ணன் கொடுத்த வழக்கில் கோபியை இன்னும் கைதுசெய்யலை. ஆனால்,இல்லாத புகாரை காரணமாகச் சொல்லி, பிரபாகரனைக் கைதுசெய்திருப்பது கண்டிக்கத்தக்கது" என்று செந்தில்பாலாஜி தரப்பு உரக்க முழங்கத் தொடங்கியிருக்கிறது. 'இன்னாள் அமைச்சர் மற்றும் முன்னாள் அமைச்சர்களுக்கு இடையிலான யுத்தத்தின் அடுத்த எபிஸோடு என்னவாக இருக்கும்' என்று யோசிக்கத் தொடங்கியிருக்கிறார்கள் கரூர் மாவட்ட அ.தி.மு.க-வினர்.
 
  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!